காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்
யுவகிருஷ்ணா - 66
எல் சாலதோ நகரில் இருந்த சிறு பண்ணை வீட்டில் பாப்லோ குழுவினர் பதுங்கிக் கிடக்க, கதீட்ரல் சிறை அமைந்திருந்த மலை மற்றும் மலையடிவார குடியிருப்புகள் மொத்தத்தையும் சல்லடை போட்டுத் தேட இராணுவம் தயாரானது .சிறைக்குள் இருந்து தப்பித்து விட்டாலும், இன்னமும் தாங்கள் பாதுகாப்பான இடத்தில் அடைக்கலமாகவில்லை என்கிற ஆபத்து பாப்லோ எஸ்கோபாருக்குப் புரிந்திருந்தது. அரசாங்கத்தோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட முடிவெடுத்தார். ரேடியோ போன் மூலமாக தனக்கு நன்கு பழக்கமான பத்திரிகையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். இவரது காதில் எந்த செய்தியைப் போட்டாலும், அதை உலகறியச் செய்துவிடுவார் என்பது அவருக்குத் தெரியும்.
“நானும், என் குழுவினரும் கதீட்ரல் சிறையில் நாங்களே உருவாக்கி வைத்திருக்கும் குகை ஒன்றில் பாதுகாப்பாகத் தங்கியிருக்கிறோம். இங்கே ஒரு மாத காலத்துக்குத் தேவையான உணவு இருக்கிறது. நாங்கள் சரணடைவதற்கு முன்பாக அரசாங்கம் எங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு நேர்மையாக நடந்துகொள்வதாக வாக்களித்தால்தான் இந்தக் குகையிலிருந்து வெளிவருவோம்!” உடனடியாக அந்தப் பத்திரிகையாளர், இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலமாக டமாரமடிக்க, அரசு இயந்திரம் மொத்தமும் கதீட்ரல் சிறை நோக்கிக் கிளம்பியது. சிறை மற்றும் மலைப்பகுதி முழுக்க பொக்லைன் போன்ற இயந்திரங்களை வரவழைத்து, மண்ணைத் தோண்டி குகை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க மெனக்கெட்டார்கள்.
இராணுவமும் இந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டதால், பாப்லோ குழுவினர் பதுங்கியிருந்த எல் சாலதோ பகுதியில் கெடுபிடி குறை வாகவே இருந்தது. ஆனால், நாடு முழுக்க மக்களிடம் பதற்றம் ஏற்பட்டிருந்தது. பாப்லோவையும், அவரது நண்பர்களையும் கொன்றுவிட்டு அரசு நாடகமாடுகிறது என்கிற தகவல் அவர்கள் மத்தியில் பரவியதால், அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். இதற்கிடையே பாப்லோவின் எதிரிகளும் புதிய வதந்திகளை உருவாக்கினார்கள். தப்பிச் சென்ற பாப்லோ, கொலம்பியாவின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி நாட்டையே தீக்கிரையாக்கப் போகிறார் என்று கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.
நாட்டின் அதிபர், பாதுகாப்புத்துறை அமைச்சர், முக்கியமான அரசு அதிகாரிகள்... என மொத்தப் பேரையும் போட்டுத் தள்ள பாப்லோ, கில்லிங் புரொஃபஷனல்களான அசாசின்களிடம் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார் என்கிற தகவலும் அதிகார மட்டத்தை அதிரச் செய்து கொண்டிருந்தது. அமெரிக்க ஊடகங்களும் நீலிக்கண்ணீர் வடித்தன. கொலம்பியாவையும், அதன் மக்களையும் காப்பதற்கு அமெரிக்க இராணுவம் உடனடியாகக் கிளம்ப வேண்டும், பாப்லோ குழுவினரைப் பிடித்து கொலம்பியாவில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் அமெரிக்க டிவி, ரேடியோ, பத்திரிகைகள் ஓலமிட ஆரம்பித்தன.
கொலம்பிய அதிபர் கவேரியா ரேடியோவில் பேசி நிலைமையைத் தெளிவுபடுத்தினார். “பாப்லோ இன்னமும் முழுமையாகத் தப்பவில்லை. இரவுக்குள் அவரைப் பிடித்துவிடுவோம். மக்கள் அச்சமடைய வேண்டாம்...” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இந்த அமளிதுமளியைப் பயன்படுத்தி வேறு பாதுகாப்பான இடத்துக்கு நகர பாப்லோ முயற்சித்தார். நகரில் இருந்து சப்தமில்லாமல் வெளியேறுவதே மலையை தலைமுடியால் கட்டி இழுக்கும் செயல் என்பது அவருக்குப் புரிந்தது. எல்லா வாகனங்களும் நகர எல்லையில் சோதனை போடப்பட்டுக் கொண்டிருந்தன.
எல் சாலதோவில் இருந்து வெளியேறி, அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் சந்தடியில்லாமல் அடங்கிக் கிடந்த வேறொரு பண்ணை வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். அந்த பண்ணை வீட்டில் பாப்லோ குழுவினர் பாதுகாப்பாக தப்பிச் செல்வதற்குத் தேவையான வாகனங்களும், ஆயுதங்களும் ஏற்கனவே தயாராக இருந்தன. இருள் கவிந்ததும் ஏழு பேரும் ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு நடக்கத் தொடங்கினர். சாலையை விட்டு விலகி மரங்களுக்குள் பதுங்கிப் பதுங்கி பூனை நடை நடந்தனர். இராணுத்தினர் ரோந்து வரக்கூடிய சூழல்களில் புதர் மறைவு களில் பதுங்கினார்கள். வழியில் இருந்த ஒரு பண்ணை வீட்டைத் தாண்டிச் செல்கையில் எதிர்பாராத திடீர் விபரீதம்.
அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் தன் பாதுகாப்புக்காக வளர்த்துக் கொண்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள், அந்நியர்களைக் கண்டதுமே ஆங்காரமாகப் பாய்ந்து வந்தது. அனைவரின் கையில் துப்பாக்கி இருந்தாலும், நாய்களிடமிருந்து தப்பிக்க சுடுவது முட்டாள்தனம். துப்பாக்கிச் சப்தம் கேட்ட அடுத்த சில நிமிடங்களில் நகரில் சல்லடை போட்டு இவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள் மொத்தமாக இங்கே வந்து குவிந்து விடுவார்கள். வேறென்னதான் செய்ய? வெறிநாய்களோடு மல்லுக் கட்டத் தொடங்கினார்கள். நாய்கள் சிலரைக் கடித்துக் குதறி சதையைப் பிய்த்தெறிந்தது. கொலம்பியா, அமெரிக்கா இரு நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மாவீரர்கள் போயும் போயும் இந்த நாய்களோடு மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாய்களோடு எப்படி சமாதானமாவது என்று இவர்களுக்கும் புரியவில்லை. கிடைத்த வேட்டையை விட்டுவிடக் கூடாது என்று நாய்களும் வெறியோடு இருந்தன. கொஞ்சம் தாமதமாக கடைசியாக நடந்து வந்துகொண்டிருந்த பாப்லோ, இந்தக் கூத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார். தன் பாக்கெட்டில் இருந்த சில பிஸ்கட் துண்டுகளைத் தூக்கிப் போட நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு அவருக்கு அருகில் வந்தன. பொதுவாக எவ்வளவு வெறிபிடித்த நாயாக இருந்தாலும் பாப்லோவிடம் பூனை போல அடங்கிவிடும். ஐந்து நாய்களும் அதிசயம் போல பாப்லோவிடம் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தன. மற்றவர்கள் நைஸாக ஒருவர் பின் ஒருவராக நாய்க்கடியால் ஏற்பட்ட ரத்தக் காயங்களோடு நடையைக் கட்ட ஆரம்பித்தனர். போய்ச் சேரவேண்டிய இடத்துக்குச் சேர்ந்து, அங்கிருந்த வாகனங்களில் ஏறித் தப்பினர்.
கதீட்ரல் சிறையிருந்த மலையில் குகை என்று இவர்கள் கிளப்பிவிட்டதெல்லாம் பொய் என்பதை உணர, அரசுக்கும் இராணுவத்துக்கும் இரண்டு நாள் பிடித்தது. அதற்குள்ளாக பாப்லோவும், அவரது குழுவினரும் திசைக்கு ஒருவராகப் பறந்து விட்டார்கள். கொலம்பிய அதிபருக்குத்தான் தர்மசங்கடம். இவரை துப்புக் கெட்டவர் என்று அமெரிக்கா நேரடியாகவே குற்றம் சாட்டியது.
அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, மீண்டும் கொலம்பியாவில் வன்முறை வெறியாட்டம் நடக்கும். அரசுக்கும், பாப்லோவுக்கும் தொடங்கப் போகும் போரில் மீண்டும் பல்லாயிரம் அப்பாவி கொலம்பியர்கள் உயிரிழப்பார்கள் என்றெல்லாம் ஊடகங்கள், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொண்டிருந்தார்கள். அதிபரோ கிட்டத்தட்ட தினமும் ரேடியோவில் பேசி, நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று மக்களை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்.
முன்பு எப்போதைக் காட்டிலும் பாப்லோவின் மீதான தேடுதல் வேட்டை மிகவும் முனைப்பாக நடந்துகொண்டிருந்தது. அவர் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கூட விடவில்லை. எல்லோரும் கண்காணிப்புக்கு உள்ளானார்கள். சிலரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பாப்லோவை காட்டிக் கொடுக்கச் சொல்லி மிருகத்தனமாக அடித்தார்கள். எல்லாவற்றையும் பாப்லோ பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திடீரென ரேடியோவில் பேசினார்.
“கொலம்பியாவின் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில் இருந்து பாப்லோ பேசுகிறேன். இன்னமும் எனக்கு கொலம்பிய அதிபர் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் சமாதானத்தைத்தான் விரும்புகிறேன். அவரும் அதைத்தான் விரும்புவார் என்று நினைக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் சரணடையத் தயார். ஆனால், கதீட்ரல் சிறையில்தான் சிறையிருப்பேன். அதிபர் முன்பு எங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படிதான் அவர் நடந்துகொள்ள வேண்டும்!” பாப்லோவின் இந்த வாதத்துக்கு மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவை அளித்தார்கள். அரசோடு பாப்லோ தரப்பு வழக்கறிஞர்களும், சர்ச் ஃபாதர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள்.
எனினும், இம்முறை அரசுத் தரப்பு பாப்லோ பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க விரும்பியது. அதாவது அவரைக் கொன்று விடுவது என்றே முடிவெடுத்து விட்டார்கள். எஃப்.பி.ஐ., சிஐஏ, டெல்டா ஃபோர்ஸ், சென்ட்ரா ஸ்பைக், சர்ச் பிளாக்கில் தொடங்கி இராணுவம் வரை அமெரிக்க அரசின் அத்தனை படைகளும் பாப்லோ என்கிற தனி ஒருவனைப் போட்டுத்தள்ள கொலம்பியாவுக்குள் நுழைந்தது.
இம்முறை அமெரிக்கா நுழைய, கொலம்பிய அதிபர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அது மட்டுமின்றி, மெதிலின் கார்டெல்லின் எதிரிகளான காலி, பாப்லோவால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஒரு குழுவென்று உள்ளூர் எதிரிகளும் வேட்டையில் இறங்கினார்கள். பாப்லோவைப் பற்றிய சின்ன துப்பு கொடுத்தால்கூட அவர்களை பல்லாயிரக்கணக்கான டாலர்களில் குளிப்பாட்டுவதாக அமெரிக்கா வாக்கு கொடுத்திருந்தது. ஒற்றை மனிதனுக்கு எதிராக அதுநாள் வரையில் உலகில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டை இதுதான்.
(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்
|