30 பைசா காமிக்ஸை ரூ.3 லட்சத்துக்கு வாங்க தயாரா இருக்காங்க!கலெக்டர்ஸ்

வியக்கிறார் தமிழ் காமிக்ஸை சேகரித்து வரும் ராஜஸ்தானியர்


‘ப்பூ... காமிக்ஸ் சேகரிப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா..?’ என அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். இன்றைய தினம் ப்ளாக் மார்க்கெட்டில் பல  மடங்கு விலையில் விற்பனையாவது சாட்சாத் தமிழ் காமிக்ஸ் நூல்கள்தான். 1970களில் 30 பைசா விலையில் வெளியான ஒரேயொரு தமிழ்  காமிக்ஸை கிட்டத்தட்ட ரூ.3 லட்சங்கள் கொடுத்து வாங்கக் கூட இன்று மக்கள் தயாராக இருக்கிறார்கள்! காதில் பூ சுற்றவில்லை. இதுதான் கள  நிலவரம்! இச்சூழலில்தான் தமிழில் வந்த காமிக்ஸ் நூல்களை சேகரித்து பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் கோவையைச் சேர்ந்த சுரேஷ் சந்த்.  ‘‘பூர்வீகம் ராஜஸ்தான். 140 வருஷங்களுக்கு முன்னாடி தமிழகத்துல செட்டிலாகிட்டோம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துல 1959ல பொறந்தேன். படிச்சதும் அங்கதான். அப்புறம் தொழில் காரணமா கோவைக்கு வந்துட்டோம். நகை, துணி,  ஆயில் மில்லுனு குடும்பத் தொழில் இருக்கு. இப்ப எனக்கு 60 வயசாகுது. பசங்க தொழிலை பார்த்துக்கறாங்க. நான் முழுநேரமும் காமிக்ஸ் படிச்சுட்டு  இருக்கேன்!’’ என்று சிரிக்கும் சுரேஷ் சந்த், எட்டு வயதிலிருந்து காமிக்ஸ் படித்து வருகிறார். ‘‘வீட்ல இந்தி, ராஜஸ்தானி பேசினாலும் தமிழைத்தான்  பாடமா எடுத்துப் படிச்சேன். ‘தினத்தந்தி’ல வந்த ‘கன்னித்தீவு’தான் நான் படிக்க ஆரம்பிச்ச முதல் தமிழ் காமிக்ஸ். இந்த நேரத்துல எங்கண்ணன்  ‘இந்திரஜால் காமிக்ஸை’ அறிமுகம் செஞ்சார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியீடு.

‘இந்திரஜால் காமிக்ஸ்’ ஆரம்பிக்கப்பட்டதுலேந்து ஒவ்வொரு இதழையும் எங்கண்ணன் சேகரிச்சு வைச்சிருந்தார். என்னோட காமிக்ஸ் ஆர்வத்தைப்  பார்த்துட்டு அதை அப்படியே தூக்கிக் கொடுத்தார். இப்படித்தான் காமிக்ஸ் ஆர்வம் அதிகரிச்சது. இப்ப என்கிட்ட 1970கள் முதல் இன்னி வரைக்கும்  தமிழ்ல வெளியான எல்லா காமிக்ஸ் பத்திரிகையும் ஒண்ணுவிடாம இருக்கு! கைச் செலவுக்குனு அப்பா கொடுக்கிற பணத்துலதான் காமிக்ஸ்  வாங்குவேன். அப்ப எல்லாம் வருட சந்தாவே இரண்டு ரூபாதான். சந்தாவும் கட்டுவேன்; கடைக்கு போயும் வாங்குவேன். ஆக, ஒவ்வொரு காமிக்ஸும்  என்கிட்ட ரெண்டு ரெண்டு பிரதிகள் இருந்தது.

இருந்ததுனா... இப்ப இல்லைனு அர்த்தம்...’’ சில நிமிடங்கள் மவுனமாக இருந்த சுரேஷ் சந்த், தொடர்ந்தார். ‘‘எங்கப்பா அம்மாவுக்கு தமிழ் படிக்கத்  தெரியாது. அதனால காமிக்ஸ் சுவையை அவங்களால உணர முடியலை. ‘குப்பைய சேகரிக்கிறேன்’னு திட்டிக்கிட்டே இருப்பாங்க. அவங்க  மட்டுமில்ல... எங்க வீட்லயும் அப்படித்தான் நினைச்சாங்க. இப்பவும் நினைக்கறாங்க. 1995ல என் சகோதரிக்கு திருமணமாச்சு. அப்ப வீட்டை  சுத்தப்படுத்தினப்ப எனக்குத் தெரியாம நான் சேகரிச்சு வைச்சிருந்த காமிஸ்ல ஒரு செட்டை தூக்கி எடைக்கு போட்டுட்டாங்க. விஷயம் தெரிஞ்சதும்  என்னால ஜீரணிக்கவே முடியலை. 25 வருட சேகரிப்பு... நொடில காணாமப் போயிடுச்சு.

ஒரு வாரம் சாப்பிடாம தர்ணா பண்ணினேன். அதுக்குப் பிறகு என் புத்தக சேகரிப்புல யாரும் தலையிடறதில்ல...’’ என்றவரிடம் ஆறாயிரம் தமிழ்  காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன! ‘‘தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். கவிதைகள் எல்லாம் எழுதுவேன்! காமிக்ஸ் மேல ஆர்வம் திரும்பக் காரணம்  மாயாவிதான்! ‘இந்திரஜால் காமிக்ஸ்’லதான் மாயாவி அறிமுகமானாரு. அந்த கதாபாத்திரம் அப்படியே எனக்குள்ள புகுந்துடுச்சு. அப்புறம் ‘லயன்’,  ‘முத்து காமிக்ஸ்’ல வந்த இரும்புக் கை மாயாவி என்னை புரட்டிப் போட்டார். லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, மாயாவி - இவங்களை காமிக்ஸ் உலக  மும்மூர்த்திகள்னு சொல்வாங்க. அவ்வளவு ஏன்... முன்னோடிகள்னும் சொல்லலாம்.

ஒருவகைல இவங்க எம்ஜிஆர் மாதிரி. அநீதிகளைத் தட்டிக் கேட்பாங்க. இவங்களுக்கு அப்புறம் ஸ்பைடர், டெக்ஸ் வில்லர் கதாபாத்திரங்கள்  வெளியாச்சு. எல்லாமே காதுல பூ சுத்துற கதைகள்தான். ஆனா, நிச்சயமா உங்களை ஈர்க்கும். என்னை அப்படித்தான் காமிக்ஸ் வெறியனா மாத்திச்சு.  அறை முழுக்க பீரோவுல, அட்டைப் பெட்டில இதைத்தான் அடுக்கி வைச்சிருக்கேன்! தொழில் ஒரு கண்ணுனா காமிக்ஸ் இன்னொரு கண். சினிமா  பார்க்கப் பிடிக்காது. வேற எந்த பழக்கமும் இல்ல. வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து காமிக்ஸ் படிக்கலைனா தூக்கமே வராது. கடந்த 20  வருஷங்கள்ல அஞ்சே அஞ்சு படங்கள்தான் பார்த்திருக்கேன்.

வேலை விஷயமா வெளியூர் போனாலும் சரி, குடும்ப விழாவுக்கு சென்றாலும் சரி என் பெட்டில கண்டிப்பா காமிக்ஸ் இருக்கும்!’’ என்றவர் தமிழ்  காமிக்ஸில் இருக்கும் குறைகளைப் பட்டியலிட்டார். ‘‘இங்க படங்கள் சரியா வரையறதில்ல. மேலை நாட்டு காமிக்ஸை தமிழ்ப்படுத்திதான் இங்க  தர்றோம். பெரும்பாலான சமயம் மொழிபெயர்ப்பு தரமா இல்ல. நம்ம சூழலுக்கு ஏத்த மாதிரி தமிழாக்கம் செய்யறது சவால். 1992 வரை நிறைய  காமிக்ஸ் பத்திரிகைங்க தமிழ்ல வந்தது. ஆனா, எதுவும் நிலைச்சு நிக்கலை. இப்பவும் மார்க்கெட்டுல ‘லயன்’, ‘முத்து’ காமிக்ஸ்தான் இருக்கு.  காமிக்ஸோட தனித்துவமே படங்களும் டயலாக்ஸும்தான். இதை ‘லயன்’, ‘முத்து’ காமிக்ஸ் மட்டும்தான் சரியா புரிஞ்சு வைச்சிருக்காங்க.

வெளிநாட்டுலேந்து மொழிமாற்றம் செஞ்சு வெளியிட்டாலும் உண்மைத்தன்மை மாறாம கொடுக்கறாங்க. முன்னாடி கறுப்பு வெள்ளைல பிரிண்ட்  செஞ்சாங்க. இப்ப ஆர்ட் பேப்பர்ல அதுவும் கலர்ல வெளியிடறாங்க. ஆயிரம் பக்கங்களுக்கு ஒரே கதையை பவுண்ட் வால்யூமா கொண்டு வர்றாங்க.  மக்களும் போட்டி போட்டுகிட்டு அதை வாங்கறாங்க...’’ என்றவர் இப்போது தன் சேகரிப்பில் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தையும்  டிஜிட்டலைஸ் செய்து வருகிறார். ‘‘லட்சக்கணக்குல  பணம் கொடுத்து இதை வாங்க மக்கள் தயாரா இருக்காங்க. என் காலம் முடியற  வரைக்கும்  யாருக்கும் நான் தரமாட்டேன். என்னை மாதிரியே பல காமிக்ஸ்  வெறியர்கள் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் வருங்காலத்துல பயன்படட்டும்னு   நம்பிக்கையோட டிஜிட்டலைஸ் செய்யறோம்..!’’ என்கிறார் காமிக்ஸ் வெறியர் சுரேஷ் சந்த்.

ப்ரியா
படங்கள்: சாதிக்