கவிதை வனம்



உன் இதயம் என்னிடமே

ஞாபக அடுக்குகளில்
தேடுகிறேன்
நினைவு முடிச்சுகளை
அவிழ்க்கிறேன்
நினைவேடுகளைப்
புரட்டுகிறேன்
தத்தளித்துத் திமிறி
மருகுகிறேன்
தவிப்பாய் தவித்துக்
குமைகிறேன்
திகைத்து நிமிர
குறுஞ்சிரிப்புடன்
இதோ நீ தேடுகிற
இதயம் என்கிறாய்
நீயும் நானும்
ததும்பி வழியும் நம்
பிரியங்களைக் கண்டு
புன்னகை பூக்கிறோம்.

- ஜே.செல்லம் ஜெரினா

விளையாட்டு

சிதறிக் கிடக்கும்
பூக்களை
ஒன்று திரட்டும்
குழந்தைகள்
கலைத்து
விளையாடுகிறது காற்று.

- ச.கோபிநாத்