ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

1. மீண்டும் சிவகாமியின் சபதம்

கே.என்.சிவராமன்

இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ  அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று  நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள்  முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான்.

வைகாசி மாத சுக்கில பட்ச  சதுர்த்தி என்பதால் பகலின் வெப்பம் தணிந்து இரவின் மூன்றாம் நாழிகையில் இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது.  விரிந்திருந்த கடலில் அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக்  கப்பல்களின் கொடிகள் அசைந்தவண்ணம் இருந்தன. அந்த நாவாய்களில் இருந்து கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வணிகப் படகுகளின்  துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும், கரையோரம் வந்து இழுக்கப்பட்ட படகுகளாலும், படகில் இருந்து குதித்த வணிகர்களாலும்,  கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும்  அலைகள் குழம்பியும் கலங்கியும் தெளிவதுமாக இருந்தன.

அக்கம்பக்கத்து உப்பளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை உப்பை  உள்நாட்டுக்கு எடுத்துச் சென்று அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றி  வந்துகொண்டிருந்த படகுகளை உப்பங்கழிகளின் தளைகளில் ஆங்காங்கு பிடித்துப்  பிணைத்துக் கொண்டிருந்த பரதவரின் அதட்டலான குரல்களும்,  ஓடிய படகுகளின்  துடுப்புகள் கழிகளின் நீரில் பாய்ந்து எழுப்பிய சரேல் சரேல் என்ற  சத்தங்களும், ஆங்காங்கு அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக்   காவலரின் கட்டளைக் கூச்சல்களும் வெகுதூரம் வரை  கேட்டுக் கொண்டிருந்தன. மேல் நாட்டவரும் கீழ்நாட்டவரும் தூரக் கீழ்த் திசை நாடுகளுக்குச்  செல்வதற்கு ஒன்றுகூடும் துறைமுகமாக மல்லைப் பெருந்துறை இருந்ததால் சீனரும், அராபியர்களும், தமிழரும், ஆந்திரரும், வட நாட்டாரும் கலந்து  காணப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும்; மொட்டையடித்துத் தலைக்கு துணி கட்டி தொள தொளத்த உடைகளுடன் நடந்த சிவந்த  மேனியும் திடகாத்திர தேகமும் உள்ள அராபியரும்; அதிக உயரமோ அதிக குள்ளமோ இல்லாத தமிழரும் கலந்து நின்ற காட்சி மல்லை கடற்கரையை  நவரத்தினங்கள் போல் மாற்றியமைத்திருந்தன. இந்த ஒளிக்கு ஒலி சேர்ப்பதுபோல் சுங்கக் காவல் வீரர்கள் ‘ம்… இப்படி…’, ‘அந்தப் பக்கம் அல்ல…’  என பொதி சுமக்கும் ஊழியர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை எல்லாம் இம்மி பிசகாமல் எப்போதும் போல் அன்றும் நிகழ்ந்தன.  மல்லை கடைவீதியிலும் மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை. எப்போதும் போல் நெரிசலுடனேயே காணப்பட்டது.

இறக்குமதியான பொருட்களுக்கு சுங்க வரி கட்டப்பட்டதும் அவற்றுக்கு உரிய வணிகர்கள் தங்கள் இடங்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று உள்நாட்டு  விற்பனைக்கு தனியாகவும், கடையில் விற்பதற்கு தனியாகவும் பொருட்களைப் பிரித்து அடுக்கியவண்ணம் இருந்தனர். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த  கடைகளில் விற்பனையாகின்றன என்பதை அறிவுறுத்தும் விதமாக ஒவ்வொரு கடையின் மேலும் கொடிகள் பறந்துகொண்டிருந்ததால் பல நாட்டு   வணிகர்களும், வீரர்களும், வனிதையர் கூட்டமும் தங்களுக்குத் தேவையான கடைகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  கடை   வீதியின் ஓரத்திலிருந்த புஷ்ப மரங்கள் உதிர்த்த நானாவித மலர்களின் சுகந்தம்  அப்பகுதியை அரவணைத்து ரம்மியமாக்கி இருந்தது.

வேல்களை ஏந்தியபடி நடமாடிய பல்லவ  வீரர்கள் நெருக்கத்திலும் ஒரு சீர்மையையும் நேர்மையையும் சிருஷ்டித்துக்  கொண்டிருந்தனர். சில  கடைகளில் அதிகமாகக் கூடி வழியை மறித்த மக்கள்  வீரர்களால் கண்ணியமாக எச்சரிக்கப்பட்டும், அது இயலாவிடில் மெதுவாகத்  தள்ளப்பட்டும்  ஒழுங்குக்குக் கொண்டு வரப்பட்டனர். சில முரடர்கள் பெண்கள்  கூடிய இடங்களில் அத்துமீறி நுழைய முற்பட்டபோது பல்லவ வீரர்களின் ஈட்டிகள்   அவர்களைத் தடுத்து நிறுத்தின. இதனால் வியாபாரம் தடையின்றி நடைபெற்றது.

போலவே வெளிநாட்டு மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக மல்லை நகரின் கலங்கரை  விளக்கத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும்  தீ்ப்பந்தங்களுக்கு  அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள் மேலிருந்து எண்ணெய்  கேட்டுப் போட்ட கூச்சல்களும், அதற்கு  தரை மட்டத்திலிருந்து கிடைத்த  பதில்களும் சேர்ந்து அமைதியைக் கிழிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்பதை  நிரூபித்துக் கொண்டிருந்தன.  எந்த மாற்றமும் எந்த இடத்திலும் தென்படவில்லை. பல்லவ நாட்டின் வருவாய்க்கான கேந்திரமாக மல்லை இயங்கிக் கொண்டே இருந்தது. ஆம்.  வருவாய்க்கான கேந்திரம்தான். தன்னையும் அறியாமல் கரிகாலனின் நாசியிலிருந்து பெருமூச்சு ஒன்று வெளியேறியது.

அரிசி உற்பத்தி சோழர்களுக்கும், யானைகளின் பெருக்கம் சேரர்களுக்கும், முத்துக்களின் ஆதிக்கம் பாண்டியர்களுக்கும் கை கொடுப்பதுபோல்  பல்லவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தப் பொருளின் தனித்த உற்பத்தியும் இல்லை. அதனாலேயே வரி விதித்து வருவாயை  அதிகரிக்க கவனம் செலுத்தினார்கள்.  செங்கொடி என்னும் சித்ரமூலம் என்ற மூலிகைக் கொடிக்கு செங்கொடிக்காணம்; நீலோற்பலம் எனப்படும்  குவளைச் செடிகள் நடகுவளைக்காணம்; சீன நாட்டிலிருந்து  பெறப்பட்ட மருக்கொழுந்து செடிகள் பயிரிட வரி; பயிர்த்தொழிலுக்கு  நீர் பெற நேர்வயம்;  கிணறு தோண்ட உல்லியக்கூலி; உள்நாட்டில் விற்கும் தானியங்களுக்கு வரி; சில இடங்களைக் கடந்து செல்ல ஊடுபோக்கு  வரி;

மீன் பிடிக்க பட்டினச்சேரி; கள் இறக்க ஈழப்பூட்சி; கால்நடை வளர்க்க இடைப்பூட்சி; பால் மற்றும் பால்பொருட்களின்  உற்பத்திக்கு  இடைப்பூட்சிதண்டல்; குயவர்களிடம் இருந்து குசக்காணம்;  தட்டாரிடமிருந்து தட்டுக்காயம்; உடைகளை வெளுப்போர்  பயன்படுத்திய பாறைக்கு  பாறைக்காணம்; ஓடக்காரர்களிடமிருந்து பட்டிகைக் காணம்; நெசவாளர்களிடமிருந்து தறிக்கூறை; எண்ணெய் எடுப்போரிடமிருந்து செக்கு; பொருட்களை  வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் இருக்கும் தரகர்களுக்கான தரகு வரி; ஆடை நெய்ய நூல் நூற்போரிடமிருந்து  பாடாம் கழி;  கொல்லர்களிடம் கத்திக் காணம்; பறையடிப்போரிடமிருந்து நெடும்பறை; நெய் விற்போர் அரசுக்குச் செலுத்திய நெய்விலை;

நீர் இறைக்கப்  பயன்படும் ஏற்றத்துக்கு ஏற்றக்காணம்; திருமண நிகழ்ச்சிகளுக்கு கலியாணக்காணம்; ஒவ்வொரு கிணறு தோண்டவும் வரி... இதுதவிர  வீரத்துக்காணம், ஆத்துக்காணம், ஊராட்சி சாதிப் பொன், பரிக்காணம்,  உறிக்காணம், அரிகொழி, புதக்குதிகை, குற்றதுவை... நீளும் வரிகளின்  பட்டியல்தான் பல்லவ நாட்டை வாழவே வைக்கின்றன. அதனாலேயே சுங்கத் துறை ஒருவகையில் இந்நாட்டின் முதுகெலும்பாகவே திகழ்கிறது.  பெருமூச்சுடன்,  தன்னைச் சந்திக்கப் போகும் நபர் யாராக இருக்கும் என யோசித்தபடி மேட்டிலிருந்து இறங்கி கடற்கரையில் கரிகாலன் நடக்க  முற்பட்டபோது - அந்த விபரீதம் நடந்தது. கிட்டத்தட்ட ஐம்பது அரபுப் புரவிகள் வாயு வேகத்தில் மணலில் ஓட ஆரம்பித்தன.

இன்னும் பழக்கப்படுத்தப்படாத குதிரைகள் அவை என்பது பார்த்ததுமே தெரிந்தது. இது விபரீதமல்லவா? குளம்புகளில் மக்கள் சிக்கினால் என்ன  ஆகும்? பொதுவாக அரபு நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வரும் குதிரைகளை நள்ளிரவு கடந்தபின் எச்சரிக்கை செய்துவிட்டே கடற்கரை மணலில்  ஓடவிட்டு பரிசோதிப்பார்கள். அரசர்களுக்கு, தளபதிகளுக்கு, போர் வீரர்களுக்கு, ரதங்களுக்கு, வணிகர்களுக்கு என தர வாரியாக அவற்றைப் பிரித்து  உரியவர்களிடம் சேர்ப்பிப்பார்கள். நகுலசகாதேவரால் இயற்றப்பட்ட அசுவசாஸ்திரம் கற்றவர்கள் மட்டுமே புதிதாக வந்திறங்கும் குதிரைகளின்  தன்மையைக் கண்டறிய முடியும். பல்லவ நாட்டில் அசுவசாஸ்திரம் அறிந்தவன் அவன் மட்டும்தான்.

எனவே, அரபு நாடுகளில் இருந்து புரவிகள் வரும்போதெல்லாம் அவற்றின் தரத்தை சோதிக்கும் பொறுப்பு அவனிடமே ஒப்படைக்கப்படும். இதுதான்  இத்தனை நாட்களாக நடந்து வந்த நடைமுறை. இதற்கு மாறாக இன்று தன்னிடம் கூட தகவல் தெரிவிக்காமல், வந்திறங்கிய குதிரைகளை மணலில்  ஓடவிட்டிருப்பவர் யார்? விடையை பிறகு அறியலாம். தறிகெட்டு ஓடும் புரவிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இப்போது முக்கியம். விரைந்த  கரிகாலனின் கால்கள் தாமாக நின்றன. ஆச்சர்யம் மெல்ல மெல்ல அவனைச் சூழ ஆரம்பித்தது. ஏனெனில் அவன் அச்சப்பட்டதுபோல் எதுவும்  நடக்கவில்லை. கடற்கரையில் குழுமியிருந்த மக்களை எந்தவகையிலும் அவை சிதறடிக்கவில்லை.

மாறாக, தறிகெட்டு ஓடியபோதும் ஓர் ஒழுங்கு அதனுள் தென்பட்டது. எனில் புரவிகளின் மொழி அறிந்த யாரோ அவற்றின் செவிகளில் அன்பாகக்  கட்டளையிட்டிருக்க வேண்டும். அதன்பிறகே கட்டை அவிழ்த்து அவற்றை கடற்கரை மணலில் ஓடவிட்டிருக்க வேண்டும். நாம் அறியாத அந்த  அசுவசாஸ்திரி யார்..? பூத்த கேள்விக்கான பதிலாக ஓர் இளம்பெண் தோன்றினாள். அதிகம் போனால் அவளுக்கு பதினாறு வயதுதான் இருக்கும்.  புரவிகளுக்கு சமமாக ஓடியபடியே அவற்றின் தரத்தையும் அவள் ஆராய்வதை கரிகாலனால் உணர முடிந்தது. குதிரையின் கழுத்துக்குக் கீழே ஓரங்குல  நீளத்தில் இரண்டு அல்லது மூன்று சுழிகள் இருந்தால் அது தெய்வமணி. அரசர் அல்லது அவருக்கு சமமானவர் இப்புரவியைப் பயன்படுத்தலாம்.

குளம்புக்கு மேல் ஒன்று அல்லது இரண்டங்குல நீளத்துக்கு ரோமங்கள் வளர்ந்திருந்தால் அது சிந்தாமணி. முதுகின் வலப்பக்கம் சுழி இருந்தால் அது  மேகலை. தொண்டையின் கீழ் இடபத்தின் கழுத்தைப் போல் மயிர்கள் குறுக்காக வளர்ந்திருந்தால் அது கண்டாபரன். குதிரையின் தலை, நெற்றி, மார்பு,  பிடரி, பீசனம் என ஐந்து இடங்களிலும் சுழி இருந்தால் அது ஜெயமங்கலம். தேகம் ஒரு நிறமாக இருந்து, தலை, மார்பு, ஒருகால் பீசம், வால் ஆகிய  இடங்கள் வெளுத்திருந்தால் அது சஷ்டமங்கலம். குதிரையின் முதுகில் இரு பக்கங்களிலும் சுழியிருந்து நெற்றியில் தாமரை மொட்டைப் போன்று  இன்னொரு சுழி இருந்தால் அது சுமங்கலம். இவை நல்ல சாதிக் குதிரைகளுக்கான அறிகுறிகள்.

எனில், இங்கு ஓடுபவை அனைத்துமே உயர்ரக புரவிகள். யுத்தத்துக்கு ஏற்றவை. இதைத்தான் கச்சிதமாக அந்தப் பெண் பரிசோதிக்கிறாள். யார்  இவள்..? ‘‘உங்களைச் சந்திக்க ஒருவர் வருவார் என புலவர் தண்டி சொன்னாரே... அவர் இவர்தான். தங்களைப் போலவே குதிரைகளின் காதலர்!’’  கரிகாலனின் அருகில் வந்து விடையளித்தான் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘இதற்கு முன் இப்பெண்ணைப்  பார்த்ததில்லையே... புலவரின் சிஷ்யையா?’’ ‘‘இல்லை.

நம் மன்னர் பரமேஸ்வர வர்மரின் மகளுக்கு சமமானவர்!’’ ‘‘விளக்கமாகச் சொல்!’’  ‘‘மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கினாரே  ஆயனச் சிற்பி... அவரது மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்திதான் இவர். இவரது சொற்படி தங்களை நடக்கும்படி புலவர் கேட்டுக் கொண்டார்.  ஏனெனில் இவரும் ஒரு சபதம் செய்திருக்கிறார். அது உங்கள் வழியாக நிறைவேற வேண்டும் என நம் இளவரசர் ராஜசிம்மர் விரும்புகிறார்...’’  கரிகாலனின் மனக்கண்ணில் வாதாபி பற்றி எரிந்தது. புரவியை அணைத்தபடி ஓடியவளை விட்டு அவன் கண்கள் அகலவில்லை. ‘‘இவள் பெயர்?’’  ‘‘பாட்டியின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகாமி!’’

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்