அஜித் உழைக்கத் தயங்காதவர்!
சத்யஜோதி தியாகராஜனுடன் Exclusive சந்திப்பு!
தமிழ் சினிமாவின் மதிப்பிற்குரிய ‘ஐகான்’ தயாரிப்பாளர்களில் ஒருவர் ‘சத்யஜோதி’ தியாகராஜன். ரஜினியின் இமேஜுக்கு ஜனரஞ்சக உயிர் கொடுத்தவர். கமலோடு ஆழ்ந்த நட்பு கொண்டவர். பேச்சில் தெறிக்கும் பக்குவத்தோடு நிதானமாக தமிழ் சினிமாவைக் காட்சிப்படுத்திய தியாகராஜனின் சந்திப்பு அருமையானது. எந்தவித இடையூறும் இன்றி தன் பயணத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்...
எங்க அப்பா வீனஸ் கோவிந்தராஜன். அவருடைய நண்பர்கள் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர் ஸ்ரீதர். முதன் முதலாக ‘அமரதீபத்’தில் தங்கள் பயணத்தை மூன்று பேரும் ஆரம்பிச்சாங்க. படம் பெரிய ஹிட். தொடர்ந்து ‘உத்தமபுத்திரன்’, ‘கல்யாண பரிசு’னு நல்ல படமாகவும், நல்ல வசூலும் கிடைத்த சமயம். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிஞ்சு போய் ‘சித்ராலயா’ ஆரம்பிச்சிட்டார். பிறகு வீனஸ் பிக்சர்ஸ் தமிழ், தெலுங்குன்னு பெரிய வட்டமாக விரியிறாங்க. பிறகு சரிவைச் சந்திக்கிறாங்க.
நான் அப்போது கலிபோர்னியாவில் படிச்சிட்டு இருக்கேன். அந்த சமயம் பார்த்து வீனஸ் பிக்சர்ஸ் ரொம்பவும் நெருக்கடியைச் சந்திக்குது. இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க அம்மாகிட்டே இருந்து அழைப்பு வந்து சென்னைக்குத் திரும்பிட்டேன். வீனஸ் பிக்சர்ஸை மூட வேண்டிய சூழல். எங்களுக்கு வீனஸ் காலனியில் இருந்த வீடுகள், கம்பம் பக்கத்தில் இருந்த நிறைய எஸ்டேட்டுகளை விற்றுக் கடன்களை அடைத்தோம். அந்த சமயம் பட்ட பாடு சொல்லித் தீராது. ‘தம்பி, கரண்ட் பில் கட்டலைடா, ஏற்பாடு பண்ணு...’னு அம்மா போன்ல சொல்வாங்க. நொந்து போயிட்டேன்.
அந்த சமயம் ரொம்ப உதவியாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் சார். எம்ஜிஆர் கூப்பிட்டு அனுப்பி அப்பா போய் பார்த்தார். ‘உங்க நிலைமை புரியுது. கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு ஒரு படம் பண்ணித் தரேன்...’னு சொல்லி, கம்பெனிக்கு ‘சத்யஜோதி பிலிம்ஸ்’னு அவரே பெயர் வைத்தார். ஆனா, அப்ப பார்த்து அவர் அரசியலில் இறங்கிவிட்டதால் எங்களுக்குப் படம் பண்ணித் தர முடியலை. எம்ஜிஆருக்கு துணையாக ஆர்.எம்.வியும் அரசியலில் இறங்கிட்டார். என்னை ‘சத்யா மூவீஸ்’ நிறுவனத்தைப் பார்த்துக்கச் சொன்னார். அப்புறம் ஆர்.எம்.வீ.யின் மகள் செல்வியே எனக்கு மனைவியாக அமைந்தார். ‘சத்யஜோதி’ நிறுவனத்தையும் அதே நேரத்தில் ஆரம்பிச்சேன்.
அப்போது மணிரத்னம் சிபாரிசு செய்து பாலுமகேந்திராவை வைத்து ஒரு படம் செய்தோம். அதுதான் ‘மூன்றாம் பிறை’. விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டுக் காண்பிச்சோம். அப்ப கமல் ‘சகலகலா வல்லவன்’ மாதிரியான படங்களில் நடிச்சுக்கிட்டு இருந்த காலம். படத்தைப் பார்த்த சில பேர் ‘ரொம்ப கிளாஸா இருக்கு. ஓடாது...’னு சொல்லிட்டாங்க. ஆனால், படம் பெரும் வெற்றி. சிட்டியில் ஒரு வருஷம் ஓடுச்சு. பிறகு ரஜினிக்கு ஆறு படம், கமலுக்கு இரண்டு படம்னு செய்திட்டோம்.
இதற்கு நடுவில் சின்னத்திரையில் நுழைஞ்சோம். எங்களை நம்பி இருக்கிற ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலை தர வேண்டியிருந்தது. ‘சன் டிவி’யில் பெரிய ஓபனிங் கொடுத்தாங்க. ‘ஆனந்தம்’ சீரியல் 1250 எபிஸோட்ஸ் தாண்டிப் போனது. சின்னத்திரையில் தொடர்ந்து இயங்குகிறோம். 2000-த்திற்கு மேல் சினிமா அடியோடு மாறி விட்டது. எல்லாம் மாறும்போது சினிமாவும் மாறத்தானே செய்யும்! முன்னாடி பூஜை போட்டால் படம் வாங்க வருவாங்க. பட்ஜெட் போட்டு விலையைச் சொல்லுவோம். வாங்கிட்டு போயிடுவாங்க. ரிலீஸின்போது பாக்கித் தொகையை செட்டில் பண்ணுவாங்க.
படம் ஓடியதுன்னா, அவங்களாப் பார்த்து ஏதாவது கொடுப்பாங்க. படம் சரியாகப் போகலைன்னா அவங்களைக் கூப்பிட்டு, ‘அடுத்த படம் நாங்க செய்றோம்.. வெளியே இவ்வளவு மார்க்கெட் இருக்கு. உங்களுக்கு இவ்வளவு கம்மி பண்ணித் தர்றோம்...’னு சொல்வோம். அதைப் புரிஞ்சுக்கிட்டு போவாங்க. இப்போ Cost of Production கூடிப்போச்சு. ரிஸ்க் அதிகமாகி விட்டது. வியாபாரத்தில் ஒரு certainty இல்லாமல் போச்சு.
சினிமா ஒரு வியாபாரமாக இருக்கும்போது அதை வீண் செலவுகளில் வீணடிப்பதை நான் விரும்புவது இல்லை. 40 வருஷங்களா இங்கே இருக்கேன். முதல்ல project நம்ம கண்ட்ரோலில் இருக்கணும். தயாரிப்பாளராக நுணுக்கங்கள் புரிபட்டு இருக்கணும். வேலைகள் மிக நியாயமாக நடக்கணும். நான் ரொம்ப கண்டிப்புன்னு என்கிட்டே வராதவங்களும் இருக்காங்க! எந்தச் செலவு செய்தாலும் அது படத்தில் வந்தாகணும்னு விரும்புவேன். என் அனுபவத்தில் தெரிஞ்சுகிட்டது ஜெயிச்சுக்கிட்டே இருந்தால்தான் எல்லாம் நல்லாயிருக்கும். ரொம்ப முக்கியம், ஒரே சமயத்தில் பல Projects கையில் இருக்கக்கூடாது. நம்ம கவனம் எதிலும் இல்லாமல் போயிடும்.
இப்ப ஒரு சமயத்திற்கு ஒரு படம்தான். ‘தொடரி’, ‘சத்ரியன்’, ‘விவேகம்’னு மூணும் சேர்ந்த மாதிரி க்ளாஷ் ஆகிவிட்டது. இப்ப கவனமாக இருக்கோம். என் மகன்கள் செந்தில், அர்ஜுன் இரண்டு பேரும் பாரீனில் படிச்சுட்டு எனக்கு உதவியாக வந்துட்டாங்க. என் சகோதரன் சரவணனும் துணையாக இருக்கார்.
ஒருநாள் நாச்சியப்பன் சார் பாக்யராஜை கூட்டிட்டு வந்தார். அவர் கதை சொல்லி நாங்க இம்ப்ரஸ் ஆகிட்டோம். அவ்வளவு சிம்பிளாக இருந்தார். அவருக்கு நடிக்க, கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்ய ஒரு லட்சம்தான் கேட்டார். அந்தப் படம்தான் ‘அந்த ஏழு நாட்கள்’!‘பணக்காரன்’ படத்துக்காக ரஜினிக்கு ஒரு சம்பளம் பேசி முடிச்சிட்டோம். அப்ப ‘தளபதி’க்காக ஜீவி. வந்து ரஜினிக்கு சம்பளம் பேசிட்டு, கூடவே பெரிய தொகையைச் சேர்த்து கொடுத்திட்டுப் போயிட்டார். ‘உங்களுக்கு வேற மார்க்கெட் இருக்கு...’னு ரஜினி சார்கிட்டே சொல்லிட்டார். ரஜினி சார் மனதில் ஏதோ பதிவாகிவிட்டது. ‘அவர் disturb-ல் இருக்கார்...’னு பி.வாசு சொன்னார். ரஜினி வரச்சொல்ல நான் போனேன். ‘ஜீ.வி. வந்தார். அப்படி இப்படின்னு சொன்னார்...’னு சொன்னார்.
நான் உடனே ரஜினிகிட்டே ‘ஜீ.வி ஒரு Proposal Maker. ஆர்.எம்.வீ. அப்படியில்லை. அவர் விநியோகஸ்தர்கள்கிட்டே பேசிட்டார். பேசினது பேசினதுதான். திருப்பி அவங்ககிட்டே போக மாட்டார். இருந்தாலும் உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்து தருகிறேன்...’ என்றேன். கொஞ்சம் யோசிச்ச ரஜினி ‘நமக்குள்ள எதுவுமே நடக்கலை. மறந்துடுங்க. ஆர்.எம் வீ. கிட்டே எதுவும் போக வேண்டாம்...’னு சொன்னார். அவ்வளவு நேர்த்தியானவர் ரஜினி.
‘தங்க மகன்’ பண்ணும்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. போட்டிருந்த செட் ரெண்டு மாசமா நின்னுபோச்சு. உடம்பு சரியானதும் முடிச்சோம். பாக்கித் தொகையைக் கொண்டுபோய் கொடுத்தோம். ‘இல்லை, என்னால கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. திருப்பி வாங்கிக்கங்க...’ன்னு சத்யநாராயணாகிட்ட பணத்தை கொடுத்து விட்டார். ஆர்.எம்.வீயோ ‘இதை அடுத்த படத்திற்கு அட்வான்ஸ்...’னு சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். ரஜினி அந்த அளவுக்கு ஜென்டில்மேன். அவரை வைச்சு நாங்க எடுத்த அடுத்தபடம்தான் ‘மூன்று முகம்’.
எங்களின் ‘விவேகம்’ படத்துக்குப் பிறகு ‘விசுவாசத்’திலும் அஜித் நடிக்கிறார். அவரை முதன் முதலில் ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு மாடல் ஷூட்டில் பார்த்தேன். அதற்குப் பிறகு ‘விவேகம்’ தொடங்குவதற்கு முன்னால் பார்த்தேன். அப்பொழுது எங்களின் பழைய சந்திப்பை இன்னும் அவர் நினைவாக வைத்திருந்தார். அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது.
எவ்வளவு பணிச்சுமையிலும் உடல் நலத்தை அடுத்த இடத்தில் வைத்துவிட்டுத்தான் நடிக்கிறார். கஷ்டமான சூழலிலும் இப்படி மனமுவந்து நடித்துக்கொடுப்பது பெரிய குணம். அவரை எந்த நேரம் வேண்டுமானாலும் நடிக்க அழைக்கலாம். சந்தோஷமாக நடித்துக் கொடுப்பார். படம் நன்றாக வர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நினைவாக இருக்கும்.
அவரோடு நடிக்க ஒவ்வொரு நடிகர்களும் விரும்புகிறார்கள். அவரது உபசரிப்பு தன்னிகரில்லாதது. ஏதாவது ஒரு நாள் வேலை சற்று குறைவாக இருக்கும்போது மொத்த யூனிட்டுக்கும் அவரே சமைத்து உணவை பரிமாறுவார்! நான் கூட இருந்து பார்த்தவரையிலும் அவர் உழைக்கத் தயங்கி ஒரு நாளும் பார்த்ததில்லை. எனக்கு நல்ல சினிமாவோ, பொழுதுபோக்கு சினிமாவோ, கடுமையாக உழைக்கணும். சினிமாவோட ஹார்ட் பீட் திரும்ப நல்லா வரணும். அதுதான் என் விருப்பம்!
- நா.கதிர்வேலன் படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|