வெளிச்சமும் காற்றோட்டமும்!



ஹோம் அக்ரி -  14

தோட்டப் பராமரிப்பில் சரியான முறையில் நீரிடுவது, உரமிடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது, காற்றோட்டமும் வெளிச்சமும். அகத்தி, மருதாணி, பப்பாளி, தவசிக்கீரை, செம்பருத்தி போன்ற சற்று உயரமாக வளரக்கூடிய செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வைக்கும்போது, அவற்றின் நிழல் மற்ற செடிகளைப் பாதிக்காமல் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்படி உயரமாக வளரும் செடிகளையும், மரங்களையும் கிழக்கு மேற்காக சரியான இடைவெளி யில் வைப்பதால், மற்ற செடிகளுக்கு வெளிச்சம் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம்.

வீட்டின் எந்தத் திசையில் தோட்டம் இருக்கிறது என்பதைப் பொறுத்து அடுக்குகளை அமைக்க வேண்டும். தோட்டம் கிழக்குப்பக்கம் அமைந்தால் உயரம் குறைவானவற்றை கிழக்கேயும், பிறகு உயரத்தின் அளவுக்கேற்ப மேற்கிலும் அமைக்கவேண்டும். அதுபோலவே மற்ற திசைகளிலும் வெளிச்சம் கிடைக்கும்படி உயரமானவற்றை பின் பக்கமும், உயரம் குறைந்தவைகளை முன்னரும் வைக்க வேண்டும்.

குறைந்த அளவு வெளிச்சம் தேவையான செடிகளை தெற்கு, மேற்கு பார்த்த இடங்களில் வைக்கும் போது, முழு நேரமும் அதற்கு வெளிச்சம் கிடைக்கும். அதனால் மதிய நேரங்களில் நேரடி சூரிய வெப்பத்தின் தாக்கம் அதன் மீது இருக்கும். இந்தச் சூழலில் வெயிலைத் தாங்கும் சில உயரமான செடிகளின் நிழல் படும் இடங்களில் குறைந்த அளவு வெளிச்சம் தேவைப்படும் செடிகளை வைக்கலாம். அல்லது குறைந்த அளவில் வெயில் படும்படியான ‘shade net’ துணிகளின் மூலமாக பந்தல் அமைக்கலாம்.

சில செடிகள் முழு நேரம் வெயிலிலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியவையாக இருக்கும். சில செடிகளுக்கு குறைந்த வெளிச்சமும், சிலவற்றுக்கு நிழலே பொருத்தமானதாகவும் இருக்கும். உதாரணமாக மிளகாய், தக்காளி, வெங்காயம், மல்லிகை போன்றவை முழுநேர வெயிலில் வளரக் கூடியவை. முள்ளங்கி, கேரட், கீரைகள், மக்காச் சோளம், கனகாம்பரம், முல்லை போன்றவை மிதமான வெளிச்சத்தில் வளரக்கூடியவை.

எனவே, தரம் பிரித்து தேவைக்கேற்ற வெளிச்சம் கிடைக்கும் படியான இடத்தில் அவற்றை வைக்க வேண்டும். இந்த இடத்தில் வெளிச்சத்தின் தேவைக்கேற்ப தரம் பிரிக்கும் போது, பருவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். கோடைக்கால மத்தியில், வெயில் தாங்கும் தாவரமாக இருந்தாலும், மொட்டை வெயிலில் வாடத்தான் செய்யும். மிதமான வெயில் தேவைப்படும் தாவரமாக இருந்தாலும் குளிர் காலங்களில் வெயிலில்லாத போது வாடத்தான் செய்யும்.

அடுத்து, செடிகளை அடர்த்தியாக வைக்கக்கூடாது. இதனால் காற்றோட்டம் பாதிக்கப்படும். நம்மாலும் ஒவ்வொரு செடியையும் தனியாக கவனிக்க முடியாமல் போகும். காற்று புக இடைவெளி விட்டு செடிகளை வைக்கும்போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நேரடியாக வேகமான காற்று அவற்றைத் தாக்காதபடி உயிர் வேலியோ மற்ற தடுப்பான்களையோ அமைக்க வேண்டும். வீட்டுச் சூழலில் நிரந்தர காற்றுத் தடுப்பான்களுக்கான தேவை குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இதற்கான தேவையை உணர்ந்து தோட்டம் அமைக்க வேண்டும்.

(வளரும்)

- மன்னர் மன்னன்

Q & A Q & A Q & A Q & A

நுணா எனும் மஞ்சணத்தி மரத்தின் முழுமையான பயன்கள் என்ன?
- ஏ.திவ்யா,வேதாரண்யம்.

காலம் காலமாக நுணா மரத்திலிருந்துதான் நுகத்தடி செய்து வந்திருக்கிறார்கள். நுகத்தடி என்ற பெயரே நுணாமரத்திலிருந்து செய்வதால்தான் என்றும் ஒரு கருத்து உண்டு. இதுபோலவே மண்வெட்டி, களைக்கொத்தியின் கைப்பிடிகளும் இந்த மரத்தில்தான் செய்வார்கள். காரணம், இந்த மரத்தின் புண்ணை ஆற்றும் மருத்துவ குணம். மாடுகளுக்கு செக்கு இழுக்கும்போதும், வண்டி இழுக்கும் போதும், ஏர் உழும்போதும், நுகத்தடியால் தோளின் மேல் உராய்வு ஏற்படும். இது புண்ணாகாமல் இருக்கவும், வலி தெரியாமல் இருக்கவும் இந்த மரம் உதவுகிறது.

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இந்த நுணா ‘Morinda tinctoria’ என்று வழங்கப்படுகிறது. மஞ்சணத்தி என்ற பெயர் இது மஞ்சள் நிற சாயம் செய்ய பயன்பட்டதால் வந்தது. இதன் பட்டைகளிலிருந்து மஞ்சள் சாயம் பெறலாம். இதன் இலைகளும், பட்டையும், வேரும், காயும், பழமும் பல மருத்துவ பலன்கள் கொண்டன. குறிப்பாக குழந்தை மருத்துவத்தில் பயன்படக் கூடியவை. ‘NONI’ என்று இப்போது பரவலாகக் கிடைக்கக்கூடிய பழரசம் இந்த வகையைச் சார்ந்த மரத்திலிருந்து பெறக்கூடியதுதான். இது ‘வெள்ளை நுணா’ என்று வழங்கப்படுகிறது. இதற்கு ‘Morinda citrifolia’ என்று பெயர். இதன் பழங்கள் நுணாவை விட பெரியதாகவும், வெள்ளையாகவும் இருக்கும். இந்த மரங்களை  
வீட்டிலும் வளர்க்கலாம்.

Q & A Q & A Q & A Q & A

அசோக மரத்தை சோகத்தை நீக்கும் மரம் எனவும், மகிழ மரத்தை மகிழ்ச்சி தரும் மரம் என்றும் குறிப்பிடுகிறார்களே?
- க.ஜீவிதா, பாமணி.

அசோக மரத்தின் பட்டையும், மற்ற பகுதிகளும் பெண்களுக்கான எல்லா பிரச்னைகளுக்கும் சரியான, முழுமையான தீர்வை அளிக்கக்கூடியவை. இதிலிருந்து தயாரிக்கப்படும் ‘அசோகரிஷ்டம்’ என்ற ஆயுர்வேத மருந்து மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் காலங்களிலுள்ள வலி ஆகியவற்றை சரிசெய்யக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த மரம் அழியும் நிலையில் உள்ளது. சென்னையில் ‘Theosophical society’ ஒரு மரத்தைப் பாதுகாக்கிறது. இந்த காரணத்தால் சோகத்தை நீக்கும் மரமாக இதைக் கொள்ளலாம்.

மகிழம் பூவின் வாசம் மகிழ்ச்சி தரக்கூடியது. வணிலா, மல்லிகை, மகிழம் போன்ற மணங்கள் உடலில் endorphin, serotinin, oxytocin, dopamine போன்றவற்றை சுரக்கச் செய்கின்றன. நம் மகிழ்ச்சி, சோகம், பாசம், வெறுப்பு போன்ற பலவிதமான உணர்வுகளுக்கு இந்தச் சுரப்புகளின் அளவே காரணமாக இருக்கிறது. அரச மரத்தைச் சுற்றுவது, கோயில் ஸ்தல விருட்சங்களைச் சுற்றுவது என்ற பழக்கங்கள் இந்தக் காரணத்துக்காகவே ஏற்படுத்தப்பட்டன.

Q & A Q & A Q & A Q & A

ஹைபிரிட், மரபணு மாற்றப்பட்ட பயிர், பி.டி., என்ன வேறுபாடு?
-தி.மோனலிசா, மணலி.

ஹைபிரிட் என்பது இயற்கையாக, மகரந்தச் சேர்க்கை மூலமாக இரு வேறு தரமுள்ள ஆனால், ஒரே மாதிரியான செடிகளை இனப்பெருக்கம் செய்ய வைப்பது. இது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் தோட்டங்களில்தான் செய்யப்படுகிறது. இந்த வீரிய வகைகள் இயற்கையாகவும் நடக்கின்றன. மரபணு மாற்றம் என்பது உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் செய்யப்படுகிறது. இது இயற்கையான முறையில்லை. விலங்கு, பறவைகள், நுண்ணுயிர்களின் மரபணுக்களின் தன்மைகளை தாவரங்களுக்குள் உட்புகுத்துவது. இதன் பின்விளைவுகள் இன்னும் சரியாக அறிந்துகொள்ளப்படாமல்
இருக்கின்றன.

பி.டி. என்பது மரபணு மாற்றப்பட்ட பயிர்தான். அது மரபணு மாற்றத்தின் ஒரு வகை. Bacillum thuringiensis என்ற ஒரு பாக்டீரியாவின் மரபணுவை பயிர்களின் விதைக்குள் இருக்கும்படி செய்கிறார்கள். ஒருசில பூச்சிகளையும் வண்டுகளையும், குறிப்பாக துளைப்பான்களைக் கொல்லும் தன்மை இந்த பாக்டீரியாவில் இருப்பதால், பூச்சிக்கொல்லிகளின் அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. பி.டி. முறையில் பருத்தி, கத்திரி மற்றும் மக்காச் சோள விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறன. இதில் பருத்தி மட்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.