பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்..?
‘‘மாப்பிளைக்கு என்ன செய்வீங்க?”“பைக் வாங்கிக் கொடுத்துடறோம்!” “பைக் எல்லாம் வேண்டாம். அது எங்ககிட்டயே இருக்கு. அதுக்கு பதிலா அடுத்த ஒரு வருஷத்துக்கு பெட்ரோல் போட வழி செஞ்சிருங்க..!”“என்ன சம்பந்தி, ஏதோ சின்னதா கேட்பீங்கன்னு பார்த்தா இவ்வளவு பெருசா கேட்கறீங்க..?” மேற்சொன்னது ஒரு வாட்ஸ்அப் மெஸேஜ். இதைப்போல ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள், நையாண்டிகள், பகடிகள் பெட்ரோல் விலை உயர்வினை முன்வைத்து உருவாகி இருக்கின்றன. பெட்ரோல் / டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து விட்டது. மும்பை மாதிரியான பெருநகரங்களின் சுற்றுப்புறங்களில் இப்போதே ஒரு லிட்டர் ரூ.90 வரை சென்றுவிட்டது.
கூடிய விரைவில் ரூ.100ஐத் தொடலாம் என்கிறார்கள். என்னதான் நடக்கிறது பெட்ரோலில்? இந்தியா ஒரு எரிபொருள் இறக்குமதி நாடு. நம் எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட 80%க்கு மேலாக நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அதை அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்றவை தங்களுடைய டீலர் நெட்வொர்க்கின் மூலம் மக்களுக்குத் தருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தினம் மாறும். அதற்கு ஏற்றாற்போல நுகர்வோருக்கான விலை அன்றாடம் நிர்ணயிக்கப்படுகிறது.
சில காலத்துக்கு முன்பு வரை இது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது. இப்போது தினமும் மாறும் அளவுக்கு பாலிசி விதிகள் மாற்றப்பட்டுள்ளன. 2003 - 2013 காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மெதுவாக ஏறத் தொடங்கியது. 2013 - 14ல் அது உச்சத்துக்கு போனது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 140 அமெரிக்க டாலர்கள் வரை போனது இந்தக் காலத்தில்தான். இதனைத் தொடர்ந்து முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.70ஐத் தொட்டது. இந்த அதீத விலை ஏற்றத்தினைச் சமாளிக்க அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு எரி பொருளுக்கான மானியத்தை அதிகரித்தது.
பெட்ரோலை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான கடன் பத்திரங்களை வழங்கியது. இதன் மூலம் சர்வதேச சந்தையின் விலையேற்றம் பெருமளவு மக்களைப் பாதிக்காமல் காப்பாற்றியது. 2014ல் மத்தியில் ஆட்சி மாறியது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது. பதவியேற்ற ஆறே மாதத்துக்குள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 140 அமெரிக்க டாலர்கள் என்று சொல்லப்பட்ட பீப்பாய், ஒரேயடியாக 40 அமெரிக்க டாலருக்கு வீழ்ந்தது. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலாவணி வெகுவாகக் குறைந்தது. 140 கொடுக்க வேண்டிய இடத்தில் இப்போது 40 கொடுத்தால் போதும்.
ஆனால், அதே பொருள், அதே கொள்ளளவு, அதே எடை, அதே நிறை கிடைக்கும். இதைவிட பெரிய லாபம் என்னவாக இருக்க முடியும்? இது மத்திய அரசுக்கு கிடைத்த எதிர்பாராத லாட்டரி. இதில் மத்திய அரசின் பங்கு எதுவுமே இல்லை. சர்வதேசக் காரணங்களால் இந்த ஜாக்பாட் அடித்தது. ஆனால், லாபத்தின் பங்கினை மக்களுக்கு மத்திய அரசு தரவே இல்லை. விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல் குறைக்கப்படவே இல்லை. சில ரூபாய்கள் மட்டுமே குறைக்கப்பட்டன. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டிசம்பர் 2014 - நவம்பர் 2015 வரையிலான வீழ்ச்சியில் ரூ 1,40,000 கோடிகள் மத்திய அரசிற்கு ‘லாபமாக’ வந்திருக்கும் என்று சொல்கிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2015 - 16; 2016 - 17ல் இவை குறைந்த பட்சம் 2 லட்சம் கோடிகளைத் தாண்டியிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், 5 லட்சம் கோடிகளுக்கு மேலாக மத்திய அரசு இந்த விலை வீழ்ச்சியில் ‘லாபம்’ பார்த்திருக்கிறது. அதில் முன்னாளைய கடன் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தி, ஆயில் சந்தை நிறுவனங்களை லாபத்துக்கு திருப்பி விட்டோம் என்று அறிக்கை விடுகிறது. இது என்னவிதமான ‘மக்கள் சேவை’ என்று புரியவில்லை. 2017 செப்டம்பருக்குப் பின்னால் மீண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற ஆரம்பித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இப்போது அது 80 அமெரிக்க டாலர்கள் அளவில் நிற்கிறது. இந்த விலை ஏற்றத்தினை பட்ஜெட்டில் கணக்கு செய்யாததாலும், அதை சரிவர நிர்வகிக்கத் தெரியாததாலும் அந்தச் சுமை பயனாளிகள் மீது சுமத்தப்படுகிறது. விலை குறைந்த போது அதன் பலனை அனுபவிக்காத நுகர்வோர்கள், விலை ஏறும்போது மட்டும் அந்த சுமையை ஏன் தாங்க வேண்டும் என்பது மக்களின் கேள்வி. இதற்கு அரசிடம் பதில் இல்லை. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் விதமாக பெட்ரோல் / டீசல் மீதான மத்திய அரசின் சுங்க வரியைக் குறைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது
அரசு. அதிகரித்துள்ள விலை ஏற்றத்தால், நம் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும். ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து கீழே இறங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில், நிகழ்காலத்தில் பெட்ரோல் / டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை. பெட்ரோல் / டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் உயரும். இதனால் பண வீக்கம் மேலேறும்.
பண வீக்கம் மேலேறினால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும். எல்லா விலைவாசியும் கூடும். ஏழை, நடுத்தர மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அடுத்த 18 மாதங்களுக்கு இதுதான் நடைமுறையாக இருக்கக் கூடும். இதற்கு முன்பும் இதைப் போன்ற விலையேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது மத்திய அரசு, மக்களின் மீது சுமையினை ஏற்றாமல் மானியத்தைக் கூட்டி இருக்கிறார்கள். மோடி தலைமையிலான அரசு இது வரை அதைச் செய்யவில்லை. இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- செனகா
|