மின்சார கண்ணா



செய்தி

மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்த, குறைந்தபட்ச குளிரூட்டி வெப்ப நிலையை 24 டிகிரியாக வைத்து வடிவமைக்குமாறு ஏசி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை.வேறு எந்த மாதிரியான ‘தெர்மோ கூல்’ கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கலாம்? ஏசியில் உட்கார்ந்து யோசித்ததில் உருகிய கற்பனை...

மைக் கட்டுப்பாடு

பொதுக்கூட்ட மேடைகளில் மைக் பயன்படுத்துவதை நிறுத்தினால் ஏராளமான மின்சாரத்தை சேமிக்கலாம் என்ற சவுண்டான யோசனை யாருக்காவது தோன்றி மைக் பயன்பாடு தடை செய்யப்படலாம். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற முழக்கம் மேடைக்கு மேடை ஒலிக்க ஆரம்பிக்கும்.

இந்த நிலைமையைச் சமாளிக்க மைக் இல்லாமல் பேசினாலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்கும்படியான குரல்வளம்(!) உள்ளவர்கள்தான் அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை உருவாகும். குரல் வளத்தை அதிகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே முளைத்து கல்லா கட்டும். அரை கிலோ மீட்டர், ஒரு கிலோ மீட்டர் குரல் வளம் என தூரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பார்கள். அரசியல்வாதிகள் குரல் வள சேலன்ஜை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தமாஷ் செய்வதை மக்கள் கேட்டு களிக்கலாம்!

மிக்ஸி கட்டுப்பாடு

வீடுகளில் மிக்ஸி பயன்பாட்டை குறைத்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதால் அதற்கு தடை விதிக்க கோரிக்கை எழலாம். இதனால், அம்மிக் கல்லுக்கு டிமாண்ட் அதிகமாகும். ‘அம்மியில் அரைப்பது எப்படி..?’ என்று ஆங்காங்கே பயிற்சி வகுப்புகள் முளைக்கும்.

அம்மி பயன்பாடு, பெண்களுக்கு ஒரு நல்ல எக்ஸர்ஸைஸ் என்ற விளம்பரப் பேச்சுகள், மிக்ஸியைவிட அதிக சத்தத்தை உண்டு பண்ணும்.
கணவன், மனைவிக்குள் சண்டை வந்தால், அம்மிக் கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்ற இலவச இணைப்பு சட்டமும் இயற்றப் பட வேண்டும் என கணவன்மார்கள் கோரிக்கை எழுப்புவார்கள்!
 
ஐஸ் கட்டுப்பாடு

கோப்பையில் தவழும் ஐஸ்க்ரீம் என்னதான் திடப்பொருளாகக் காட்சியளித்தாலும் வாய்க்குள் போகும்போது அது உருகி திரவமாகி விடுகிறது. எனவே, மின்சாரத்தை மிச்சப்படுத்த, 0 டிகிரிக்குக் கீழான வெப்ப நிலை தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்படும்! ஐஸ்விலக்கு வாரியம் அமைக்கப்பட்டு படிப்படியாக ஐஸ்க்ரீம் பற்றிய கூலான நினைவுகள் குறைக்கப்படும்.

இதன் தொடர்ச்சியாக எவரும் மற்றவருக்கு ஐஸ் வைத்துப் பேசுவது தடை செய்யப்படும் என்பதால் ஐஸ் வைத்துப் பேசி கடன் கேட்க முடியாமல் போகும். ‘ஐஸ்’வர்யா போன்ற பெயர்கள் தடை செய்யப்படலாம் என்பதால் அந்தப் பெயருடையவர்கள் இப்பொழுதே பெயரை மாற்றிக் கொள்வது நல்லது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ‘ஆளுக்கு ஒரு குச்சி ஐஸ்’ என்ற தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கட்சிகளிடம் மக்கள் மனது உருகும்!

சார்ஜ் கட்டுப்பாடு

செல்போன் பயன்பாடு அதிகரித்து அதற்கு சார்ஜ் ஏற்றுவதால் மின்சாரம் ஏகத்துக்கும் செலவாகிறது. எனவே, ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 24% அளவில்தான் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றவேண்டும். மீறினால், ‘மின் கொடுமை’ சட்டத்தின் கீழ் அபராதம் என்ற சட்டம் வரலாம்.

ஹெல்மெட் செக்கிங் போல் சாலைகளில் நிற்கும் தனிப்படை போலீஸார், செல் ஓட்டிகளை விரட்டிப் பிடித்து சார்ஜின் அளவை செக் செய்து ஃபைன் போடுவார்கள்.போலீஸைக் கண்டதும் தானாகவே சார்ஜ் இறங்கும் செல்போன்கள் சந்தையில் அறிமுகமாகும். செல்போனில் தொடுக்கப்படும் வாய்ச் சண்டைகள், சார்ஜ் இறக்கத்தினால் பாதியிலேயே நின்று அந்த இடைவெளியில் சண்டையாளர்களின் கோபம் தணிந்து சமாதானம் ஏற்பட்டுவிடும்.   

 எஸ்.ராமன்