முதல் ஃபுட்பால் ஸ்கூல்!



‘‘கிரிக்கெட், ஹாக்கி, பேட்மின்டன்ல சிறப்பா செயல்பட்டாலும் ஃபுட்பால்ல இப்பத்தான் மேலே வந்துட்டு இருக்கோம். ‘ஐ.லீக்’, ‘ஐ.எஸ்.எல்’னு உள்ளூர் போட்டிகள் வீரர்களை மெருகேத்திட்டு வருது. எங்க நோக்கம் இங்கிருந்து ஒரு மெஸ்சியோ ரொனால்டோவோ உருவாகணும்.
அதுக்காகவே இந்த உறைவிடக் கால்பந்துப் பள்ளி..!’’ கனவுகள் மிளிர, எனர்ஜி ததும்ப பேசுகிறார் அரிந்தம் பிஸ்வாஸ். தமிழகத்தில் முதல்முறையாக கால்பந்து விளையாட்டை கற்றுத் தர, ‘எஃப்சி மெட்ராஸ்’ என்கிற ஓர் உறைவிடப் பள்ளியைச் சென்னையில் தொடங்கியிருக்கிறார் இந்த இளைஞர். கால்பந்துப் பயிற்சியாளருக்கான, ‘ஏ’ கிளாஸ் சான்றிதழ் பெற்றவர் இவர்.

‘‘சொந்த ஊர் கொல்கத்தா. சின்ன வயசுல இருந்தே ஃபுட்பால் ரொம்ப பிடிக்கும். அப்பா அருணாச்சலப் பிரதேசத்துல வேலை பார்த்திட்டு இருந்தார். அங்க ஸ்கூல்ல படிக்கிறப்ப மாநில அளவுல ‘அண்டர் 16’ டீம்ல விளையாடினேன். பிறகு, ஒரிசா மாநிலம் புவனேஸ்வர்ல காலேஜ் லெவல்ல ஆடினேன். அதுக்குப் பிறகு பெரிசா போக முடியலை. திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்ல எம்.பி.ஏ. முடிச்சேன்.

உடனே, ஒரு வங்கியில வேலை கிடைச்சது. கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். ஆனா, மனசுக்கு நிறைவா இல்ல. ஏதாவது செய்யணும்னு ஆசை. குறிப்பா, ஃபுட்பாலில்! அதனால, வேலையை உதறிட்டு 2006ம் வருஷம் சென்னைல ‘மஹோகனி எஃப்சி’னு ஒரு கால்பந்து கிளப் ஆரம்பிச்சேன். அதுல ரெண்டே பேர்தான் சேர்ந்தாங்க. மனம் தளரல. நாட்கள் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா பயிற்சிக்கு வந்தாங்க.

இப்படி போயிட்டு இருந்தப்பதான் நண்பன் ஜோசப் என்னுடன் சேர்ந்தான். அவனும் நானும் நிறைய இடங்கள்ல ‘மஹோகனி எஃப்சி’யின் பேனர்ல ஃபுட்பால் சென்டரை ஆரம்பிச்சோம். நிறைய பேர் பயிற்சிக்கு வந்தாங்க. தவிர, ஸ்கூல்ஸ்ல டைஅப் பண்ணியும் பயிற்சி கொடுத்தோம்.

இதுவரை எங்ககிட்ட சுமார் ஆறாயிரம் பேர் வரை பயிற்சி எடுத்திருப்பாங்க...’’ பெருமை பொங்க பேசியவரை தொடர்கிறார் ஜோசப். தூத்துக்குடியைச் சேர்ந்த இவரும் அரிந்தமும் எம்.பி.ஏ. வகுப்புத் தோழர்கள்.

‘‘இது ஒருபுறம் நடக்க, எங்க கனவும் விரிஞ்சது. சென்டர்கள்ல சிறப்பா ஆடுற சின்ன பசங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உறைவிட கிளப் ஆரம்பிச்சோம். அதுக்காக திருவான்மியூர்ல ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கே பசங்களை தங்க வச்சு பயிற்சி கொடுத்தோம். சாப்பாட்டுல இருந்து எல்லா செலவும் எங்களோடது. ஆறேழு பசங்க இதுல இருந்தாங்க. காலையும், மாலையும் ப்ராக்டீஸ். இடையில ஸ்கூலுக்குப் போயிடுவாங்க. இவங்களோடு இன்னும் சில பசங்களை சேர்த்து டீம் ரெடி பண்ணினோம்.

மூணு வருஷம் இப்படியே போச்சு. இந்நேரம்தான் எங்களுக்குக் க்ரீஷ் மாத்ருபூதம் கைகொடுத்தார்...’’ என ஜோசப் நிறுத்த, தொடர்ந்தார் அரிந்தம்.
‘‘க்ரீஷ் மாத்ருபூதம் ‘ஃப்ரஸ்வொர்க்ஸ்’னு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திட்டு வர்றார். அவரின் மகனும் எங்க சென்டர்லதான் பயிற்சி எடுத்தான். பையனை இங்க விட்டுட்டு போகும்போது எங்களின் உறைவிடப் பள்ளி பற்றி கிரீஷ் கேட்டார். அவருக்குப் பிடித்துப் போகவே, ‘நான் ஸ்பான்சர்ஷிப் பண்றேன். இன்னும் சிறப்பா மேம்படுத்துங்க...’னு உற்சாகம் தந்ததோடு, இதற்காகவே ஓர் அறக்கட்டளையும் ஆரம்பித்தார்.

அதன்மூலம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த உறைவிடக் கால்பந்துப் பள்ளியைத் தொடங்கினோம்... என்னோட பத்து வருஷக் கனவு நிஜமானதுல ரொம்பவே சந்தோஷம்...’’ என்று பூரிக்கிற அரிந்தம், நம்மைப் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார். கேன்டீன், ஏசியுடன் கூடிய தங்கும் அறைகள், கிளாஸ் ரூம் என சகல வசதிகளுடன் அப்பள்ளி மிகச்சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்க காத்துக்கிடக்கிறது.

‘‘பொதுவா, சின்ன வயசுல யிருந்து பயிற்சி எடுத்தால்தான் கால்பந்துல சிறப்பா வர முடியும். மெஸ்சி, ரொனால்டோனு எந்த கால்பந்தாட்ட ஹீரோக்களின் பின்புலத்தை எடுத்தாலும் இதுதான் யதார்த்தம்.

நான் பயிற்சியாளர் சான்றிதழ் பெற்று இருக்கிறதால எல்லா மாநில கால்பந்து பயிற்சியாளர்களிடமும் பழக்கம் இருக்கு. அதன் மூலமா நிறைய இடங்கள்ல ஆட்களை நியமிச்சோம். இந்தியா முழுவதிலுமிருந்து 10 - 15 வயசுக்குள்ள இருக்கிற நல்ல பசங்களைத் தேர்ந்தெடுத்தோம். டாக்டர்ஸை வெச்சு டெஸ்ட் எல்லாம் எடுத்து வயசை உறுதி பண்ணிட்டுதான் சேர்க்கிறோம்.

இப்ப 35 பசங்க இருக்காங்க. ‘அண்டர் 13’, ‘அண்டர் 15’னு ரெண்டு டீம் தயாராகியிருக்கு. சீக்கிரமே, ‘அண்டர் 18’னும் ரெடியாகும்.இவங்களுக்குக் காலையிலும், மாலையிலும் பக்கத்துல இருக்குற ஸ்கூல் கிரவுண்ட்ல பயிற்சி கொடுக்குறோம். இடையில வகுப்புகளுக்குப் போவாங்க. தேசிய திறந்தநிலைப் பள்ளி வாரியத்தின் கீழ் வகுப்புகள் நடக்கும். அதாவது ஓபன் ஸ்கூலிங் சிஸ்டம்.

இப்ப மூணு ஆசிரியர்கள் தினமும் வந்து பசங்களுக்கு வகுப்புகள் எடுக்குறாங்க...’’ என்றவரின் கோல், ‘‘தரமான பயிற்சியின் வழியே வீரர்களை உருவாக்கி, உலகளவில் பிரகாசிக்கச் செய்யணும்...’’ என்பதே!

பேராச்சி கண்ணன்