டாய்லெட் டீ!



கடந்தாண்டு டிசம்பரில் ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த உவ்வே சம்பவம் இது.

டீயை கரம் சாயா சொல்லி சுடச்சுட விற்ற ரயில்வே பணியாளர், லாபத்துக்காக கிடைத்த கேப்பில் டாய்லெட்டில் புகுந்து டீகேனில் நீரைக் கலந்து  விற்றார்.  ஷாக்கான பயணிகளில் ஒருவர், டீ வியாபாரிக்கு தெரியாமல் அவரது ஆக்‌ஷனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட... ரயில்வே  நிர்வாகத்துக்கு புகார்கள் குவிந்தன.

‘‘செகந்திராபாத் டூ காசிபேட் பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் மற்றும் டீ விற்ற பணியாளர் சிவக்குமார்  ஆகியோரின் மீது விசாரணை நடந்து வருகிறது. அவரது லைசென்சிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பிடித்துக் கொள்ளப்படும்...’’ என்று தடாலடியாக  அறிவித்துள்ளார் ரயில்வே உயர் அதிகாரியான எம்.உமாசங்கர் குமார்.         
              
மனைவியின் மூக்கை வெட்டிய கணவர்!

மதுபானங்களும், போதைப்பொருட்களின் பயன்பாடும் புத்தியை எவ்வளவு தூரம் மழுங்கச் செய்யும் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவமே  உதாரணம்.

சாஜன்பூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் குடிநோயாளி. தினந்தோறும் வேலை செய்வதும் காசை குடித்து அழிப்பதுமாக இருந்தால் எந்த மனைவி  பொறுத்துக் கொள்வாள்? சங்கீதாவும் கணவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கு ஏற அருகிலிருந்த கத்தியை எடுத்து  மனைவியின் மூக்கை ராஜேஷ் வெட்டிவிட்டார். வலியால் சங்கீதா அலற... அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து நாசியைக் காப்பாற்றியுள்ளனர். இப்போது ராஜேஷ் லாக்கப்பில் கம்பி எண்ணி வருகிறார்.

கடல் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பிளாஸ்டிக் குழாய்!

உலகில் பயன்படுத்தப்படும் 90% பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்யப்படாமல் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக  கடலில் மட்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன.

இந்நிலையில் டச்சு நாட்டைச் சேர்ந்த போயன் ஸ்லேட் என்ற பதினெட்டு வயது வானியல் பொறியியலாளர் இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளார். இரண்டாயிரம் அடி நீளத்தில் பெரிய ட்யூப் போல யூ வடிவிலான பிளாஸ்டிக் குழாய், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை  எளிதில் சேகரிக்கும். The Ocean Cleanup என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் உருவான இக்குழாய் வரும் ஜூலை முதல்  சான்பிரான் சிஸ்கோ கடற்கரையில் செயல்பாட்டுக்கு வருகிறது.  ஐந்து ஆண்டுகளில் நாற்பது மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இக்குழாய் மூலம்  அகற்றலாம். திட்டம் வெற்றி பெற்றால் பசிஃபிக் கடலிலுள்ள 1.8 ட்ரில்லியன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றும் முயற்சி தொடங்கும்.   

உயிர் குடிக்கும் செல்ஃபி!

மதுவும், சிகரெட்டும் மட்டுமல்ல, செல்ஃபியும் உயிரைக்குடிக்கும் என தியேட்டர்களில் இனி வார்னிங் போட வேண்டும்.

ஒடிஷாவைச் சேர்ந்த பிரபு பத்தாரா, பாபதஹண்டி என்ற நகருக்கு தன் நண்பர்களுடன் ஜாலி சவாரி சென்று விட்டு தன் காரில் வீடு திரும்பிக்  கொண்டிருந்தார். அப்போது சாலையில் காயம்பட்ட கரடி நின்று கொண்டிருப்பதை எதேச்சையாகப் பார்த்துவிட்டார் பிரபு. செல்ஃபி வெறியரான அவர்  கரடியின் ஃபிளாஷ்பேக் பற்றி அறியாமல் அருகில் சென்று செல்ஃபி எடுத்தார்.

கொலைவெறியில் பிரபுவை கரடி குதறி எடுக்க... நண்பர்கள் அதனை வீடியோ எடுத்தனரே தவிர காப்பாற்ற வரவில்லை! அங்கு வந்த தெருநாய்  ஒன்று மட்டுமே பிரபுவைக் காப்பாற்ற போராடியது. ஆனாலும் பயனில்லை. குற்றுயிராகக் கிடந்த பிரபுவைத் தூக்கியபடி பத்து கி.மீ. தொலைவிலிருந்த  வனத்துறை அலுவலகம் சென்று சேர்வதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.  

தொகுப்பு: ரோனி