நம் உணவில் இவ்வளவு தவறுகள் இருக்கின்றன!



மற்றபடி, பெரும்பாலானவர்கள் தங்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளதாகவே கருதுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, இங்கு ஐந்தில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படு வதாகக் குறிப்பிடுகிறது. மேலும் அதே ஆய்வில் நான்கில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது. இந்த இரு எதார்த்தங்களுக்கு நடுவில்தான் நமது ‘ஹெல்த்தி வாழ்க்கை முறை’யின் உண்மைத்தன்மை அடங்கியிருக்கிறது.

தமிழர்கள் என்று பொதுவாகச் சொன்னாலும்; தமிழர்களுக்கு என்று பொதுவான உணவுப் பழக்கங்கள் சில இருந்தாலும்; இங்கு ஒவ்வொரு குடும்பத்துக்குமே தனித்துவமான உணவுப் பாரம்பரியம் இருக்கிறது. இவை அந்தக் குடும்பத்தின் பாரம்பரியமான தொழில், சமூக சூழல், அந்தஸ்து, பொருளாதார நிலை ஆகியவற்றால் உருவாகி வந்தது. இந்த அடிப்படை சூழல்கள் மாற மாற உணவுப் பழக்கம் சிறிது மாறினாலும் பெரும்பாலும் அது அப்படியேதான் தொடர்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம் ஆரோக்கியத்தின் நிலையும் அமையும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் சமச்சீரான உணவுப் பழக்கம் தமிழகத்தைப் பொறுத்தவரை கிடையாது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை!
ஃபுட் டைவர்சிட்டி என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது. அதாவது உணவுப் பன்முகத்தன்மை. நாம் உண்ணும் உணவை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்; பால், மீன், முட்டை, மாமிசங்கள் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்தவை; பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து கொண்டவை; காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து; வைட்டமின்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் கொண்டவை; கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் மாவுச்சத்தும் நிறைந்த நட்ஸ், சிறுதானியங்கள் போன்றவை.

எல்லா காய்கறிகள், பழங்களிலும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, நுண்ணூட்டச் சத்துக்கள், ஏ,சி,இ மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஆகியவை இருந்தாலும் அவற்றிலும் சில முக்கியமான பிரிவுகள் உள்ளன. முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றிலும், முருங்கைக் கீரை உள்ளிட்ட பிற கீரைகளிலும் பச்சையம் நிறைந்த இலையின் சத்துக்கள் இருக்கும். அவரை, கொத்தவரங்காய், பீன்ஸ் போன்ற லெக்யூம்ஸ் வேறு வகை. இவற்றில் விதையின் சத்துக்கள் இருக்கும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, கருணைக்கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி போன்ற கிழங்கு களில் வேரின் வாயுத்தன்மை நிறைந்த மாவுச்சத்து இருக்கும்.

இப்படி ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன. நம் மனித உடலுக்கு இவை அனைத்துமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது நம் ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தில் மேற்சொன்ன அத்தனை உணவுப் பிரிவுகளிலும் சுமார் எண்பது சதவீதமாவது இருக்க வேண்டும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நாம் அப்படித்தான் பரவலாக அனைத்துச் சத்துக்களையும் எடுத்துக் கொள்கிறோமா?

ஃபுட் டைவர்சிட்டி பரவலாக இல்லாதபோது அது ஒரு குறைபாடாக மாறுகிறது. உடலால் உணர முடியாத அந்த உணவின் மீதான பசிதான் ஏதேனும் நோயாக மாறுகிறது. ஊட்டச்சத்துக்குக் குறைபாடு என்பது அப்படியான அரூப பசியின் வெளிப்பாடுதான். நமது உடலில் குறிப்பிட்ட சத்துப் போதாமை ஏற்படும்போது அதனால் உடலின் வேதியல் சமநிலை குலைகிறது. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், ஐயோடின், தயமின் ஆகியவை நம் உடல் சிறப்பாக இயங்கத் தேவையான முக்கிய சத்துக்கள்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் உலகம் முழுதும் சுமார் இருபது கோடிப் பேருக்கும் மேல் இப்படியான சத்துப்போதாமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சத்துப் போதாமை என்றதும் ஏதோ வறுமையால்தான் உருவாகிறது என்று நினைக்க வேண்டாம். வசதியான சூழலில் வசிக்கும் ஒருவருக்குக்கூட சத்துப்போதாமை இருக்கலாம். அதற்குக் காரணம் அவரது உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள போதாமை. இந்த வகையில்தான் இன்று தமிழக நகரங்களில் வாழும் இளைய சமுதாயத்துக்கு சத்துப் போதாமை இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்டைல், ஃபேஷன், ட்ரெண்ட் என்ற பெயரில் எந்தவிதமான சத்துக்களும் இல்லாத ப்ராசஸ்டு உணவுகள், சாட் உணவுகள், நொறுக்குத் தீனிகள், பீஸா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஜங்க் ஃபுட்ஸை மட்டுமே உண்டுவிட்டு, கோலா பானங்கள், டீ, காபி போன்றவற்றை மட்டுமே பருகுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சேராமலே போய் விடுகின்றன. இந்திய அளவில் இரும்புச்சத்துக் குறைபாடு கொண்ட இளம்பெண்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதே இதற்கு சாட்சி.

இரும்புச்சத்துக் குறைபாடு நமது பாடுபடும் திறனைக் குறைப்பதோடு பெண்களுக்கு கர்ப்ப கால சிக்கல்களையும் உருவாக்குகின்றது. பொதுவாகவே இந்தியர்கள் ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வதில் கொஞ்சம் மோசம்தான் என்கிறார்கள். நகர்ப்புற இந்தியர்களில் பெரும்பாலானோர் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்தில் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அதேபோல் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி2 தேவையான அளவில் பாதிதான் உடலில் சேர்கிறது. கால்சியம் தேவையில் அறுபத்து ஏழு சதவீதமும் இரும்புச்சத்துத் தேவையில் எழுபத்து ஏழு சதவீதமும்தான் எடுத்துக்கொள்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் அரிசியை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுதான் மிகப் பெரிய பிரச்னை. அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதிலும் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையைச் சேர்ப்பதிலும் கார்போஹைட்ரேட் நிகர் இல்லாதது. ஆனால், உடலில் சேரும் கார்போஹைட்ரேட் மூலம் உருவாகும் ஆற்றல் சரியான விகிதத்தில் உடலை விட்டு வெளியேறா விட்டால், அது கொழுப்பாக உடலிலேயே தங்கிவிடுகிறது.

அதன் விளைவுதான் உடல் பருமன், தொப்பை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை. எனவே, தினமும் மூன்று வேளையும் அரிசி என்பதற்குப் பதிலாக சிறுதானியங்களை ஏதேனும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். சிறுதானியங்களில் கார்போஹைட்ரேட் தவிர புரதச்சத்தும், நார்ச்சத்தும், நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சிலவற்றில் கொழுப்புச்சத்துகூட கணிசமாக உள்ளது. சென்ற நூற்றாண்டு வரை நம் முன்னோர் சிறுதானியங்களைத்தான் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.. மொத்தத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைத் தவிர்த்தாலே நாம் ஆரோக்கியமாக வாழ்வோம்!                      
      

- இளங்கோ கிருஷ்ணன்