ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கே.என்.சிவராமன் - 10


‘‘சண்டையிட வரவில்லை. சிவகாமியின்
சபதம் குறித்து பேசவே
வந்திருக்கிறேன்!’’

சொன்ன அந்த மனிதன் சிவகாமியின் கழுத்தில் பதித்திருந்த தன் குறுவாளை எடுத்துவிட்டு அவளை கரிகாலனை நோக்கித் தள்ளினான். தனது வாள் வீச்சை அநாவசியமாகத் தடுத்து நிறுத்திவிட்டு எதுவும் நடக்காததுபோல் தனது சபதம் குறித்து அந்த மனிதன் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், மிதமான வேகத்தில் அவன் தள்ளியதாலும், பரந்து விரிந்திருந்த கரிகாலனின் மார்பில் வந்து சிவகாமி விழுந்தாள். என்றாலும் சமாளித்து அவன் தோளை உரசியபடி அருகில் நின்றாள்.

பலவித உணர்ச்சிகளும் கேள்விகளும் அலைக்கழித்ததால் கரிகாலன் அவளைத் தாங்கிப் பிடிக்கவுமில்லை. தோளோடு உரசிய அவள் தோளுக்கு ஆறுதலோ செய்தியோ சொல்லவும் முற்படவில்லை. தன் முன்னால் அலட்சியமாக நின்றிருந்த அந்த மனிதனை உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசினான். நாற்பது வயதிருக்கும். விடாமல் உடற்பயிற்சி செய்பவன் என்பதற்கு அறிகுறியாக அவன் உடல் உருண்டு திரண்டு கட்டுக்கோப்புடன் காணப்பட்டது. வயிறு ஒட்டியிருந்தது. அது பசியினால் அல்ல என்பதைக் குறித்துக் கொண்டான். அதிக உயரமில்லை. அதேநேரம் உயரம் குறைவுமில்லை. கை மணிக்கட்டில் வாள் காயங்கள் தென்பட்டன. அக்காயங்கள் வேறு இடங்களில் படராததால் வாள் வீச்சில் அந்த மனிதன் சளைத்தவனில்லை என்பது புரிந்தது. கூர்மையான நாசி. நாடி, நரம்பை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை. முகம் மட்டும் எங்கோ பார்த்தது போலவும் நெருக்கமாகவும் தோன்றியது.

பார்வையை இடுக்கி அம்முகத்தை கரிகாலன் உள்வாங்கினான். மனதுக்குள் பதிந்திருந்த பல்வேறு முகங்களின் பிம்பங்களோடு அதை சரசரவென ஒப்பிட்டான். சட்டென்று அவன் கண்கள் விரிந்தன. இந்த மனிதன்... தவறு... ஒருமையில் விளிக்கக் கூடாது. இந்த மனிதர்... அவரா..? கரிகாலன் தன்னை இனம் கண்டுகொண்டான் என்பதை உணர்ந்த அந்த மனிதரும் ஆமோதிக்கும் வகையில் கண் சிமிட்டினார். கம்பீரமும் எதிர்க்கும் உணர்வும் மறைந்து தன் உடல் முழுக்க மரியாதை பரவுவதையும் அது தன் உடல்மொழியில் வெளிப்படுவதையும் அறிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அவ்வுணர்வுக்குக் கீழ்ப்படிந்து தன் முன்னால் நிற்பவருக்கு வணக்கம் தெரிவிக்க அவன் முற்பட்டபோது சிவகாமியின் குரல் அச்சூழலை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றது. ‘‘யார் நீ? எனது சபதம் குறித்து உனக்கு என்ன தெரியும்..?’’ ‘‘பரவாயில்லையே... கரிகாலனுடன் இணைந்து இயைந்து பயணப்பட்டதில் பக்குவப்பட்டு விட்டாயே..?’’ முகம் மலர அந்த மனிதர் புன்னகைத்தார். கரிகாலன் மெளனமாக இருப்பதைக் கவனித்துவிட்டு குழப்பத்துடன் தானே உரையாடலைத் தொடர்ந்தாள். ‘‘எதைக் குறிப்பிடுகிறாய்?’’ ‘‘மல்லைக் கடலுக்கும் இந்த வனத்துக்குமான இடைப்பட்ட தூரத்தை!’’ தடங்கலின்றி அந்த மனிதர் பதிலளித்தார்.

‘‘என்ன சொல்கிறாய்..?’’ சிவகாமியின் குரலில் மெல்ல மெல்ல கோபம் படர ஆரம்பித்தது. ‘‘உண்மையை!’’ அலட்சியமாக விடையளித்த அந்த மனிதர் நிதானமாக சிவகாமியை நெருங்கினார். ‘‘மல்லைக் கடலில் கரிகாலனுக்குச் சமமாக மூழ்கியும் மூழ்காமலும்; நீந்தியும் நீந்தாமலும் ஒரு மனிதனை நெருங்கினாய். வாள் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாய். அப்போது அந்த மனிதனும் உனது சபதத்தைக் குறித்துத்தான் குறிப்பிட்டான். உன்னை நம்ப வேண்டாமென்றும் கரிகாலனிடம் அழுத்திச் சொன்னான். பல்லவ அரச குடும்பத்தை வீழ்த்த வந்திருக்கும் கோடரி என உன்னைச் சுட்டினான். அப்போது நீ கோபம் கொண்டு உன் வாளை உயர்த்தி அவனைத் தாக்க முற்பட்டாய். கரிகாலன் அதைத் தடுத்தான்!’’
நேரில் பார்த்தது போல் நடந்த சம்பவங்களை அப்படியே விவரித்த அந்த மனிதர் கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தபடியே தொடர்ந்தார்.

‘‘கதம்ப இளவரசரை உனக்கு அறிமுகப்படுத்தினான்! அதே நிகழ்வுதான் இங்கும் அரங்கேறியிருக்கிறது. என்ன... உனது சபதத்தை மட்டுமே நான் குறிப்பிட்டேன். மற்றபடி பல்லவ அரச குடும்பத்தைச் சிதைக்க வந்தவளாக உன்னைக் கருதவில்லை! ஒருவேளை அதனால்தான் கதம்ப இளவரசன் இரவிவர்மனுக்குக் கொடுத்த வாள் மரியாதையை இப்போது எனக்கு நீ வழங்கவில்லையோ என்னவோ! என்றாலும் நீ பக்குவப்பட்டிருப்பதாக நான் நினைப்பது பொய்யாக இருந்தாலும் அதில் எனக்கு ஆனந்தமிருக்கிறது! எனவே அப்படியே கருதிக் கொள்கிறேன்! என்ன கரிகாலா, நான் சொல்வது சரிதானே? சரியாகத்தான் இருக்கும்.

சற்று நேரத்துக்கு முன் நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை என் கண்ணால் கண்டேனே! பக்குவப்படுத்தித்தான் இருக்கிறாய்! உன் தீண்டல் வாள் மகளைக் குழைத்து வைத்திருக்கிறது!’’ வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதரை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் சிவகாமி தன் பார்வையைத் தாழ்த்தினாள். எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆனந்தத்தை அல்லவா சற்று நேரத்துக்கு முன் கரிகாலனுடன் அனுபவித்தாள்..? அது அவளுக்கு மட்டுமே உரியதல்லவா..? அதைப்பற்றி முன்பின் அறியாத ஒரு மனிதர் அவளிடமே விவரிக்கும்போது அர்த்தங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுதானே பூக்கும்? சிவகாமிக்குள்ளும் அதுவேதான் பூத்தது. குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை.

இதற்கு மேலும், தான் அமைதியாக இருப்பது அழகல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான். எனவே எதிரிலிருந்த மனிதரை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். ‘‘இவர் உன்னை ஒருமையில் அழைத்ததற்காக வருத்தப்படாதே சிவகாமி. அந்த உரிமை இவருக்கு இருக்கிறது!’’ ‘‘என்ன உரிமை?’’ சட்டென பார்வையை உயர்த்தி கரிகாலனை ஊடுருவினாள். ‘‘தகப்பன் உரிமை!’’கரிகாலன் இப்படிச் சொன்னதுமே சிவகாமியின் உணர்வுகள் தாண்டவமாடின. ‘‘புரியவில்லை...’’‘‘பல்லவ மன்னர் உன்னைத் தனது மகளாகக் கருதுகிறார் அல்லவா?’’
‘‘ஆம். அவர் என் தந்தைக்குச் சமமானவர்..!’’‘‘எனில், இவர் உன் சிறிய தந்தை!’’‘‘என்ன..?’’‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் சித்தப்பா மகன்தான் இவர்!’’ என்று சொன்ன கரிகாலன் முறைப்படி அவரை வணங்கினான்.

அதை ஏற்று தலையசைத்த அந்த மனிதர் சிவகாமியை வாஞ்சையுடன் பார்த்தார். ‘‘அடியேனை ஹிரண்ய வர்மன் என்பார்கள்! ஹிரண்யன் என என்னை பெயர் சொல்லியும் நீ அழைக்கலாம்! தந்தையை பெயர் சொல்லி மகள் அழைப்பது உலக வழக்கம்தானே!’’ மறுகணம் முன்னால் வந்து ஹிரண்ய வர்மரின் காலைத் தொட்டு சிவகாமி வணங்கினாள். ‘‘மனம் போல் மாங்கல்யம் அமையட்டும் மகளே! உனக்கு ஏற்ற மணமகனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்!’’ தோளைத் தொட்டு அவளை நிமிர்த்தினார் ஹிரண்ய வர்மர்.

‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும் கரிகாலனை விட்டுவிடாதே! உன்னைப்பற்றிய சந்தேகங்களை கதம்ப இளவரசன் இரவிவர்மன் கிளப்பியபிறகும் புலவர் தண்டியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உன்னிடம் எதையும் விசாரிக்காமல், முழுமையாக நம்புகிறானே... இப்படி ஒருவன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்! பரஸ்பர நம்பிக்கைதான் வாழ்க்கைப் பயணத்தை எல்லா சிரமங்களிலும் கடக்க வைக்கும்! இவன் உன்னை தன் கைகளில் ஏந்திக் கடக்கவும் வைப்பான்; உன் சபதம் நிறைவேறவும் துணை புரிவான்!’’

சிறிய தந்தை சொல்லச் சொல்ல தன் கன்னங்கள் சூடாவதை சிவகாமி உணர்ந்தாள். ஓரக் கண்ணால் கரிகாலனைப் பார்த்துவிட்டு நிலத்தை அளந்தாள். கண்கொள்ளாக் காட்சியாக ஹிரண்ய வர்மருக்கு இது அமைந்தது. மகளின் மலர்ந்த வெட்கம் எப்போதும் தந்தையை மகிழ்விக்கும்! ‘‘உங்கள் இருவரது வீரத்தை அளவிடத்தான் சற்று முன் என் வீரர்களை வைத்து நாடகமாடினேன். எதிர்பார்த்ததுக்கு மேலாக இருவரும் அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இனி நாம் காலத்தைக் கடத்த வேண்டாம். வாருங்கள்..!’’‘‘எங்கு மன்னா!’’ என்று கரிகாலன் கேட்கவில்லை.

மாறாக சிவகாமி ‘‘எங்கு தந்தையே!’’ என்று கேட்டாள். ‘‘ஆயுதச் சாலைக்கு மகளே! கரிகாலா... நாம் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடந்திருக்கிறது. காஞ்சியும் பல்லவ நாடும் இப்போது சாளுக்கியர்களின் வசம். போருக்கு இன்னும் சில திங்களே இருக்கின்றன. அதற்குள் பல்லவ இளவலை நீங்கள் அழைத்து வர வேண்டும். இடையில் உங்களைச் சந்தித்து ஆயுதச் சாலை இருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டும்படி புலவர் தண்டி உத்தரவிட்டிருக்கிறார்.

அதனால்தான் இங்கு வந்தேன். புரவிகள் வேண்டாம். நடந்தே செல்லலாம் வாருங்கள்...’’ என்றபடி ஹிரண்ய வர்மர் வனத்துக்குள் புகுந்தார். ‘‘இதற்காகவா கடல் கடந்து உங்கள் நாட்டிலிருந்து வந்தீர்கள்?’’ சிவகாமியுடன் அவரைப் பின்தொடர்ந்தபடி கரிகாலன் கேட்டான். ‘‘அண்ணனுக்கு உதவ வேண்டியது என் கடமையல்லவா? நரசிம்ம வர்மர் வாதாபியைத் தீக்கரையாக்கியபின் சாளுக்கியர்கள் எப்போது வேண்டுமானாலும் பழிக்குப் பழி வாங்க முற்படுவார்கள் என்று தெரியும். அதை எதிர்கொள்ள வேண்டுமென்று வணிகர்கள் வழியாக அவ்வப்போது ஆயுதங்களை அனுப்பி மறைவிடத்தில் சேகரித்து வருகிறேன்...’’ அதன்பிறகு மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெளனமாக நடந்தார்கள். அரை நாழிகை பயணத்துக்குப் பின் மலையடிவாரத்தை அடைந்தார்கள்.

‘‘இதற்குள்தான் ஆயுதங்கள் இருக்கின்றன!’’ கம்பீரமாக அறிவித்தார் ஹிரண்ய வர்மர். ‘‘மலைக்குள்ளா..?’’ கரிகாலன் புருவத்தை உயர்த்தினான். ‘‘ஆம். மலையின் கர்ப்பத்தில் பாதுகாப்பாகக் குடிகொண்டிருக்கிறது!’’‘‘சுரங்கத்தின் திறவுகோல் எங்கிருக்கிறது தந்தையே!’’ பரபரப்புடன் சிவகாமி கேட்டாள். ‘‘புத்திசாலிப் பெண்!’’ மெச்சிய ஹிரண்ய வர்மர், ஆளுயரப் பாறைகளுக்கு மேல் இருந்த உச்சியை தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். ‘‘அங்கு!’’மறுகணம் மடமடவென்று பாறை மீது சிவகாமி ஏறத் தொடங்கினாள்.

கரிகாலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மாலைச் சூரியன் அவளை ஒளியால் நீராட வைத்தான். இதனைத் தொடர்ந்து செண்பக மலர் இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழுவழுப்பையும் பெற்று பொன் அவிழ்ந்து கொட்டுவது போல் அவள் மேனி தங்கத் தகடாகப் பளபளத்தது. அந்தக் கணத்தில் அவள் சரீரமே ஸ்ரீசக்கரமாக ஜொலித்தது. பார்வை ஊசியால் மடமடவென்று பிசிறின்றி அவள் மேனியென்னும் தகட்டில் ஸ்ரீசக்கரத்தை வரைய ஆரம்பித்தான்.

கால்களை உயர்த்தி உயர்த்தி அவள் ஏறியபோது பிரஹ்ம ரந்தரம், பிந்துஸ்தானமாகவும்; சிரசு, திரிகோணமாகவும்; நெற்றி, அஷ்டகோணமாகவும்; புருவ மத்தி, அந்தர்த்தசாரமாகவும்; கழுத்து, பஹிர்த்தசாரமாகவும்; ஸ்தனங்கள், மந்வச்ரமாகவும்; நாபி, அஷ்டதள பத்மமாகவும்; இடுப்பு, ஷோடசதள பத்மமாகவும்; தொடைகள், விருத்தத்ரயமாகவும்; பாதங்கள், பூபுரமாகவும் மாறி முழுமை பெற்றன. ‘‘பார்வையைத் திருப்பாமல் சொல்வதை மட்டும் கேள் கரிகாலா!’’ஹிரண்ய வர்மரின் குரல் அவனை நடப்புக்குக் கொண்டு வந்து நிறுத்தியது.

‘‘சொல்லுங்கள் மன்னா!’’ ‘‘புலவர் தண்டியிடம் பாடம் கற்றதால் நீயும் சாக்த உபாசகனாகி இருக்கிறாய்! அதனாலேயே மனம் கவர்ந்த பெண்ணின் உடல், ஸ்ரீசக்கரமாக உனக்குக் காட்சியளிக்கிறது!’’ ‘‘இதை தவறென்று சொல்கிறீர்களா?’’‘‘ஆண் / பெண் விஷயத்தில் சரி / தவறு என மூன்றாம் மனிதர் கருத்து சொல்ல முடியாது. தன்னை ஆவாஹனம் செய்யச் சொல்லி ஆணிடம் தன்னையே ஒரு பெண் ஒப்படைத்தபின் தந்தையானாலும் அவன் அந்நியன்தான்...’’‘‘மன்னா!’’‘‘சொல்ல வந்தது வேறு. சிவகாமி விஷயத்தில் புலவர் தண்டி சொல்வதை எந்தளவுக்கு நம்புகிறாயோ அதே அளவுக்கு கதம்ப இளவரசன் இரவிவர்மன் சொன்னதையும் நம்பு!’’ ‘‘...’’ ‘‘பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவரையும் என்அண்ணனையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்துவிடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தைக் காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்