இந்தியாவுக்கு வந்தாச்சு EYE GUIDE!



முதுகுத் தண்டுவடக் கோளாறு மற்றும் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சூப்பர் Guide

நம்புங்கள். சுமாராக 60 மில்லியன் மக்கள் முதுகுத் தண்டுவடக் கோளாறு மற்றும் மூளை பக்கவாதம் என்ற இரண்டு பிரச்னைகளால் சிக்கித்  தவிக்கின்றனர் என்கிறது ஆய்வு ஒன்று. இவர்களில் பெரும்பாலானோர் பேச அல்லது கைகளை அசைத்து தன் தேவை என்ன என்று மற்ற வர்களிடம்  பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களால் ஓரிடத்தில் அமர முடியும் அல்லது படுக்கையில் மட்டும் இருக்க முடியும்.  இவர்களுக்காகவே இந்தியாவில் முதல் முறையாக கண்களால் பேசும் (Eye Guide) முறையை கண்டறிந்துள்ளது TWBA India.

‘ப்ளின்க் டூ ஸ்பீச்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள கைட், முழுக்க முழுக்க கண் அசைவுகள், கருவிழி உருட்டுதல், கண் சிமிட்டல்களை மட்டுமே  மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 அசைவுகள் கொண்டு உருவாகி யுள்ள இந்த கைட், பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத்  தேவைகளை மற்றவர்களுக்கு சுலபமாகத் தெரிவிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. TBWA India என்னும் விளம்பரதாரர் நிறுவனம் உருவாக்கியுள்ள  இந்தப் புத்தகத்தை Foundation of MND / ALS அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

www.ashaekhope.com என்னும் தளத்தில் PDF வடிவில் இலவசமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘Quiet people have the loudest  minds’ - பிரபல அறிவியலாளர் மற்றும் மோட்டார்  நியூரான் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் பொன்மொழியுடன்  தொடங்கும்  இந்தப் புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. விரைவில் இந்தியாவிலுள்ள மற்ற முக்கிய மொழிகளிலும் இந்த  கைட் வெளியாகுமாம். ‘‘பாதிக்கப்பட்டவர்கள் சீற்றத்துடன் கண்களைச் சிமிட்டினால் ஏதோ அவசரம் என அர்த்தம்.

இரண்டுமுறை கண் சிமிட்டினால் இல்லை / No என அர்த்தம். இப்படி 50 முக்கிய அசைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின்  உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்னையை மருத்துவர்களிடமோ அல்லது நர்ஸ்களிடமோ சுலபமாகவே தெரிவிக்க முடியும்...’’ என்கிறார்  டாக்டர் ஹேமாங்கி சனே (founder president of Asha Ek Hope and deputy director of Neurogen Brain and Spine Institute,  Seawoods, Navi Mumbai).

அதிகபட்சம் இரண்டொரு நாட்களில் எல்லோரும் சுலபமாகக் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த கைட் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்  மும்பை சியோன் மருத்துவமனை புரொஃபசரும் துறை இயக்குனருமான டாக்டர் அலோக் ஷர்மா. இந்தப் புத்தகத்தை கீதா ரதி மற்றும் அர்ஷியா  ஜெயின் ஆகியோர் தங்கள் குழுவினருடன் இணைந்து உருவாக்கியுள்ளனர். “பல லட்சங்கள் செலவழித்து வாய்ஸ் டிடெக்டரோ அல்லது கம்ப்யூட்டர்  ஸ்பீக்கிங் சிஸ்டமோ எல்லோராலும் வாங்க முடியாது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்னைகளை எப்படி மற்றவர்களுக்குப்  புரியவைப்பது என்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியாகவே இந்த கைட் அமைந்துள்ளது...’’ என்கிறார்கள்.

ஷாலினி நியூட்டன்