கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர்!



சில மாதங்களுக்கு முன் நம் எல்லோரது மனதிலும் ஆழமாகப் பதிந்த பெயர், மது. கேரளாவைச் சேர்ந்த பழங்குடி மனிதரான அவர், கடையில் திருடிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார். இத்தனைக்கும் அவர் எடுத்தது பசியைப் போக்குவதற்கான உணவுப் பொருளை. மனநலம் சரியில்லாத அவர் கொல்லப்பட்டதற்கு கேரள முதல்வரில் இருந்து சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

நூறு சதவிகித கல்வி அறிவு கொண்ட மாநிலம் என போற்றப்படும் கேரளாவில் இன்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்திலேயே இருக்கிறது என்பதையே இச்சம்பவம் படம் பிடித்துக் காட்டியது. இந்தச் சூழலில்தான் பழங்குடி இனத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வலது காலை எடுத்து வைத்து மலையாளத் திரையுலகில் நுழைந்திருக்கிறார் லீலா சந்தோஷ்.

வயநாட்டிலுள்ள பின்தங்கிய கிராமத்தில், பனியர் என்ற பழங்குடி இனத்தில் பிறந்த லீலாதான் கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர்! இத்தனைக்கும் பள்ளிக்குச் சென்று முறையாகப் படித்தவர் அல்ல இவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் உதவி இயக்குநராகி ஆவணப்படம் எடுத்து இப்போது ‘கரிந்தண்டன்’ படத்தின் வழியே டைரக்டராகி இருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தியத் திரையுலகை அதிர வைத்திருக்கிறது. காரணம், இப்படம் பீரியட் சினிமா!

கேரளத்தின் இயற்கை எழிலை தன்வசம் நிரப்பி வைத்திருக்கும் மலைப்பிரதேசமான வயநாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கரிந்தண்டன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் கோழிக்கோட்டில் வீற்றிருக்கும் தாமரைச்சேரி மலைப்பகுதிக்கு அருகிலிருக்கும் சிறு பகுதியில் வசித்து வந்த பனியர் பழங்குடி இனத்தவர்களின் தலைவராக இருந்திருக்கிறார். வயநாடு மலைப்பகுதியைக் கண்டுபிடித்தவர் கரிந்தண்டன்தான் என்றும், ஆங்கிலேய எஞ்சினியர் ஒருவர் அவரைக் சுட்டுக் கொன்றுவிட்டார் என்றும் அவரைப் பற்றிய கதைகள் பலவிதமாக உலவுகின்றன.

அத்துடன் கரிந்தண்டனின் ஆவி இன்றும் வயநாட்டு மலைப்பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும், அவரது ஆன்மா அங்கிருக்கும் ஓர் ஆலமரத்தில் குடியிருப்பதாகவும் பனியர் இன மக்கள் நம்புகின்றனர். இப்படிப்பட்ட கரிந்தண்டனின் வாழ்க்கையைத்தான் படமாக எடுத்திருக்கிறார் லீலா! வாங்க இயக்குநரே வாங்க!

- த.சக்திவேல்