சீமராஜா
விளையாட்டுப் பிள்ளையாய் திரிந்த சீமராஜா விவசாயியின் வாழ்வாதாரங்களை நசுக்க முயன்றவர்களை வேரறுக்க புறப்படுவதே ‘சீமராஜா’. மன்னர் குலத்தின் கடைசி வாரிசாக இருந்தும் பொறுப்பில்லாமல் திரியும் உதார் பார்ட்டி சிவகார்த்திகேயன். சாரட்டு வண்டியில் பவனி வரும் அவர், எதிரியின் மகள் சமந்தாவையே காதலிக்கிறார். இதற்கிடையில் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்கும் முயற்சியை முழுவீச்சில் எதிர்க்கிறார். அதைத் தடுக்கப்போன சிவாவின் அப்பா நெப்போலியன் அவமானத்தில் நெஞ்சடைத்து சாகிறார்.
அவ்வளவுதான். குறும்புத்தனம் விடை பெற, அசுரவேகத்தில் எழுந்து நின்று அநீதிகளுக்கு எதிராகப் போர் தொடுக்கிறார் சிவா. காதல் நிறைவேறியதா, உடன் விவசாயிகள் வாழ்வு செழித்ததா... என்பதே மீதி. சிவகார்த்திகேயனை ஓர் இடத்தில் கொண்டுவந்து வைக்க வேண்டும் என்ற கவனத்தில் செய்யப்பட்ட கதை. கொஞ்சம் காமெடியைக் கட்டுக்குள் நிறுத்தி முழுக்கோட்டாவில் ஹீரோயிசத்தை வைத்துவிட்டார்கள். மனுஷன் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
விட்டேத்தி பையனுக்கான சர்வ அலட்சியங்களும் கொட்டிக்கிடக்கிற நடையும், அலம்பலும், சலம்பலும் ஆஹா! மாறு வேடத்தில் நாயை சிறுத்தையாக்கி புறப்படும் வேட்டையில் அட்டகாசம். கொஞ்சம் சுருட்டிய மீசையில் பழைய மன்னராக இதுவரை காணாத கம்பீரம். விவசாயிகளுக்கு ஆதரவாக வெடிக்கும் காட்சிகளில் ரியாக்ஷன்களை அநாயாசமாகத் தருகிறார். காதல் கிளி சமந்தா, ஓரக்கண் பார்வையாலேயே சிவாவுடன் சேர்ந்து நம்மையும் வசீகரிக்கிறார். அழகும், பொலிவும் ததும்ப, ஒல்லி சமந்தாவின் நடிப்பும் பொருத்தம்.
சிவாவின் பக்கவாத்தியமாகத் தொடர்ந்து வார்த்தை சுழற்றுகிறார் சூரி. ‘வ.வா.சங்கத்’திற்கு மாற்றுக்குறைவாக இருந்தாலும், அவரே பெரும் ஆறுதல். சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும்போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார். கிளாமராக வலம் வந்த சிம்ரனை இப்படிப் பார்க்கும்போது சங்கடமாக இருக்கிறது. நடிகர் லால் போடும் சண்டையில் காது கிழிபடுகிறது. நெப்போலியன் நல்ல உயரத்தில் வந்துவிட்டுப் போகிறார். அவ்வளவே. கொஞ்ச நேரமே வந்தாலும் கீர்த்தி சுரேஷ் இதம் - பதம்.
ஊரோ, தெருவோ, பதற்றமோ, பாடலோ, ஆக்ஷனோ, எதிலும் உறுத்தாத ஒளிப்பதிவில் மகா அழகியல். வெல்கம் பாலசுப்பிரமணியெம். ‘ஊதா கலரு ரிப்பன்...’ அளவுக்கு இல்லையென்றாலும் காதுக்குக் குளிரூட்டுகின்றன யுகபாரதியின் பாடல் வரிகள். பின்னணியில் அசுர வேகம் காட்டுகிறார் இமான். பாடல்கள் நன்றாகவே இருந்தாலும், பழகிய ட்யூன்களுக்கு இனியாவது அவர் விடை கொடுக்கலாம். ஆக்ஷனுக்கு அதிகம் இடம் விட்டு, காமெடியின் அளவைக் குறைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். அன்லிமி டெட் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு காமெடியில் அளவுச்சாப்பாடே கிடைக்கிறது. ஆக்ஷனில், காமெடியில் ரசிக்க வைக்கிறார் ‘சீமராஜா’.
- குங்குமம் விமர்சனக்குழு
|