இது யுவன் சீஸன்யெஸ். இது யூத்ஃபுல் யுவன் சீஸன். அவர் தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டில் சார் ரொம்ப ஹேப்பி. இப்போது மீண்டும் செல்வராகவனுடன் ‘என்ஜிகே’ கூட்டணி, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, தனுஷுடன் ‘மாரி 2’, சத்ய சிவாவுடன் ‘கழுகு 2’ என வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 அட்ராசிட்டி.

இது போக இன்னும் அரைடஜன் படங்களின் இசைக்கோர்ப்பு வேலைகள் என செஞ்சுரி செஞ்சுரியாக அடித்து வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. ‘‘இசைத்துறைக்கு வந்து இருபத்தொரு வருஷங்களாச்சு. ஏற்ற இறக்கங்களை எல்லாம் சந்திச்சாச்சு. எல்லா சூழ்நிலைகளிலும் ரசிகர்கள் என் கூட இருக்காங்க.

நிச்சயமா இது அதிர்ஷ்டம்தான். அப்பா அளவுக்கு இல்லைனாலும் எனக்குன்னும் நிலையான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க. இது இறை அருள். என் வேலை வழியாதான் அவங்களுக்கு நன்றி சொல்ல முடியும். அவங்களுக்காகத்தான் ‘பியார் பிரேமா காதலை’ தயாரிக்கத் தோணுச்சு. அந்தப் படம் ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தோம். ஆனா, இந்தளவுக்கு மெகா ஹிட்டை எதிர்பார்க்கலை!

படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அப்பாவை போய்ப் பார்த்தேன். ‘நல்ல விஷயம். கவனமா பார்த்து பண்ணு’னு ஆசீர்வதிச்சார். அவர் சொன்ன ஒரே அட்வைஸ் இதுதான். படத்தோட ஆடியோ ஃபங்ஷனுக்கு அவர் வந்து சிறப்பிச்சதை மிகப்பெரிய பெருமையா நினைக்கறேன்...’’ நெகிழ்கிறார் யுவன்.

‘காதல் கொண்டேன்’ யுவன் - ‘பி.பி.கா’ யுவன். என்ன வித்தியாசம்?
‘காதல் கொண்டேன்’ டைம்ல அப்ப இருந்த ரசனைக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்தியிருப்பேன். ‘பியார் பிரேமா காதல்’ல இப்ப உள்ள இளைஞர்களுக்கான சவுண்ட்ஸை பயன்படுத்தியிருக்கேன். ஆனா, அப்பவும் இப்பவும் லவ் எமோஷன் ஒண்ணுதான்! ‘எலெக்ட்ரானிக் கருவிகளை விட்டுவிட்டு உண்மையான இசைக் கருவிகளைப் பயன்படுத்தினால்தான் ஆன்மாவை எழுப்ப முடியும்’னு இசைஞானி சொல்லியிருக்காரே..?

அப்பா கரெக்டாதான் சொல்லியிருக்கார். ஒவ்வொரு சவுண்டுக்கும் நம் மூளையின் செல்கள் எப்படி ரியாக்ட் பண்ணுதுனு விஞ்ஞானபூர்வமா இப்ப நிரூபிச்சிருக்காங்க. இசைக்கான மார்க்கெட் கூட அதை நோக்கித்தான் இப்ப போய்கிட்டிருக்கு. ஒரு விஷயம்... படங்கள்தான் எந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தணும்னு தீர்மானிக்குது.   
தயாரிப்பில் அடுத்து..?

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைத் தொடர்ந்தும் படங்கள் புரொட்யூஸ் பண்ற ஐடியா இருக்கு.நாங்க ரிலாக்ஸ் ஆக, இளையராஜா பாடல்கள்தான் கேட்கறோம். நீங்க..?
நானும்தான்! அவர் இசையமைச்ச எல்லாப் பாடல்களும் பிடிக்கும். அதிலும் ‘தென்றல் வந்து தீண்டும்போது...’, ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது...’ ரெண்டுமே என் ஆல் டைம் ஃபேவரிட்.  

உங்க இசையில் சூஃபியின் தாக்கம் இருக்குதுனு சொல்றாங்களே.. ?
நிஜம்தான். ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாருக்குமே ஆன்மீகத் தேடல் நிச்சயம் இருக்கும். புகழ், பணம் எவ்வளவு வந்தாலும் அதெல்லாம் நிரந்தரமில்லைனு புரிஞ்ச பிறகு அரவணைத்து வழிகாட்டுவது ஆன்மிகம்தான். இதுதான் சூஃபி தாக்கமா என் இசைல எதிரொலிக்குதோ என்னவோ?!                                   

மை.பாரதிராஜா