ஆதம்பாக்கம் ரவி சோடாக்கடை
லன்ச் மேப்
வெளியிடங்களில் நான்கு பேர் ஒன்று கூடினால் டீ குடிக்கச் செல்வார்கள். வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்களுக்கு ஒன்று வீட்டிலேயே காபி போட்டுத் தருவார்கள் அல்லது ‘பேசிட்டு இருங்க... காபி தண்ணி வாங்கிட்டு வரேன்...’ என தூக்குச் சட்டியை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்வார்கள்.இதுதான் தமிழர்களின் வழக்கம்.
ஆனால், சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், பரங்கிமலை சுற்றுவட்டாரப் பகுதியில் நடப்பதே வேறு. நடந்து செல்பவர்களிடம் ‘எங்கப்பா போற..?’ என்று கேட்டால் ‘சும்மா சோடா குடிக்கப் போறேன்!’ என்றபடி பரங்கிமலை ரயில்நிலையம் எதிரில் இருக்கும் ரவி சோடா ஃபேக்டரிக்கு செல்வார்கள்.
அந்தளவுக்கு பல ஆண்டுகளாக நல்லது, கெட்டது, சும்மா, அரட்டையடிக்க என சகலத்துக்கும் இங்கு சோடாதான்!
‘‘1972ல எங்க சித்தப்பா இந்தக் கடையை ஆரம்பிச்சார். அப்ப சென்னைல பல கிராமங்கள் இருந்தது. அதுல இந்தப் பகுதியும் ஒண்ணு. மடிப்பாக்கம், வேளச்சேரி... அதைத் தாண்டி இருக்கிற 30 ஊர்களுக்கு இதுதான் ரோடு. சந்தையோடு சேர்ந்து ரயில்வே கேட் இருக்கும். மக்கள் எப்பவும் ஜே ஜேனு இருப்பாங்க. வெயில் தாகத்துக்கு அப்ப சோடாதான் குடிப்பாங்க. மூட்டையை சந்தைல இறக்கிட்டு ‘ஒரு சோடா கொடுப்பா’னு கேட்கறது சகஜம்...’’ என அசைபோடுகிறார் ரவிச்சந்திரன்.
“மொத்தமா கலருனு சொல்வாங்க. கறுப்பு, சிவப்பு, ஆரஞ்சுனு நிறம் நிறமா இருக்கும். கூடவே பன்னீர் சோடா, கோலி சோடா. அப்ப ‘சுடர்’ சோடா கடை இருந்தது. இப்ப அது இல்லை. அவர்கிட்ட வேலை செஞ்ச என் சித்தப்பா தனியா கடை போட்டார். அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்.
அப்ப 30க்கும் மேல இங்க கடை இருக்கும். எல்லாருமே சுடர் சோடாக்கடை இல்லைனா சித்தப்பாகிட்ட தொழில் கத்துக்கிட்டவங்கதான்...’’ என்று சொல்லும் ரவிச்சந்திரன், தன் காலத்தில் நாவல்பழச் சோடா, சர்பத், பாதாம் பிசின் சர்பத், ஸ்பெஷல் பன்னீர் சோடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பானங்கள் தயாரிக்கின்றனர்.
‘‘பன்னீர் சோடா, கோலி சோடா, லெமன், ஜின்சர், ஆரஞ்சு... இதுமாதிரி சிலது மட்டும்தான் அப்ப இருந்தது. காலம் மாற மாற மக்கள்கிட்டயும் எதிர்பார்ப்பு அதிகமாகிடுச்சு. அதை பூர்த்தி செய்யணும் இல்லையா..!முன்னாடி கையால சுத்திதான் சோடா தயாரிப்போம். ஒரு கம்பில வரிசையா பாட்டிலை வைச்சு தண்ணீர்ல கார்பன் - டை - ஆக்ஸைடை கலந்து கையாலயே சுத்துவோம். 30 முறை சுத்தினா கேஸ் ஃபார்ம் ஆகும். கொஞ்சம் அதிகமா சுத்தினா பாட்டில் உடைஞ்சுடும். கையெல்லாம் ரத்தமாகும்.
இப்படி சுத்தி எடுத்ததை 15 பைசாவுக்கு விற்போம். இப்ப கையால சுத்தறதில்ல. மெஷின் பயன்படுத்தறோம். ஒரு காலத்துல பன்னீர் சோடாவுக்கு பெயர் போன இடமா ஆதம்பாக்கம் இருந்தது. மக்களும் ‘சைதாப்பேட்டை கோலி சோடா’ ஆதம்பாக்கம் பன்னீர் சோடா’னு ரைமிங்கா சொல்வாங்க.ரோஸ் வாட்டர் வாங்கி அதை சரியான அளவுல கலக்கணும்.
சோடா அதிகமாச்சுனா காட்டமா இருக்கும். பன்னீர் அதிகமாச்சுனா கசக்கும். இப்ப இங்க குறைவா கடைங்க இருக்கு. அப்ப வரிசையா எக்கச்சக்கமா இருக்கும். எல்லா கடைகள்லயும் பன்னீர் சோடா நல்லா இருக்கும். எல்லாருமே சுடர்கிட்ட கத்துகிட்டவங்கதான். அவரோட முழு பேரு கூட எனக்குத் தெரியாது. ‘சுடர் கடை’னு சொல்லியே பழக்கமாகிடுச்சு...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.
சோடா, சர்பத், பால் சர்பத். மூன்று ரகத்தில் குளிர் பானங்கள் தயாரிக்கின்றனர், கார்பன் - டை - ஆக்ஸைடுடன் தண்ணீர் கலந்து ஆரஞ்சு, ஜிஞ்சர், புதினா, கிரேப் மிக்ஸ் செய்து பாட்டிலில் அடைத்து வைக்காமல் வாடிக்கையாளர்கள் கேட்கக் கேட்க ‘சுடச்சுட’ தயாரித்துத் தருகின்றனர்.
நாவல் சர்பத், நன்னாரி சர்பத், பன்னீர் ரோஸ், ஆரஞ்சு பைனாப்பிளில் எலுமிச்சைச் சாறுடன் ஐஸ் கட்டிகளை சேர்க்கின்றனர். இதில் சோடா கலப்பதில்லை. தேவையான எசன்ஸையும் இவர்களே தயாரிக்கின்றனர். நன்னாரி வேரை காய்ச்சி சாறு எடுக்கின்றனர். நாவல் பழங்களிலிருந்து சாறு பிழிகின்றனர்.தண்ணீர் சேர்த்து காய்ச்சிய பசும்பாலில் பாதாம் பிசின் துளசி ரக சப்ஞ்ஞா விதையில் பால் சர்பத் தயாரிக்கிறார்கள்.
சோடாவின் கதை
குளிர்பானங்கள் முதன் முதலில் பழச்சாறு சுவையை கொண்டிருந்தது. சோடா ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் அப்போது கிடையாது. 1653ம் ஆண்டு இங்கிலாந்தில் எலுமிச்சைச் சாறுடன் தண்ணீரைக் கலந்து குடித்தார்கள். பாரீசில் 1676ம் ஆண்டில் எலுமிச்சை, தேன், தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனையில் சாதனை படைத்தன.
1767ம் ஆண்டு முதன்முதலில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் பிரிஸ்டிலி என்பவர் தண்ணீரை கார்பன்-டை-ஆக்ஸைடுடன் வினைபுரியச் செய்து காற்றேற்றப்பட்ட தண்ணீரை அடைத்தார். இதுவே பின்னாளில் சோடாவாக உருவானது. 1800களில் காற்றேற்றப்பட்ட ஜிஞ்சர் பீர் (இஞ்சி) விற்பனைக்கு வந்தது.
1870களில் இங்கிலாந்தில் கோலி சோடா விற்பனை அதிகமாக இருந்தன. இவர்கள்தான் காலனியாதிக்கத்தின்போது நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்தியாவிலேயே சென்னையில்தான் முதன்முதலில் சோடா அறிமுகப்படுத்தப்பட்டது. 1886ல் கோகோகோலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.அன்று தொடங்கி இன்றுவரை உலகில் அதிகம் குளிர்பானம் குடிப்பவர்கள் அமெரிக்கர்கள்தான். தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீருக்குப் பதில் சோடாவே குடிக்கின்றனர்.
சோடா எப்படி செய்கிறார்கள்..?
கார்பன் கரிஅமிலத்தில் தண்ணீர் சேர்த்து (carbonated) செய்யப்பட்ட பானம்தான் சோடா. அதாவது, மணம் / நெடி சேர்ந்த வெறும் தண்ணீர்தான். தண்ணீர் எந்த அளவு கரியமில வாயுவை (carbon-di-oxide) ஏற்றுக்கொள்ளுமோ அதைவிடக் கூடுதலான வாயுவை அழுத்தத்தில் கலந்து வினைபுரிய வைக்கிறார்கள்.
இவை மிக உயர்ந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலையிலும் தயாரிக்கப்படுகின்றன. அப்போது வாயுவுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வகைச் சமநிலை (equilibrium) உருவாகிறது. கோலி சோடாவில் இது சரியான பதத்தில் இருக்கும். சரியாக வினை புரிந்தால்தான் கோலி மேல் நோக்கிச் செல்லும்.
திலீபன் புகழ்
ஆ.வின்சென்ட் பால்
|