விரல்நுனியில் தாய்மொழி!களமிறங்கும் டெக் நிறுவனங்கள்

கைப்பக்குவத்தால் நாக்கின் வழியாக இதயத்தைத் தொடுவது சமையல் என்றால் உணர்வு வழியாக இதயத்துக்கு நெருக்கமாவது நிச்சயம் தாய்மொழி  மட்டும்தான்! இந்தியாவில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தாய்மொழி பாசத்தை டெக் நிறுவனங்கள் கப்பென பிடித்துள்ளன. உள்ளூரில் சரக்கை விற்க  அவர்களின் மொழியில் பேசினால்தானே வேலை நடக்கும் என்பதுதான் கான்செப்ட்.

‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஃபேஸ்புக்’ என அனைத்தும் சரியான நேரத்தில் கச்சிதமாக இந்தியாவில் தாய்மொழி ரூட்டைப் பிடித்துள்ளன. இதன் அடுத்த  கட்டமாக ‘கூகுள்’ வரும் ஆகஸ்டில் தன் சர்ச் எஞ்சினில் எட்டு மொழிகளைப் புதிதாக சேர்க்கவுள்ளது! ‘மைக்ரோசாஃப்ட்’டின் ‘பிங்’ தேடுபொறி குழுவும்  தங்கள் பங்குக்கு மூன்று இந்திய மொழிகளை புதிதாக தங்கள் சர்ச் எஞ்சினில் இணைத்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் தமிழில் எழுத, ‘அழகி’,  ‘எழுத்தாணி’, ‘செல்லினம்’ உட்பட பல மென்பொருட்கள் பரவலாக உதவுகின்றன. ஏன், உள்ளூர் மொழிகளில் மார்க்கெட் புரிந்துகொண்ட வாட்ஸ்அப்பில்  இந்தி மட்டுமல்ல, மராத்தியில் கூட செய்தி அனுப்பலாம்.  

23.4 கோடி இன்டர்நெட் பயனர்கள் கொண்ட இந்தியாவில் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்களின் அளவு 17.5 கோடி. 2021ம் ஆண்டுக்குள் பத்தில்  ஒன்பது பேர் இந்திய மொழிகளைப் பயன்படுத்தி மொழி இடைவெளியைக் குறைப்பார்கள் என்று தகவல் தருகிறது கூகுள் மற்றும் கேபிஎம்ஜி  நிறுவனத்தின் அறிக்கை. அதாவது 2021ம் ஆண்டு உள்ளூர் மொழி பயனர்களின் அளவு, 53.6 கோடியாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.  நகரங்களில் ஏழாயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஏழு உள்ளூர் மொழிகளில் இணையத்தை அணுகியவர்களின் அளவு 99%. நாட்டின் தேசிய சராசரி  78% எனும்போது உள்ளூர் மொழிகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, மொழியைப் பயன்படுத்தும் தேவை என்பது இல்லாமலேயே அந்த வசதி விரல்நுனியில் உங்களுக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்?  பிஸினஸ், சாட்டிங் என அடித்து நகர்த்துவீர்கள்தானே! அதுதான் எதிர்கால பிஸினஸ் மந்திரம்! மொழிக்கான மென்பொருள் என்பதைக் கடந்து  ஆண்ட்ராய்டுக்கான ஓஎஸ் அளவு யோசித்திருக்கிறார் ராகேஷ் தேஷ்முக். ‘‘எங்கள் போன்களை பயன்படுத்தினால் உங்களுக்கு வரும் ஆங்கில  குறுஞ்செய்திகளைக் கூட உங்களுக்கான மொழியில் மாற்றிக் கொள்ளலாம்!’’ என உறுதியளிக்கும் ராகேஷின் இன்டஸ் ஓஎஸ், இருபத்திரெண்டு  மொழிகளை ஆதரிக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனமான இது, தன் ஸ்மார்ட்போன் ஓஎஸ் ஐடியாவுக்காக பெற்ற முதலீடு, 1.3 கோடிகள்! மாதத்துக்கு இருபதுகோடி பயனர்களைப்  பெற்று வரும் வாட்ஸ்அப், பதினொரு இந்திய மொழிகளையும் இதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பதிமூன்று மொழிகளையும் பயன்படுத்தும்  வசதியைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஷேர்சாட் போன்ற சேவை 30 லட்சம் பயனர்களைப் பெற்றிருக்க ஒரே காரணம், அவை உள்ளூர்  மொழியில் பல்வேறு செய்திகளை நண்பர்களுக்குப் பகிர உதவுவதோடு, வாட்ஸ்அப்பிலும் அவற்றை இணைத்து பயன்படுத்தலாம் என்ற வசதிகள்தான்.

சரி, இணையத்தில் மொழிகளில் முந்துவது எது? செம்மொழியான தமிழ்தான்! இதற்கடுத்து இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள். தமிழில் சிறுகதைகள்  மற்றும் படைப்புகளை எழுதுவதோடு அதில் பல்வேறு போட்டிகளை நடத்தி உள்ளூர் மொழிகளுக்கு பூஸ்ட் கொடுக்க ‘பிரிதிலிபி’ இணையதளம் போல்  பல செயல்பட்டு வருகின்றன. அண்மையில் தமிழ் வலைத்தளங்களுக்கான Adsense திட்டத்தையும் கூகுள் அறிவித்துள்ளது. இதனால் பலரும்  தமிழில் எழுதுவார்கள் என நம்பலாம். இணையத்தில் மொழித்தடையை உடைக்க Project Bhasa என்ற திட்டத்தை ‘மைக்ரோ சாஃப்ட்’ செயல்படுத்தி  வருகிறது.

இதோடு 2016ம் ஆண்டு ஸ்விஃப்ட்கீ என்ற ஆண்ட்ராய்ட் கீபோர்ட் அப்ளிகேஷனை கையகப்படுத்திய ‘மைக்ரோசாஃப்ட்’ உள்ளூர் மொழியில் தன்னை  வலுப்படுத்த பதினைந்து மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பயனர்களுக்கு வழங்குகிறது. விரைவில் இ-வணிக தளங்களிலும் மொழிகளுக்கான  ஆப்ஷன்கள் இடம்பெறவிருக்கின்றன. 1990களில் ஐந்து இணையதளங்களில் நான்கு ஆங்கிலத்தில் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை  குறைந்திருப்பது உள்ளூர் மொழிகளுக்கான மார்க்கெட் உருவாகி வருகிறது என்பதற்கு சான்று. தமிழ் வாழ்க என்ற வார்த்தை இன்று நம் விரல்களுக்கு  இறங்கி உலகம் முழுக்க பரவலாகி வருவது பெருமைதானே!  

தமிழால் இணைவோம்!

இந்தியாவிலுள்ள மொழிகள்    780
பேசப்படும் மொழிகள்    122 (10 ஆயிரம் பேர் பேசுவதன் அடிப்படையில்).
அதிகாரபூர்வ மொழிகள்    22.
இணையத்தில் முதன்மை
பயனர்கள் (2016)    தமிழ் (42%), இந்தி (39%),
கன்னடம் (37%).
2021ல் முந்தும் பயனர்கள்    இந்தி (38%), மராத்தி (9%),
பெங்காலி (8%).
(People Linguistic Survey of india 2010 - 13, Census 2001).

மொழியின் தாக்கம்  (பயனர் எண்ணிக்கை)!

பொழுதுபோக்கு    16.7 கோடி (2016), 39.2 கோடி (2021).
சமூகவலைத்தளம்    11.5 கோடி (2016), 30.1 கோடி (2021).
செய்திகள்    10.6 கோடி (2016), 28.4 கோடி (2021).
இ-வணிகம்    4.2 கோடி (2016), 16.5 கோடி (2021).
(KPMG - Google report 2017).

ச.அன்பரசு