காவிரி வெள்ளத்துக்குக் காரணம் மணல் கொள்ளையே!கடந்த மாதம் காவிரி ஆற்றின் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டோடியது. இன்னொரு பக்கமான தஞ்சை, நாகை, திருவாரூருக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்து சேரவில்லை. இருவேறு சூழல்களைச் சந்தித்து வரும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்க்கை இன்றைக்குக் கேள்விக்குறியாகியுள்ளது.

‘‘இந்த இக்கட்டான நிலைக்கு மணல்கொள்ளை மற்றும் அணை பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியாகப் பயன்படுத்தாததே காரணங்கள்...’’ என்று கறாராக ஆரம்பித்தார் ஐ.வி.நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இவர்.

‘‘மேட்டூர் அணையிலிருந்து சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அணைக்குக் கீழே உள்ள தடுப்பணைகள் நான்கும் (கரூர் மாயனூர் தடுப்பணை, திருச்சி முக்கொம்பு தடுப்பணை, தஞ்சை கல்லணை தடுப்பணை, அணைக்கரை தடுப்பணை) நீரைப் பிரித்து அனுப்பும் பணியை மட்டுமே செய்கின்றன.

இதில் உபரி நீரைத் தேக்கி வைக்க முடியாது. இந்த தடுப்பணைகளைப் பராமரிக்க பல கோடி ரூபாய் அளவுக்கு மக்களுடைய வரிப்பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவை முறையாக செலவிடப்பட்டதா என்பது கேள்விக்குறியே...’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘மேட்டூரில் திறந்துவிடப்பட்ட நீரால் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 200 ஆண்டுகள் பழமையான இந்த முக்கொம்பு தடுப்பணைக்கு எந்த சேதமும் இதற்குமுன் ஏற்பட்டதில்லை. கல்லணையை 2 ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து நின்றதில் மணல்திட்டுகளுக்கு பெரும்பங்கு உண்டு.

இந்த மதகுகள் உடைந்ததற்கு ஆற்று மணலைக் கொள்ளையடித்ததே முக்கிய காரணம் என்பதை இதிலிருந்தே உணரலாம்.கொள்ளிடத்தில் 1983ம் ஆண்டு சுமார் 1.50 லட்சம் கன அடியும், 2005ம் ஆண்டு சுமார் 4 லட்சம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அப்போது இந்த தடுப்பணைகளுக்கும் மதகுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இப்போது அதைவிட குறைவான அளவு தண்ணீரே திறந்துவிடப்பட்ட நிலையில் மதகுகள் உடைந்துள்ளனஎன்றால் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில் இல்லை என்றுதானே அர்த்தம்?

காவிரி டெல்டாவில் பொதுப்பணித்துறை செயலற்ற துறையாக மாறிவிட்டது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், மாநில அரசு இதைப்பற்றி கவலைப்படுவதில்லை. மணல்கொள்ளையைத் தடுக்க அரசு தவறிவிட்டது என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை. பொறுப்பற்ற பொதுப்பணித்துறையின் முகத்திரையும், அரசின் மெத்தனமும் முக்கொம்பு தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகள் வலுவுடன் உள்ளதா என்ற அச்சம் இப்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான கிராமங்களுக்குத் தண்ணீர் செல்லாத பெரும் குறைபாடு இன்றைக்கும் நீடிக்கிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள பல கிராமங்களுக்கு இப்போதுவரை தண்ணீர் சென்றடையவில்லை.

இதேபோல் வெண்ணாற்றிலிருந்து பிரியும் வடவாற்றிலும் போதுமான தண்ணீர் வராததால் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, நிம்மேலி, மேலநத்தம், மகாராஜபுரம் ஆகிய கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஏரிகளையும், குளங்களையும், வாய்க்கால்களையும் முறையாக தூர்வாரியும், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தியும் இருந்தால் இந்தப் பக்கம் வெள்ளமும் வந்திருக்காது. அந்தப் பக்கம் வறட்சியும் எட்டிப் பார்த்திருக்காது...’’ என்று ஐ.வி.நாகராஜன் முடிக்க, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் இதுகுறித்து மேலும் விளக்கினார்.‘‘மேட்டூரில் இருந்து வரும் நீரின் அழுத்தத்தால் மேலணையில் உள்ள 49 மதகுகளில் 9 மதகுகள் உடைந்துவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். 1836ம் ஆண்டு கட்டப்பட்ட மேலணை (முக்கொம்பு), நீர் அழுத்தத்தால் 20 நாட்களில் பழுது ஏற்பட்டு உடைய வாய்ப்பில்லை என்கின்றனர் பொறியாளர்கள்.

நீர்த்தேக்கங்களை ஆண்டுக்கு ஒருமுறை கோடைகாலங்களில் பராமரிக்க வேண்டிய அரசு நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக அதைச் செய்யவில்லை. மதகுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யாததும் மனித அலட்சியமுமே தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதற்கு முழுமுதற் காரணம்.
இப்போது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண் தடுப்பு போடப்பட்டு வருகிறது. வரும் வடகிழக்குப் பருவமழையின்போது இந்த மண் தடுப்பு எப்படி தாங்கப்போகிறது என்கிற கவலை எல்லோர் மனதிலும் எழுகிறது.

காவிரி ஆறு மேலணையிலிருந்து 16 மைல் சென்று கல்லணையை அடைந்து அங்கிருந்து, குடமுருட்டி, அரசலாறு, நூலமாறு, வஞ்சியாறு, நந்தலாறு, வீரசோழனாறு, மகிமையாறு, பழவாறு, முடிகொண்டானாறு, வளப்பாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட வாய்க்கால்களின் மூலமாக பாசனத்திற்குப் பாய்ந்து சுமார் 5 லட்சம் ஏக்கர் விவசாயத்தை உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் நீர்வரத்து அடிப்படையில் பரந்த, பெரிய படுகையாக காவிரி டெல்டா பகுதியே உள்ளது. தண்ணீர் ஓரளவு கிடைத்தும், அதை முறைப்படுத்தாத அரசின் அலட்சியத்தால் விவசாயம் என்னவாகுமோ... என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் பயிரை வளர்க்காவிட்டால் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் விவசாயிகளும், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும் உள்ளனர். காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் விவசாயப் பணிகள் நடக்கும். அதன்மூலம் கூலி வேலை கிடைக்கும். அதை வைத்து குடும்பத்தை நடத்தலாம் என்றிருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு இது மிகுந்த வேதனையை உருவாக்கியுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தையும் 5 மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்த ஆட்சியாளர்கள் ஒரு மாதகாலமாகத்தான் சிறிது வேலை கொடுக்கத் தொடங்கினர். இப்போது தண்ணீர் வந்துவிட்டது எனக் காரணம் சொல்லி அதையும் நிறுத்த முற்பட்டுள்ளனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேருவதற்கும், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்புவதற்கும் உடனடியாக அரசு நிர்வாகம் ஆவன செய்திட வேண்டும். விவசாய வேலைகள் முழு வீச்சில் துவங்குவது வரை 100 நாள் வேலையைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் உணவு உற்பத்தி போற்றப்பட வேண்டும்...’’ என்ற கோரிக்கை
களுடன் அழுத்தம் திருத்தமாக முடித்தார் அமிர்தலிங்கம்.  

தோ.திருத்துவராஜ்