மழைச் சத்தம்



நவம்பர் 2010. நீரும் நீரும் கலக்கும் காட்சியைக் காண்பது, ஓர் ஆணும், பெண்ணும் இணைவதற்கு சமமான பரவசம் தருவது. காவிரி  ஆற்றங்கரையிலிருந்த அந்த 108 கால் மண்டபத்தில் நின்றபடி, ஆற்று நீரில் சடசடவென்று கண்ணாடிச் சிதறல்கள் போல் விழுந்துகொண்டிருந்த  மழைத்துளிகளைக் காண அற்புதமாக இருந்தது. வேகமாக கேமராவை எடுத்தேன். ஃபிலிம் போட்டு எடுக்கும் பழைய மாடல் கேனான் கேமரா அது.  கேமராவில் ஆற்றையும், எதிர்க்கரை மூங்கில் தோட்டத்தையும், தோட்டத்திற்கு நடுவே கரையோரம் ஈரத்தில் நனைந்துகொண்டிருந்த சிறு பிள்ளையார்  கோயிலையும் ஃபோகஸ் செய்து க்ளிக் செய்தேன்.

அப்போது மழை வலுத்து கேமராவில் தண்ணீர் பட... கேமராவை பின்னுக்கு இழுத்து, லென்ஸை கர்ச்சீப்பால் துடைத்தபடி சுற்றிலும் பார்த்தேன்.  மண்டபத்தின் விளிம்புப்பகுதி தூண்கள் மீது, சுள் சுள்ளென்று மழைத்துளிகள் விழுந்து தூண்களை நனைத்துக் கொண்டிருந்தது. ஊருக்கு ஒதுக்குபுறமாக,  யாருமற்ற அந்த மண்டபத்திற்குள்ளிருந்து ஒலித்த புறாக்களின் சத்தம், மழைச்சத்தத்தோடு இணைந்து ஜுகல்பந்தி இசை போல் இருந்தது. மழை  இப்போது மேலும் வலுத்து, என் மேல் சாரல் துளிகள் விழுந்த கணத்தில், பல தூண்கள் தள்ளி அந்தக் காட்சியை கவனித்தேன். ஒரு தூணை ஒட்டி  ஆற்றைப் பார்த்தாற் போல் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் உடம்பையும் முகத்தையும் தூண் மறைத்திருக்க... நீண்டு தரையில் படர்ந்திருந்த  அவளுடைய கூந்தலும், தலை மல்லிகைப்பூவும் மட்டும் தெரிந்தது.

“வாவ்….” என்று வேகமாக தூணையும் கூந்தலையும் சேர்த்து கேமராவில் ஃபோகஸ் செய்தேன். எதிர்பாராத விதமாக அவள் திடீரென்று பின்புறம்  சாய்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு என் பக்கம் திரும்பிப் பார்க்கவும் கேமரா க்ளிக்காகவும் மிகச் சரியாக இருந்தது. சில வினாடிகள் கண்களில்  கேள்வியுடன் பார்த்தவள், எழுந்து என்னை நோக்கி வர முற்பட்டாள். எழுந்தபோது அந்த மெல்லிருட்டில், இளம் பெண்ணாகத் தெரிந்தவள், என்  பக்கத்தில் வந்தவுடன் அவள் பெண்ணல்ல…. தேவதை என்று தோற்றம் தந்தாள். யாரென்று தெரியவில்லை. ஊருக்குப் புதிதாக இருக்கவேண்டும்.  என்னை முறைத்தபடி, ‘‘ஹலோ... கேர்ள்ஸ அவங்க பர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டபோது அவள் முகத்தில் தெரிந்த  கோபத்தை அழித்துவிட்டால் பேரழகியாகிவிடுவாள்.

தடுமாற்றத்துடன், ‘‘இல்லங்க... நான் அந்த தூணை எடுக்கத்தான் ட்ரை பண்ணினேன். திடீர்னு நீங்க சாஞ்சு உக்காந்துட்டீங்க...” என்றேன். ‘‘பொய்  சொல்லாதீங்க. கேமராவ தாங்க. ஃபிலிம எக்ஸ்போஸ் பண்றேன்...” கையை நீட்டியவள் நீலநிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். ‘‘ப்ளீஸ், வேண்டாங்க.  மழை பெய்றப்ப காவிரி அற்புதமாக இருக்கும். அதை நிறைய ஃபோட்டோ எடுத்துருக்கேன். நாளைக்கு தஞ்சாவூர் போயி, பிரிண்ட் போட்டு, உங்க  ஃபோட்டோவ நெகடிவ்வோட கொண்டு வந்து தந்துடறேன். நாளைக்கு சாயங்காலம் இங்க வந்துடுங்க...” என்றபோது மழை விட ஆரம்பித்திருந்தது.  ‘‘இதுக்குன்னு நான் வரணுமா?” ‘‘வேற என்னங்க பண்றது? நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க.

நீங்க ஊருக்குப் புதுசா?’’ பதில் ஒன்றும் சொல்லாமல் மண்டபத்திலிருந்து இறங்கிச் சென்றாள். யாரிவள்? மறுநாள் மாலை நான் சென்றபோதும் மழை  பெய்து கொண்டிருந்தது. அவளிடம் ஃபோட்டோவைக் காண்பித்தபோது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை அவளால் மறைக்க முடியவில்லை.  ஏனெனில் அப்புகைப்படத்தில் அவள், கடவுள் மழைநீரை பூவிதழால் தொட்டு எழுதிய ஒரு மகா கவிதை போல் இருந்தாள். க்ளோஸ்அப்பில் அவள்  முகத்தில் படர்ந்திருந்த மழை ஈரம்... கன்னத்து மழை ஈரத்தில் ஒட்டியிருந்த நான்கிழை தலைமுடி... கேமராவை கேள்வியுடன் பார்க்கும் அகன்ற  கண்கள்... கீழுதட்டுக்குக் கீழ் அந்த மச்சம்.... எல்லாம் சேர்ந்து நான் வாழ்நாள் முழுவதும், கோடி கவிதைகள் எழுதுவதற்கு போதுமான அழகுடன்  இருந்தாள்.

நான் நெகடிவ்வையும் அவளிடம் அளித்துவிட்டு திரும்பியபோது, ‘‘ஒரு நிமிஷம்...” என்றாள். நான் திரும்பிப் பார்க்க... ‘‘இன்னொரு காப்பியத் தாங்க...”  என்றாள். ‘‘எந்த இன்னொரு காப்பி?” ‘‘என் ஃபோட்டோவ இன்னொரு காப்பி எடுத்திருப்பீங்களே... அதத் தாங்கன்னு சொல்றேன்!” ‘‘வேற காப்பி  ஒண்ணும் எடுக்கலங்க...” ‘‘அட தெரியும் பாஸ்..! இவ்ளோ அட்டகாசமா இருக்கேன். இன்னொரு காப்பி எடுக்காம இருப்பீங்களா?” அசடு வழிய  சிரித்துவிட்டு, ஜெர்கினுக்குள் கையை விட்டு, இன்னொரு காப்பியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.  ‘‘ஹலோ...  ஒரு நிமிஷம்...” என்று மீண்டும் அவள் அழைக்க... நின்றேன். நடந்து என்னருகில் வந்தவள், ‘‘ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க.

இன்னொரு காப்பிய நீங்களே வச்சுக்குங்க...” என்று புகைப்படத்தை நீட்டியபடி, ‘‘தினமும் இங்க வருவீங்களா?” என்றாள். ‘‘எப்ப மழை பெஞ்சாலும்,  உடனே இங்க வந்து ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சுடுவேன்!”  ‘‘எங்க... மத்த ஃபோட்டோஸ் எல்லாம் காமிங்க...’’ அவள் கேட்டவுடன் நான் மற்ற  புகைப்படங்களை காண்பித்தேன். ‘‘ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க. நீங்க ஃபோட்டோகிராஃபரா?” என்றாள். ‘‘இல்ல... சும்மா ஒரு இன்ட்ரெஸ்ட்...  அவ்வளவுதான்...” ‘‘நீங்க சொன்ன மாதிரி, மழை பெய்றப்ப காவிரி ரொம்ப அழகாதான் இருக்கு. நானும் இனிமே மழை பெய்றப்ப இங்க வந்துடலாம்ன்னு  பாக்குறேன்!” ‘‘நீங்க ஊருக்கு புதுசா?” ‘‘ஆமா... அப்பா ஈபில ஏஇயா இருக்காரு. இங்க டிரான்ஸ்ஃபராயிடுச்சு. போன மாசம்தான் வந்தோம்.

நீங்க இந்த ஊருதானா?’’ “பிறந்ததுலேந்து இந்த ஊருதான். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு, மூணு வருஷமா வெட்டி ஆபீசர். டிஎன்பிஸ்சி எக்ஸாமுக்கு  பிரிப்பேர் பண்ணிக்கிட்டிருக்கேன். இங்கதான் படிக்கிறதுக்கு வருவேன். உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவள் தன் மூடிய உதடுகளுக்குள்  தனது நுனிநாக்கை அழகாக ஒருமுறை சுழற்றிவிட்டு, ‘‘அவசியம் சொல்லணுமா?” என்றாள். ‘‘உங்க இஷ்டம்...” என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.  சில வினாடிகள் கழித்து, ‘‘அர்ச்சனா...” என்ற குரல் ஒலிக்க.... நான் திரும்பிப் பார்த்தேன். ஆளைக் காணவில்லை. நான் அடுத்த அடியை எடுத்து  வைக்க... ஒரு தூண் மறைவிலிருந்து கீழே குதித்தவள், புளியமரத்தடியில் மழைத்துளிகளில் நனைந்தபடி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி  ஓடினாள். அடுத்த முறை மழை வந்தபோது கல்மண்டபத்துக்குச் சென்றேன். அர்ச்சனாவும் வந்திருந்தாள். பேசினோம்.

பிறகு வந்த நாட்கள் ஆகாயத்தைப் பார்த்தபடியேதான் கழிந்தன. லேசாக வானம் மூடினாற்போல் இருந்தால் போதும். உடனே மண்டபத்துக்குக் கிளம்பி  விடுவேன். மழை வரும் நாட்களில் அவளும் தவறாமல் வந்துவிடுவாள். அர்ச்சனாவைப் பார்க்கும்போதெல்லாம் சிலிர்த்து…. பார்க்காதபோது  தவித்து… கவிதை எழுதி…. கனவு கண்டு, தூக்கம் கலைந்து, விடிய விடிய புரண்டு…. வீணாக வளர்த்துவானேன். அடுத்த இரண்டு மாதத்திற்குள்  நாங்கள் காதலிக்க ஆரம்பித்திருந்தோம். தினந்தோறும் பேசிச் சிரித்தோம். சிரித்துப் பேசினோம். “அர்ச்சனா… கொஞ்சம், கொஞ்சமா நான் பைத்தியமா  ஆயிகிட்டிருக்கேன். ராத்திரி படுத்தவுடனே ஒரு காதுல நீ பேசுற சத்தமும், மறு காதுல நீ சிரிக்கிற சத்தமும் கேட்டுகிட்டேயிருக்கு.

ஒரு கண்ணுல சிணுங்குற. இன்னொரு கண்ணுல வெக்கப்படுற. உன்னப் பாத்த பத்தாவது செகண்டுல கண்ணு, உடம்பெல்லாம் சூடாகி, இந்த  மழைலயும் அனலா கொதிக்குது. நீ வேணும்ன்னா தொட்டுப் பாரேன்...” என் ஈரக்கையை தனது நெய்ல்பாலிஷ் விரலால் அழுத்தமாகத் தொட்ட  அர்ச்சனா வேண்டுமென்றே, “ஆ… பயங்கரமா கொதிக்குது! இவ்வளவு ஹீட்டாவ இருப்ப… ஆ… சுடுது… சுடுது…!” என்றாள் தனது ஆள்காட்டி  விரலை உதறிக்கொண்டே குறும்புச் சிரிப்புடன். நான், “அய்யோ… பாத்துத் தொடக்கூடாது…” என்று வேகமாக ஆள்காட்டி விரலைப் பிடித்து என்  உதடுகளுக்குள் நுழைத்து ஈரமாக்கினேன். “இன்னும் சுடுதா?” என்றபடி நான் அவள் முகத்தைப் பார்க்க… அவள் கிறக்கத்துடன், “ம்…” என்றாள்.  தொடர்ந்து நான் என் நாக்கு நுனியால் அவள் விரலை நெருட…. ‘‘என்னைக் கொல்றடா…” என்றாள் அர்ச்சனா முனகலாக.

மண்டபத்தின் ஓரமாக உட்கார்ந்திருந்தோம். கொலுசணிந்த அவள் கால்களில் மழைத்துளிகள் படபடவென்று விழுந்துகொண்டிருக்க… அர்ச்சனா, “ஏய்...  கல்யாணமாயி நான் பிரசவத்துலயோ, ஆக்ஸிடென்ட்லயோ செத்துப் போயிட்டன்னு வச்சுக்க... இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?” என்றாள் என்  கைவிரல்களில் சொடக்கெடுத்தபடி. “பின்ன? ஆக்சுவலா நீ என் டேஸ்ட்டுக்கு இல்ல. இவ்ளோ பெரிய கண்ண இருட்டுல பாத்தா பயமா இருக்கு.  அதனால சின்னக் கண்ணு, சின்ன உதடு, சின்ன சிரிப்போட ஒரு சின்னப் பொண்ணக் கல்யாணம் பண்ணிப்பேன்!” “அடப்பாவி…” முறைத்த அர்ச்சனா,  “நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணுனனு வச்சுக்க. உன் ஃபர்ஸ்ட் நைட்டப்ப பேயா வந்து, உன் பொண்டாட்டி மேல குடியேறி, உன்னை  அப்படியே…” என்றவள் எழுந்து என் தலைமுடியைப் பிடித்து உலுக்கி, “டேய்… நான் அர்ச்சனா வந்துருக்கன்டா.

அதுக்குள்ள உனக்கு இன்னொரு பொண்டாட்டி கேக்குதா?” என்று அலற… நான் எழுந்து ஓட… அர்ச்சனா அருகிலிருந்த தென்னம்மட்டையை  எடுத்துக்கொண்டு துரத்தினாள். நான் அவள் கைவிரல் நகத்தைக் கடித்தபடி, “கல்யாணமானா நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ல்லாம் கிடையாது. ஃபர்ஸ்ட் டே!”  என்றேன். “ஃபர்ஸ்ட் டேன்னா?” நான் கடித்துப் பிய்த்த அவள் நகத்துண்டைத் துப்பிவிட்டு, “காலைலயே தாலி கட்டிட்டு, ராத்திரி வரைல்லாம்  காத்திருக்க முடியாது. தாலியக் கட்டுறோம். சோத்தப் போட்டு சொந்தக்காரனுங்கள எல்லாம் துரத்தி விடுறோம். கல்யாண மண்டப கதவச்  சாத்துறோம்...” என்று நான் கூற… அர்ச்சனா சத்தமாகச் சிரித்தாள். சிரித்தேன்… சிரித்தோம். அந்தச் சிரிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அவள் வீட்டிற்கு எங்கள் காதல் விஷயம் தெரிந்து... எனது வேலையின்மையைக் காரணம் காட்டி அவள் குடும்பத்தினர் எங்கள் காதலை எதிர்த்ததும்,  அவள் அப்பா கோயம்புத்தூருக்கு மாற்றிக்கொண்டு சென்றதும், வீட்டின் நெருக்கடியால் அர்ச்சனா ஒரு தில்லி மாப்பிள்ளையைத் திருமணம் செய்து  கொண்டதும், பின்னர் நான் திருமணம் செய்துகொண்டதும் அந்த மண்டபத்துக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் என்பதால் நான் விரிவாகச்  சொல்லவில்லை. நவம்பர் 2017. கடைத்தெருவில் மழைத்தூறலில் நனைந்தபடி அர்ச்சனாவின் தோழி ஜோதியைப் பார்த்தபோது, ‘‘அர்ச்சனா தம்பிக்கு  வர்ற 12ம் தேதி கல்யாணம். பொண்ணு தஞ்சாவூருதான். பொண்ணு வீட்டுல கல்யாணத்தை தஞ்சாவூர்லதான் நடத்துறாங்க.

அர்ச்சனாவும் வர்றா. மூணு நாள் இங்க நம்மூருல, எங்க வீட்டுலதான் இருப்பா...” என்று சொன்னவுடனேயே நான் ஆகாயத்தைப் பார்த்தேன். சரியாக  கார்த்திகை மாதம் வருகிறாள். தஞ்சை மாவட்டத்தில் கார்த்திகை மாதம், நல்ல மழைக்காலம். எப்படியும் அவள் இருக்கும் 3 நாட்களுக்குள் ஒரு  மழையாவது பெய்துவிடும். இங்கு இருந்துகொண்டு மழை பெய்யும்போது மண்டபத்துக்கு வராமல் அவளால் இருக்கமுடியாது. எதிர்பார்த்தபடியே  திருமணத்திற்கு முதல் நாள் மழை பெய்தது.

மண்டபத்திற்குச் சென்று காவிரியை ஆக்ரோஷத்துடன் அணைத்துக்கொண்டிருந்த மழைத்துளிகளைப் பார்த்தபடி மண்டபத்தின் வாசலிலேயே  அமர்ந்திருந்தேன். மழை மிதமான வேகத்தில் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. நாளைதான் கல்யாணம். மழை பெய்கிறது. அதனால் நிச்சயம்  அர்ச்சனா வருவாள். குடும்பத்தோடு வந்தால் கூட பரவாயில்லை. தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தால்கூட போதும் என்றிருந்தது. சற்று  யோசித்தால் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இன்னும் பழசையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு அவள் வருவாளா என்ன?

(அடுத்த இதழில் முடியும்)
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

மிலிட்டரி அப்பா!

சீனாவில் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மகளை தன் பைக்கில் கயிற்றால் கட்டி வைத்து வாலிபர் அரக்கத்தனமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும்  வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மகளை கட்டாயப்படுத்தும் மிலிட்டரி வகையறா பைக் வாலிபரை சீன போலீஸ் கண்டுபிடித்து  எச்சரித்துள்ளனர்.

யூ டியூப் பேபி!

அமெரிக்காவின் ஏர்ஃபோர்ஸ் கணினி நிபுணரான தியா ஃப்ரீமேன் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தே குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்திருக்கிறார்.  அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி போகும் விமானத்தில் வலி தொடங்க, இஸ்தான்புல்லில் இறங்கி ஹோட்டல் அறையில் பணியாளர்கள் உதவியுடன்  குழந்தையைப் பெற்றுள்ளார் தியா!

குருட்டு யானை சவாரி!

ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் 19 யானைகளுக்கு சரியான பார்வை கிடையாது என அறிக்கை அளித்து பீதி கிளப்பியுள்ளது  அரசு விலங்குநல வாரியம். பார்வையிழப்பு, காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட யானைகளை அமெர் துறைமுகத்தை பார்வையிட வரும்  டூரிஸ்ட்களுக்கு அரசு அளித்து வருகிறது என கூறுகிறது பீட்டா அமைப்பு!