உயிரைக் காக்கும் கேட்ஜெட்! - 65 வயது இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு



காப்பாத்துங்க! துயரத்தின் நுனியில் நிற்கும் இந்தச் சொல்லில்தான் ஓர் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சில மீட்டர்களைக் கூட இக்குரல் தாண்டுவதில்லை. அதனாலேயே ஆபத்துக் காலத்தில் பலரும் தேவையான உதவி கிடைக்காமல் உயிரை விடுகிறார்கள்.

இதை போக்குவதற்காகவே மார்க் கெட்டில் அலாரம் அல்லது பீப் சத்தங்களுடன் கூடிய பல கேட்ஜெட்ஸ் உள்ளன. இவையெல்லாம் உண்மையாகவே சுற்றியிருப்பவர்களுக்கு அலர்ட் கொடுக்கிறதா? வாகன சத்தம், ரயில் சத்தம், ஆம்புலன்ஸ், போலீஸ் ஜீப்... என பல சப்தங்களில் ஒன்றாக இந்த அலர்ட்டும் அடங்கிப் போகிறதா? ஆம் என்பதே இதற்கு பதில். எனவேதான் ஸ்பெஷல் கேட்ஜெட் ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

‘‘கேரளாவுல பிறந்தேன். எலக்ட்ரானிக் இன்ஜினியர். இப்ப ரிடையர்ட். வட இந்தியா, தென்னிந்தியாவுல மட்டுமில்ல... சில வெளிநாடுகள்லயும் தங்கி வேலை பார்த்திருக்கேன். ஓய்வுக்குப் பிறகு மேற்கு முகப்பேர், நொளம்பூர்ல இருக்கோம். எங்க ஏரியாவுல ஒரு பெண்ணை அவங்க வீட்டு டிரைவரே கொலை செய்திட்டார். இதுல சோகம், அந்தப் பெண்ணின் கணவர் கீழ்த்தளத்துலயே இருந்திருக்கார். ‘காப்பாத்துங்க’னு அந்தப் பெண் கத்தினது அவர் காதுல விழலை.

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் இந்த ஐடியா தோணிச்சு. இந்த கேட்ஜெட்டுக்கு ‘உஷா - உயிரைக் காக்கும் கருவி’ (Usha - The Life Saver)னு பெயர் வைச்சிருக்கோம். இது இரண்டு கருவிகள் சேர்ந்தது. ஒன்றை, கைக் கடிகாரத்துல சின்ன பட்டனா ஃபிக்ஸ் பண்ணிடுவோம். அடுத்தது ஒலிபெருக்கி. ஆபத்து நேரத்துல கைக் கடிகார பட்டனை அழுத்தினா போதும். 500 மீட்டர் வரைக்கும் ‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’னு ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கும். கூடவே ஒலிபெருக்கில சிவப்பு விளக்கு எரியும். இந்த நியான் விளக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.

இந்த கேட்ஜெட் 12 வோல்ட் பேட்டரில இயங்குது. ஸோ, மின்சாரம் இல்லைனாலும் வேலை செய்யும். ஒருவேளை இந்த கேட்ஜெட்டை திருடனோ / கொலைகாரனோ சேதப்படுத்தினா கூட லைட் எரியும். சப்தம் எழும்...’’என்ற ராதாகிருஷ்ணன், வேலைக்கும் / கடைகளுக்கும் செல்லும் பெண்களுக்கும்; தனியாக நடந்து செல்லும் வயதானவர்களுக்கும் உதவும் வகையில் வேறு இரு கேட்ஜெட்களையும் உருவாக்கியிருக்கிறார்.

‘‘Usha-The Saviour Pouch - பெண்களுக்கான ஸ்பெஷல் கேட்ஜெட். செயின் பறிப்பு, பாலியல் தொல்லைனு எல்லா ஆபத்து நேரங்களிலும் இந்த ஹேண்ட் பேக் உதவும். இதுவே பெல்ட் வடிவிலும் இருக்கு. இதை வயதானவர்கள் பயன்படுத்தலாம். அதே மாதிரி Usha RAVVs - The Armour on Wheels - இது டூ வீலரில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். இந்த ஹேண்ட் பேக் / பெல்ட் / டூ வீலர்... மூணுமே ஒலிபெருக்கி / சிவப்பு லைட் அமைப்புதான். பட்டன், கீ செயின்ல இருக்கும்.

கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் ‘உஷா’னு என் மனைவி பெயரை வைச்சிருக்கேன். வீட்டில் பொருத்தப்படும் கருவி ரூ.9 ஆயிரத்துக்கும் மத்தது ரூ.4 ஆயிரத்துக்கும் கிடைக்கும். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தினு பல மொழிகள்ல டப்பிங் கலைஞர்களை வைச்சு ‘காப்பாத்துங்க’வை ரிக்கார்ட் செய்திருக்கோம். தெலுங்குல விரைவில் வரப் போகுது. இந்தக் கருவிகளோட ஆக்டிவேஷனை பரிசோதித்து காவல்துறையினர் பாராட்டியிருக்காங்க. தங்களையும் இணைச்சு இந்தக் கருவியைப் பொருத்தச் சொல்லி வலியுறுத்தியிருக்காங்க. இதை மிகப்பெரிய அங்கீகாரமா நினைக்கறேன்!’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராதாகிருஷ்ணன்.                

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்