எப்படிப் பார்த்தாலும் பல்லாவரத்திலிருந்து வந்த பொண்ணுதான் நான்!



‘‘ஹாய்... எப்படி இருக்கீங்க...?’’

கண்களால் சிரிக்கிறார் சமந்தா. பேசும்பொழுதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனுஷி. பரிவும் சந்தோஷமும் விளையாடும் மேஜிக் கண்கள், மர்மப் புன்னகை என பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் சமந்தா! பார்த்துப் பார்த்துதான் படம் செய்கிறார். நிறைய ஹீரோக்கள் புதுப்படங்களுக்கு ஆசைப்பட்டுக் கேட்டும் ‘‘ஸாரி, டேட்ஸ் இல்லை...’’ என மறுத்திருக்கிறார்.

‘‘நிஜமாகவே நான் கொஞ்சம் பிஸி...’’ என்கிறார் சாம்.‘‘தெலுங்கில் இரண்டு மூணு படங்கள் போயிட்டு இருக்கு. இப்ப பாருங்க, ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ இரண்டுமே அடுத்தடுத்து வருது. ‘யு டர்னி’ல் பத்திரிகையாளரா வரேன். மேக்கப்பில் கவனம் செலுத்தாமல், ஹேர்ஸ்டைல் மாத்திக்கிட்டு செய்திருக்கேன்.

இந்தப் படத்தை சாவகாசமா உட்கார்ந்து பார்க்க முடியாது. பரபரன்னு சீட் நுனிதான் உங்களுக்கு. கிட்டத்தட்ட இதில் என்னைப் பார்த்தா பாய்ஸ் லுக் இருக்கும். பத்திரிகை உலகம் அதிகமும் ஆண்களோட உலகம். நேரம் காலம் இல்லாமல் அவங்கதான் பல திசையிலும் ஆடி ஓடி செய்ய முடியும்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.

அப்படியிருக்கிற இடத்தில் என் இடம் இதில் கவனமாக செய்யப்பட்டு இருக்கு. பாடல்கள் இல்லை. த்ரில்லராக போய்க்கிட்டு இருக்கும்போது எமோஷன் வந்து நிக்கும். இந்த வகையான ஜானர்னு சட்னு சொல்லி விட முடியாது. புத்திசாலித்தனமான படம். இயக்குநர் பவன்குமார் தமிழில் நானே நடிக்கணும்னு கேட்டுக்கிட்டதோடு, எனக்காக அவர் வெயிட் பண்ணினார். நான் சந்தோஷமாக நடிச்சுக் கொடுத்த படம். இப்ப சினிமா மாறிக்கிட்டு இருக்கு இல்லையா, இந்த சமயத்திற்கு அருமையா பொருந்தி வருகிற படம்...’’ நம்பிக்கையுடன் பேசுகிறார் சமந்தா.

‘சீமராஜா’வில் கிராமத்துப் பெண்ணாக வந்திருக்கீங்க..!
‘சீமராஜா’ பக்கா ஃபேமிலி படம். தப்பே பண்ணாது. முழு குடும்பமாக இரண்டு தடவை பார்த்தால் கூட நல்லாயிருக்கும். இந்த பொன்ராம் - சிவா - சூரி கூட்டணியோட இருந்தாலே சிரிப்புதான். கையில் ஒரு டயலாக் சீட் வச்சிருப்பாங்க. ஸ்பாட்டில் பார்த்தா அதுவே காமெடி பட டைப்பில் வரும். அடுத்து என்ன டயலாக் அடிக்கப் போறாங்களோன்னு த்ரில்லா இருக்கும்.

கதையில் சில முக்கியமான திருப்பங்களுக்கு நான்தான் காரணமா இருக்கேன். இப்ப சினிமா எழுத்தாளர்களுக்கு பெண்களுக்கு ஒரு நல்ல இடம் ஸ்கிரிப்ட்டில் தரணும்னு எண்ணம் வந்திருக்கு.எப்பவும் சந்தோஷமாகவும், இயல்பாகவும் இருக்கீங்க...சாதாரணமான பொண்ணுதான் நான். வெளியில் ஒரு வெற்றிகரமான நடிகைன்னு பெயர் வந்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பல்லாவரத்திலிருந்து வந்த பொண்ணுதான் நான். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கேன்னு மறக்கவே இல்லை.

மனசை கலகலன்னு வச்சுக்கிட்டால், எங்கேயும் எப்போதும் சந்தோஷம்தான். இந்த நடிப்புத் தொழிலை ரொம்பவும் ரசிக்கிறேன். சினிமாவிற்கு வருவேன்னு நினைச்சுக்கூட பார்த்தது கிடையாது. அதற்கான எந்தத் தொடர்பும் என் ஃபேமிலியில் கிடையாது. இன்னிக்கு முன்னணி நடிகர்கள் நிறைய பேரோட நடிச்சிட்டேன். அதெல்லாம் ஒரு பிளஸ்ஸிங்!

ஆரம்பத்தில் இருந்த விளையாட்டுத்தனம் போய் இப்ப தீவிரமா சினிமாவை பார்க்கிறீங்க...
எஸ். நம்பிக்கை வந்திருக்கு. எதாவது ரோல் கொடுத்தால் அதற்கு நியாயம் செய்யணும்னு ஒரு கண்டிப்பு வந்திருச்சு. அதற்கு இடம் தராத படங்களை நானே ஒதுக்கி விடுறேன். படத்திற்கு படம் இம்புரூவ் பண்ணணும்னு நினைக்கிறேன்.

இப்ப கொஞ்ச வருஷமாய் என் படங்களைத் தொடர்ந்து பார்த்தால் என் அக்கறை உங்களுக்குத் தெரிய வரும். டெய்லி எழுந்ததும் இன்னிக்கு ஒரு விஷயம் கத்துக்கணும்னு தோணுது.ரொமான்ஸ் காட்சிகளில் பார்த்தால் ஹீரோக்களுக்காகவே பிறந்து வளர்ந்த மாதிரி நடிக்கிறீங்க...

நான் நிஜத்தில் ரொமான்டிக் ஆளு கிடையாது. ஆனால், திரையில் காதல் எனக்கு நல்லா வரும். ‘ஒரு கல்லை கொண்டாந்து வச்சால் கூட அதைக்கூட நீ ரொமான்ஸ் பண்ணிடு வே...’னு ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க. ‘நீ பார்த்த பார்வையில அந்த கல்லும் உன்னை ஏங்கிப் பார்க்கும்...’னு கேலி பண்ணிக்கிட்டே இருப்பாங்க.

உச்சத்தில் இருக்கும்போது கவலைப்படாமல் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டிங்க...
அப்படி ஒருத்தர் வழியில் வந்தார். கணவருக்கு மேலே அவர் என் தோழர்! ஜென்டில்மேன். காதலில் விழுந்திட்டேன். அவர் இல்லாமல் இருக்கிறது கஷ்டம்னு தோணுச்சு.  முழுமையான சமர்ப்பணம்... முழுமையான தன்னிறைவு!

ஒருத்தரைப் பற்றி நினைக்கும்போது மகிழ்ச்சியாய் உணர முடிவதை எப்படி உணர்வீங்க! அதுதான் எங்க அன்பு. இந்தக் காதலும், திருமணமும்... நான் இதுவரை சேகரித்தவைகளில் அவரின் அன்பு எனக்கு முக்கியமானது. அப்புறமும் சினிமாவிற்கு வந்தேன். இந்தத் தடவை இன்னும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கறேன். இந்த சினிமா... இதுக்குப் பின்னாடி போனால் நம்மை மதிக்காது. பின்னாடி துரத்திட்டு போகாமல் இருந்தால்தான்
மதிக்கும்.

இப்ப என் கையில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் கவனத்தோட, என் கடின உழைப்பையும் தர்றேன். என்னோட சினிமா லைன்-அப் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. காலம் மாறிக்கிட்டே இருக்கு. நயன்தாரா நடிச்ச ‘கோகோ’ நல்ல கலெக்‌ஷன் பார்த்திருக்கு. ஆந்திராவுல அனுஷ்கா படங்களுக்கு மதிப்பிருக்கு.

இது ஒரு நல்ல காலத்தின் ஆரம்பம். முன்னாடி கல்யாணமாகிட்டா தள்ளி வச்சுடுவாங்க. இப்ப என்னை மாதிரியானவங்களுக்கு வரவேற்பு இருக்கு. இதை நல்ல மாறுதலா நினைக்கிறேன். ஏதோ ஒண்ணு என்னை தமிழ் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்துக்கிட்டே இருக்கு. அதுவே ரொம்ப சந்தோஷம்.

நா.கதிர்வேலன்