சினிமா ஸ்டிரைக் முதல் வரலட்சுமியின் அரசியல் வருகை வரை...விஷால் OPEN TALK

‘‘ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் ஸ்டிரைக் நடந்தது. இப்ப அத்தனை பேருக்கும் நல்லது நடந்திருக்கு. சிலபேர் என்கிட்ட, ‘எதுக்கு எப்பவும் சங்க  வேலை பார்த்துட்டு இருக்க... நடிப்புல கவனம் செலுத்தியிருந்தா இந்த மூணு வருஷங்கள்ல பத்து படங்களாவது செய்திருக்கலாமே’னு அட்வைஸ்  செய்திருக்காங்க. கோடிகோடியா சம்பாதிக்கணும்னு எப்பவும் நினைச்சதில்ல. நடிக்காம போனதால இழந்த கோடிகளை எப்ப வேணா சம்பாதிக்க  முடியும். எனக்கு திரைத்துறையோட நலம்தான் முக்கியம்...’’ ‘இரும்புத்திரை’ ரிலீசுக்கு காத்திருக்கும் நேரத்திலும் நிதானமாகப் பேசுகிறார் விஷால்.

‘‘புது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்தக் கதையைச் சொன்னப்ப வில்லன் கேரக்டர்ல நடிக்கவே விரும்பினேன். ஆனா, அர்ஜுன் சாருக்குதான் அது  பொருத்தமா இருக்கும்னு சொல்லிட்டார். சில விஷயங்களை சாதாரணமா எடுத்துப்போம். ஆனா, அதுக்குள்ள மிகப்பெரிய ஆபத்து இருக்குனு தெரிய  வர்றப்ப நம்மால ஜீரணிக்கவே முடியாது. ஆதார் கார்டு, இன்டர்நெட், மொபைல் போன் பயன்படுத்துறதுக்குப் பின்னால அவ்வளவு சைபர் க்ரைம்  ஆபத்துகள் இருக்கு. பயன்படுத்தற செல்போன் கம்பெனி உட்பட பல இடங்கள்ல நம்ம ஆதார் எண்ணை பதிஞ்சிருக்கோம். இதனால ஏற்படுகிற  பின்விளைவுகள் பத்தி நாம யோசிக்கறதே இல்ல.

ஏர்போர்ட்டுல கொடுக்கிற போர்டிங் பாஸை நாம கீழ வீசிடறோம். ஆனா, அதை எப்படி தவறா சிலபேர் பயன்படுத்தறாங்கனு தெரிஞ்சா  ஷாக்காகிடுவோம். ‘இரும்புத்திரை’ல அதை எல்லாம் தொட்டுக் காட்டியிருக்கோம். அர்ஜுன் சார் என் குருநாதர். அசிஸ்டெண்ட் டைரக்டரா  அவர்கிட்டதான் ஒர்க் பண்ணினேன். மரியாதை கலந்த பயம் எப்பவும் அவர் மேல எனக்கு உண்டு. என்னை ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கார்.  அப்படிப்பட்டவரை நான் வில்லனாக்கி இருக்கேன். சும்மா மிரட்டியிருக்கார்! ரதி தேவி கேரக்டர்ல சமந்தா பிச்சு உதறியிருக்காங்க!’’ சக நடிகர்களை  வியந்தபடி புன்னகைக்கிறார் விஷால்.

ஸ்டிரைக்குக்குப் பிறகும் க்யூப் தொடருதே..?

Slow and steadyதான் எப்பவும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஸ்டிரைக் முடிஞ்சதும் எல்லாத்தையும் அதிரடியா நிறுத்திட முடியாது. அரசு  தலையிட்ட பிறகு அவங்களும் பணத்தை குறைச்சிருக்காங்க. கோடிக்கணக்குல அவங்க முதலீடு செய்திருக்காங்க. அதை நாங்க மறுக்கலை. ஆனா,  அந்த முதலீடை எடுக்க தயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைக்கணும்னா எப்படி..?

க்யூப்புக்கு பதிலா சில நிறுவனங்கள்கிட்ட ஒப்பந்தங்கள் போட்டிருந்தோம். அதை செயல்படுத்தறதுக்கான விஷயங்கள்ல இப்ப கவனம் செலுத்தறோம்.  நாம ஸ்டிரைக் தொடங்கினப்ப தென்னிந்தியா முழுக்க ஆதரவு தெரிவிச்சாங்க. அப்புறம் சில காரணங்களால அவங்க பின்வாங்கிட்டாங்க. நாம தனிச்சு  நின்னு ஜெயிச்சிருக்கோம். நிச்சயமா இப்ப மத்த மாநிலத்து திரைத்துறையினரும் சந்தோஷப்படுவாங்க!

எப்படி வந்திருக்கு ‘சண்டக்கோழி 2’?

லிங்குசாமி சாரோட ‘சண்டக்கோழி’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பட்டிதொட்டி எல்லாம் என்னை கொண்டு போய் சேர்த்த படம் அது. மீரா ஜாஸ்மின்  கேரக்டர் ரொம்ப துறு துறுனு க்யூட்டா அதுல இருக்கும். இந்த பார்ட் 2ல அதை விட மும்மடங்கு க்யூட்டா கீர்த்திசுரேஷ் கேரக்டர் பேசப்படும். 50  சதவிகித ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. இதுக்கு அடுத்து நான் நடிக்கிற படத்தை புது இயக்குநர் மோகன் டைரக்ட் பண்றார்.

ஒரு படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாமயே அல்லது வெளியிடறதுக்கு முன்னாடியே போட்ட பணத்தை எடுத்துடலாம்னு இப்ப கோலிவுட்ல  பேசறாங்களே..?

அது உண்மைதான். ஆன்லைன் ரைட்ஸால பட வியாபாரம் ஈசியா இருக்கு. சில வெளிநாடுகள்ல நம்ம படம் ரிலீஸ் ஆகாது. அங்குள்ளவங்க  ஆன்லைன்லதான் நம்ம படத்தை பார்த்தாகணும். இதே மாதிரி நம்மூர்லயும் ஆன்லைன் ரைட்ஸ் கொடுத்தா திருட்டுத்தனமா டவுன்லோட் செஞ்சு  பார்க்கறது இல்லாம போகும்.

பஸ்ல, ரயில்லனு எல்லா இடங்கள்லயும் ஒரிஜினல் பிரிண்டையே இனி பார்க்கறதுக்கான சாத்தியம் இருக்கு. அதேநேரம்  தியேட்டருக்கு போய்தான் படம் பார்க்கணும்னு விரும்பறவங்க நிச்சயமா திரையரங்குக்கு வருவாங்க. அதாவது சென்னை தி.நகர்ல வெங்கடாஜலபதி  கோயில் இருந்தாலும் திருப்பதிக்கு போய் தரிசனம் பண்றோம் இல்லையா... அப்படி!

தேர்தல் பிரசாரத்துக்கு ரஜினியும் கமலும் கூப்பிட்டா போவீங்களா?

இன்னும் உள்ளாட்சித் தேர்தலே வரல! எலெக்‌ஷன் வரட்டும், அப்புறம் அதைப்பத்தி பேசலாம். கமல் சார் கட்சி தொடங்கி ஒவ்வொரு விஷயத்துலயும்  தீவிரமா செயல்பட ஆரம்பிச்சுட்டார். எல்லாமே புது சிந்தனைகளா இருக்கு. ரஜினி சார் இன்னும் கட்சியைப் பத்தி அறிவிக்கவே இல்லையே! அவரும்  அறிவிக்கட்டும். அப்புறம் பிரசாரத்தைப் பத்தி யோசிக்கலாம்!

உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் வரூ என்ன சொல்றாங்க..?

‘சேவ் சக்தி’ அமைப்பை வரலட்சுமி தொடங்கினபிறகு யாருக்காவது ஏதாவது பிரச்னைனா அதைத் தீர்க்க முதல் ஆளா போய் நிக்கறாங்க.  அநியாயத்தைத் தட்டிக் கேட்கறாங்க. நியாயத்துக்காக போராடறாங்க. நீங்க வேணா பாருங்க... கூடிய சீக்கிரத்துல அவங்க அரசியலுக்கு வந்துடுவாங்க!

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்குதே..?

ஆமா. நடிகர் சங்கத்துல கட்டட வேலைகளும் முழு வீச்சுல நடக்குது. அடுத்து வர்ற தேர்தல்லயும் கண்டிப்பா போட்டியிடுவேன். நடிகர் சங்கத்துக்கு  செய்ய வேண்டியது இன்னும் இருக்கு!  

மை.பாரதிராஜா