கோமாதா பேப்பர்!



பசுவின் சாணத்தை எரிபொருளாக, உரமாக பயன்படுத்துகிறோம். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் அதனை காகிதம் தயாரிக்க பயன்படுத்தி கவனம் ஈர்த்துள்ளது ராஜஸ்தான் அரசு. அண்மையில் காதி நிறுவனத்தின் துணை நிறுவனமான குமரப்பா தேசிய காகிதக்கழகம், பசுஞ்சாணத்தை பயன்படுத்தி தயாரித்த காகிதத்தை சிறு, குறு நிறுவன அமைச்சர் கிரிராஜ்சிங் வெளியிட்டார். இதன்மூலம் பசுக்களை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவுவதோடு, சாலையில் தேங்கும் சாணக்கழிவுகளும் குறையும் என்பது ராஜஸ்தான் அரசின் நம்பிக்கை. இம்மாநிலத்திலுள்ள 1,160 அங்கீகாரம் பெற்ற பசு காப்பகங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன என்பதால் சாணத்துக்கு பிரச்னையில்லை. பசுவின் சிறுநீரில் தயாராகும் வீடுகளைக் கழுவும் பொருட்களையும் அரசு அங்கு விளம்பரம் செய்து வருகிறது.

பெண்கல்விக்கு பாடுபடும் ஆசிரியர்!

அரியானா மாநிலத்தின் மேவத் நகரில் படிக்கும் மாணவர்களில் 20% பேர் இடையில் நின்றுவிடுவது அவல நிஜம். அங்குள்ள பள்ளியில் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இணைந்த பஸ்ருதீன்கான், உடான் என்னும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி கல்வி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயாரானார். 1993ம் ஆண்டு ஜார்புரி கிராமத்தில் தன் கல்விப்பணியை 20 மாணவர்களுடன் தொடங்கிய பஸ்‌ருதீன்கான், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை 57 ஆக மாற்றிக் காட்டினார்.

பின் சிரோலி கிராம பள்ளிக்கு மாற்றலாகி, 96 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 638 ஆக உயர்த்தி சாதித்தவர், நூறு சதவிகித தேர்ச்சி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். இப்போது தப்பன் நகர நடுநிலைப்பள்ளியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பணியாற்றுகிறார். 25 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் பஸ்‌ருதீன்கான், இதுவரை பள்ளியின் அடிப்படை கட்டமைப்புக்காக என்ஜிஓக்கள் உதவிகோரி ரூ.1.7 கோடி பெற்றுத்தந்துள்ளார். இதற்காக கடந்த ஆசிரியர் தினத்தில் பிரதமரின் பாராட்டையும் நல்லாசிரியர் விருதையும் வென்றுள்ளார்.

மலம் கழித்தால் மரணம்!

மல, ஜலம் திறந்தவெளியில் கழித்தால் உடனடியாக மரணதண்டனை என அறிவித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாக்பத் முனிசிபாலிட்டி நிர்வாகம். நகரில் நிறுவியுள்ள பேனர்களில் திறந்தவெளியில் மலம் கழித்தால் விரைவில் கொல்லப்படுவீர்கள் என மக்களை நேரடியாகவே மிரட்டும் வாசகங்கள் உள்ளன. மக்கள் இதுகுறித்து முனிசிபாலிட்டியிடம் புகார் தெரிவிக்க, பேனர் வாசகங்கள் கிராபிக் டிசைனரால் தயாரிக்கப்பட்டது எனக் கூறியவர்கள் உடனடியாக சர்ச்சை பேனர்களை அகற்றியுள்ளனர். “ஸ்வச் பாரத் திட்டத்துக்காக 45 பேனர்களை பல்வேறு இடங்களில் நிறுவினோம். அதில் சில பேனர்களில் மட்டும் சர்ச்சை வாசகங்கள் கவனக்குறைவால் இடம்பெற்றுவிட்டன. வடிவமைப்பாளரிடம் அது குறித்து விசாரணை செய்து வருகிறோம்...” என்கிறார் முனிசிபாலிட்டி அதிகாரி லலித் ஆர்யா.

தொகுப்பு: ரோனி