கவிதை வனம்
அறியாமை
ஆறு மாதங்கள் கழித்து ஊருக்குப் போவதற்கு பேருந்து நிறுத்தத்தில் நெடுநேரமாய்க் காத்திருக்கும் தேநீர்க்கடைச் சிறுவன் மீது எச்சமிட்டுச் செல்லும் பறவை அறிந்திருக்க வாய்ப்பில்லை அவனுக்கு இன்னொரு நல்ல சட்டை இல்லை என்பதை.
- சௌவி
புகையும் துக்கம்
தேசியக்கவியின் பெயர்கொண்ட தெருவில் மெதுவாகச் செல்லும் நீல நிற ஆம்னியில் வயோதிகரின் சடலம் மாலைகளோடு ஊர்கிறது வண்டியின் பின்னால் நான்கைந்து இரு சக்கர வாகனங்களில் இருவர் மூவர் என ஆழ்ந்த மௌனங்களுடன் பின்தொடர்கிறார்கள் யாருடைய முகங்களிலும் சிறு துக்கமோ வருத்தமோ எட்டிப்பார்க்கும் கண்ணீரோ துளியுமில்லை உருளும் இருசக்கர வாகனங்களின் புகைபோக்கியில் ஊமையாய் கசிந்து கொண்டிருக்கிறது முகமறியா கேவல் ஒன்று.
- வலங்கைமான் நூர்தீன்
|