கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து!



இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாவலன் என்றால் அது ‘ஆக்ஸிடோசின்’ மருந்துதான். பிரசவத்தை துரிதப்படுத்தவும், குழந்தைக்குப் பாலூட்டுவதை இலகுவாக்கவும் உதவிக்கரம் நீட்டுவது இந்த மருந்துதான். ஆனால், ‘‘ஆக்ஸிடோசினை மாடுகளுக்குக் கொடுத்து பால் உற்பத்தியை அதிகரிக்கிறார்கள். இது மாடுகளுக்கும், பாலை அருந்தும் மனிதர்களுக்கும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்...’’ என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இதனால் இந்த மருந்தை தடை செய்யும் முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு.

‘‘ஆக்ஸிடோசினுக்கு முழுத்தடை என்று அரசு அறிவிக்கவில்லை. கர்நாடகாவில் உள்ள அரசு மருந்துக் கம்பெனியில் மட்டுமே இனி இந்த மருந்து தயாரிக்கப்படும் என்று சொல்கிறார்கள். இதனால், இதுவரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த இந்த மருந்து இனி பரவலாகக் கிடைக்காது. கர்ப்பிணிகளுக்கு அவசியமான மருந்தை இப்படி ஓரிடத்தில் மட்டும் தயாரிப்பது சரியல்ல...’’ என்று ஆரம்பித்த மகப்பேறு மருத்துவர் ஜெய்ஸ்ரீ கஜராஜ், ஆக்ஸிடோசினின் அவசியத்தை விளக்கினார்.

‘‘கருவின் வளர்ச்சியை வைத்து பிரசவ நாள் குறிக்கப்பட்டாலும், பல பெண்களுக்கு பிரசவத்துக்குத் தேவையான கர்ப்பப்பை வலி ஏற்படாது. குழந்தையை வெளியே தள்ளு வதற்காக கர்ப்பப்பை சுருங்கி விரியும்போதுதான் அந்த வலி உண்டாகும். இந்தச் செயலுக்கு உதவுவது ஆக்ஸிடோசின்தான். உண்மையில் ஆக்ஸிடோசின் என்பது பெண்களின் உடலிலேயே சுரக்கும் ஒருவித ஹார்மோன். இது போதுமான அளவில் சுரக்காதபோது இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆக்ஸிடோசினை பெண்களின் உடலில் ஊசிமூலம் செலுத்துவோம். இது பிரசவத்தை எளிதாக்கும்.

தவிர, ‘இந்தியாவில் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் இரத்த இழப்பால் 10 - 20 சதவீத பெண்கள் மரணமடைகிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதையும் ஆக்ஸிடோசின் கட்டுப்படுத்துகிறது. ஆம். பிரசவத்தின்போது கர்ப்பப்பை சுருங்கி விரிய உதவும் ஆக்ஸிடோசின், பிரசவம் முடிந்ததும் கர்ப்பப்பையை பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரவும் உதவுகிறது. இப்படி கர்ப்பப்பை பழைய நிலைக்குத் திரும்பாதபோதுதான் இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்த இரத்த இழப்பால் உயிரிழப்பவர்களில் அதிகமானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள்தான். காரணம், கிராமங்களில் இந்த மருந்து பரவலாகக் கிடைப்பதில்லை.

இந்தச் சூழலில் ஓரிடத்தில் மட்டும் ஆக்ஸிடோசின் தயாரிக்கப்பட்டால் தட்டுப்பாடு ஏற்பட்டு நகரங்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்...’’ என்று எச்சரிக்கிற ஜெய்ஸ்ரீ, குழந்தைக்குப் பாலூட்டுவதில் இந்த மருந்தின் தேவை, செயல்பாடு குறித்தும் பேசினார். ‘‘பால் சுரப்பான்களில் சுரக்கும் பாலை அழுத்தம் கொடுத்து பிழிந்து வெளியே கொண்டுவரவும் இதே மருந்துதான் உதவுகிறது. தாயின் முயற்சி இல்லாமலேயே குழந்தையின் வாயில் பால் இலகுவாகச் சேர இந்த அழுத்தம் முக்கியம்.

ஆக்ஸிடோசின் இந்தப் பணியைத்தான் செய்கிறது. ஆனால், அந்த மருந்து தாய்மார்களின் பாலை அதிகரிக்கச் செய்வதாக தவறாகப் புரிந்துகொண்டு மாடுகளுக்கும் கொடுப்பது விநோதம்...’’ என்று டாக்டர் ஜெய்ஸ்ரீ முடிக்க, ஆக்ஸிடோசினை பசுக்களுக்குக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்தார் ‘இன்கேர்’ என்னும் விலங்குகள் நலனுக்கான தொண்டு நிறுவனத்தின் தலைவரான முரளிதரன்.

‘‘கடந்த 20 வருடங்களாக ஆக்ஸிடோசினுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறோம். இந்த மருந்தை தடைசெய்ய பலமுறை அரசு முயற்சித்தும் மருந்துக் கம்பெனிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன. உண்மையில் தாய்மார்களுக்கு இந்த மருந்து எப்படி பாலை அதிகப்படுத்தாதோ அப்படியே மாடுகளுக்கும் பாலை அதிகப்படுத்தாது. தாய்மார்களுக்கு எப்படி பாலைப் பிழிந்து கொடுக்க உதவுகிறதோ அப்படியே மாடுகளின் பாலையும் பிழிந்து கொடுக்க மட்டுமே இந்த மருந்து உதவுகிறது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்குச் செய்த கெடுதல்களில் இதுவும் ஒன்று.

நாட்டு மாடுகளில் இந்த தகிடு தித்த வேலைகள் எடுபடாது. அது கலப்பு மாடுகளை விட அறிவானது. நாட்டு மாடுகளில் என்னதான் பாலைக் கறந்தாலும், அவை கன்றுக்கு என பாலை கொஞ்சம் மறைத்து வைத்துக்கொள்ளும். ஆனால், கலப்பு மாடுகளை இலகுவாக ஏமாற்றலாம். அத்துடன், ஆக்ஸிடோசின் தவிர வேறு பல மருந்துகளையும் பசுக்களின் உடலில் செலுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு நாட்டு மாடுகள் வெறும் 5 - 10 லிட்டர் பால்தான் கறக்கும். ஆனால், ஜெர்சி போன்ற கலப்பு மாடுகள் சுமார் 20 லிட்டர் வரை கறக்கும்.

இதுவும் போதாது என்று அதன் உடலில் மருந்தைச் செலுத்துகிறார்கள்...’’ என்கிற முரளிதரன் இந்த மருந்தோடு பாலின் மற்ற கெடுதல்களையும் பட்டியலிட்டார். ‘‘ஆக்ஸிடோசின் கலந்த பாலை குடிக்கும்போது சிறுமிகள் விரைவாக பருவத்துக்கு வந்துவிடுவார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மாஃபியா கும்பல்கள் ஆக்ஸி டோசின் கலந்த பாலையே அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

பசுவைப் பொறுத்தவரை இந்த மருந்தை தொடர்ச்சியாக செலுத்தும்போது அவை மலடாகிவிடும். இது மாடுகளுக்குக் கர்ப்பப்பை கட்டிகள் போன்ற நோய்களைக் கொண்டு வந்து அதன் ஆயுளைக் குறைக்கும். உண்மையில் பால் விஷயத்தில் பல கலப்படங்கள் நடக்கின்றன. உதாரணத்துக்கு, மருந்துகளோடு பாலை கெட்டியாக்க யூரியாவைப் பயன்படுத்துகிறார்கள். பாலை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து சந்தைப்படுத்தும் இடத்துக்குக் கொண்டு செல்லும் வரையில் உள்ள குழாய்களை இரசாயனத்தால் கழுவுகிறார்கள்.

இதனால் பல தீங்குகள் உண்டாகின்றன.அத்துடன் பால் கெட்டுவிடாமல் இருக்க பிணத்தைப் பாதுகாக்க உதவும் ஃபார்மலின் மருந்தைப் பயன்படுத்து கிறார்கள். உண்மையில் நாம் குடிப்பது பால் அல்ல; விஷம்! ஆக்ஸிடோசினால் நமக்கு புற்றுநோய், கர்ப்பப்பை சினைக் கட்டிகள், உடல் பருமன், காது மற்றும் பார்வைக் கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் முரளிதரன்.                

- டி.ரஞ்சித்