செக்யூரிட்டிகள்!இரவுக்கு ஆயிரம் கண்கள்

‘‘இந்த பர்னிச்சர் கடைலதான் நைட் செக்யூரிட்டியா இருக்கேன். இரவு முழுக்க வெளில இருக்குற சேர்ல உட்கார்ந்துட்டு கடையை பத்திரமா  பாத்துக்கணும். மழை வந்தா, பக்கத்துல இருக்குற ஏடிஎம் சென்டருக்குள்ள ஒண்டிக்குவேன். அங்க செக்யூரிட்டியா இருக்கறவரு தெரிஞ்சவர்தான். ஒன்  பாத்ரூம்னா ஒதுக்குப்புறமா போயிடலாம். ரெண்டுக்குனா கஷ்டம். சைக்கிளை எடுத்துட்டு மூணு கி.மீ. தூரத்துல இருக்குற வீட்டுக்குத்தான்  போயாகணும்...’’

சிரமங்களை மறந்து பேசுகிறார் சண்முகம். பகல் நேரத்தில் அக்கம்பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் மக்கள் விரையும் ஆற்காடு சாலை.  அங்கே அமர்ந்திருக்கிறது அந்த பர்னிச்சர் கடை. நம்மால் சில நிமிடங்கள்கூட இருக்க முடியாத ஓர் இடத்தில் நான்கு வருடங்களாக வேலை  பார்க்கிறார் சண்முகம். அதுவும் தன்னந்தனியாக; இரவில். ‘‘பத்து மணிக்கு கடையைப் பூட்டிடுவாங்க. அப்ப இருந்து என் வேலை ஆரம்பிக்கும்.  எஃப்.எம்.ல பாட்டுக் கேட்பேன். ரோட்டுல போற வண்டிகளை வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன். நடு ராத்திரில டீக்காரர் வருவார். அவர் கூட கொஞ்ச  நேரம் பேசுவேன். சாலையோரத்துல கடை இருக்கறதால தூசு அள்ளி முகத்துல கொட்டும். கொசு பிடுங்கி எடுக்கும். காத்து வராது.

அதனால கொஞ்ச நேரம் அங்கயும் இங்கயும் நடந்துட்டு வருவேன். முப்பது நாளும் இப்படித்தான். லீவ் எல்லாம் கிடையாது. காய்ச்சல், தலைவலினு  வந்தப்ப கூட வீட்ல இருக்கல. சில சமயம் அசதியில அப்படியே கண் அசந்துருவேன். ஆனா, நாலு மணிக்கு தானாவே முழிப்பு வந்துடும். காலைல  கடை திறந்த பிறகுதான் வீட்டுக்குக் கிளம்பணும். மூணு வேளையும் ஹோட்டல்லதான் சாப்பாடு. மத்தியானம் மட்டும் கொஞ்ச நேரம் தூங்கு வேன்...’’  என்கிறக் சண்முகத்துக்கு மாதச் சம்பளம் 9 ஆயிரம் ரூபாய். சென்னை மாநகரம் முழுவதும் நிரம்பியிருக்கும் சின்னச் சின்ன கடைகளை இரவில்  காப்பது இவரைப் போன்ற முதிய செக்யூரிட்டிகள்தான். ‘‘இந்த வேலைதான் பாக்கணும்னு வைராக்கியம் எதுவும் இல்ல. இதான் கிடைச்சது.

பொறந்து வளர்ந்தது எல்லாமே சிதம்பரத்துல. ஆறாவது வரைக்கும் படிச்சேன். படிப்பு ஏறல. பிஸ்கட் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டேன். மூணு  வருசத்துலயே சொந்தமா பிஸ்கட் கம்பெனி ஆரம்பிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்குக் கீழே பத்துப் பேர் வேலை செஞ்சாங்க! மனைவி,  குடும்பம், குழந்தை, பிசினஸ்னு சந்தோஷமா இருந்தேன். யாரு கண்ணு பட்டுச்சோ... பிசினஸ் சரியாப் போகல. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட  முடியல. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்சேன். வீடு, கம்பெனி, நிலத்தை எல்லாம் வித்து கடனை அடைச்சேன்.  ஊர்ல இருக்க பிடிக்காம மெட்ராஸுக்கு வந்துட்டேன். 14 வருசம் ஓடிப்போச்சு. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி மனைவி இறந்துட்டா.

பசங்க அவங்கவங்க வேலையைப் பாத்துட்டுப் போயிட்டாங்க. இப்ப ஒண்டியா இருக்கேன். நிறைய வேலைகள் பார்த்துட்டேன். ஆனா, செக்யூரிட்டியா  இருக்கறதுல கொஞ்சம் நிம்மதி இருக்கு. நாலு பேர் கூட பேச முடியுது...’’ கண்களில் நீர் ததும்ப தன் கதையைச் சொன்ன சண்முகத்துக்கு வயது 60.  இவர் போன்ற முதிய செக்யூரிட்டிகளுக்குப் பின்னே சொல்ல முடியாத கதைகளும், உதாசீனங்களும், அவமானங்களும் கொட்டிக்கிடக்கின்றன. இதுவே  அவர்களின் இறுக்கத்துக்குக் காரணம். கடந்த காலத்தை மறக்கவும், தங்களைக் காத்துக்கொள்ளவுமே இரவையும், தனிமையையும் அவர்கள்  நாடுகிறார்கள். இதற்கு ஒரு வழித்தடமாக இருக்கிறது இந்த செக்யூரிட்டி பணி. எல்லோராலும் கைவிடப்பட்ட இவர்களை அரவணைத்து  ஆறுதலளிக்கிறது இரவு.

வயதான செக்யூரிட்டிகளின் நிலை இப்படியென்றால் ஓ.எம்.ஆரில் உயர்ந்து நிற்கும் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் இளம் செக்யூரிட்டிகளின்  கதையோ இன்னொரு திரைப்படம். ‘‘இரவு, பகல்னு மாத்தி மாத்தி டியூட்டி வரும். நைட் வாரத்துல கொழந்தைகளை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.  வேலை முடிச்சுட்டு காலைல வீட்டுக்குப் போனா கொழந்தைங்க ஸ்கூலுக்குப் போயிருப்பாங்க. அவங்க ஸ்கூல் விட்டு வர்றப்ப நான் தூங்கிட்டு  இருப்பேன். எழுந்து வேலைக்கு ரெடியாகுற பிஸில அவங்களை கண்டுக்க முடியாது. இதனால மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும்.  மத்தபடி இந்த வேலைல சிரமம் இல்லை. இது அமெரிக்காவோட சாஃப்ட்வேர் கம்பெனி. 24 மணி நேரமும் வேலை நடந்துட்டே இருக்கும்.

உள்ள யார் வர்றாங்க, வெளியில யார் போறாங்கனு நோட் பண்ணி வைக்கறதுதான் வேலை. என்னை மாதிரியே அஞ்சு பேரு இருக்காங்க.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை. ஒருத்தர் முழிச்சிட்டு இருக்கறப்ப, இன்னொருத்தர் தூங்கிப்போம். ஆனா, தூங்கும்போது செக்யூரிட்டி  கம்பெனில இருந்து செக்கிங் வந்துட்டா ஆயிரம் ரூபா ஃபைன் கட்டணும். இல்லைன்னா சம்பளத்துல பிடிச்சுப்பாங்க. மாசத்துக்கு நாலு நாள் லீவு,  இ.எஸ்.ஐ., பி.எஃப், டாய்லெட், கேன்டீன், போனஸ்னு எல்லா வசதியும் இருக்கு. எந்தக் குறைச்சலும் இல்ல...’’ படபடவென பேசுகிற சாமிநாதனுக்கு  மாதச் சம்பளம் 14 ஆயிரம் ரூபாய். ‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி இங்கிருந்த இறால் ஃபேக்டரில சூப்பர்வைசரா இருந்தேன்.

அப்ப ஓ.எம்.ஆர்ல புதுசு புதுசா வெளிநாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வர ஆரம்பிச்சது. அவங்களுக்காக இந்த ரோட்டுல இருந்த வொர்க் ஷாப்ஸ், மீன்  நாத்தம் அடிக்கற ஃபேக்டரிகள்னு நூத்துக்கணக்கான கம்பெனிகளை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. இந்த இடம் நாத்தமடிக்காம, அமைதியா  இருந்தாதான் அவங்க இங்க வந்து தொழில் தொடங்குவாங்களாம். இதனால என்னை மாதிரி ஆயிரக்கணக்கான பேர் வேலை இழந்தோம். எங்க  ஃபேக்டரி ஆந்திராவுக்குப் போயிடுச்சு. என்னையும் அங்க கூப்பிட்டாங்க. நான் போகலை. அப்புறம் வேலை தேடி அலைஞ்சேன். கடைசில நான்  வேலை பார்த்த இடத்துக்குப் பக்கத்துல இருக்குற இந்த சாஃப்ட்வேர் கம்பெனில செக்யூரிட்டியா உங்க முன்னால நிற்கிறேன்...’’ கவலையை மறந்து  புன்னகைக்கிறார் சாமிநாதன்.

ஓ.எம்.ஆரில் இருக்கும் ஒவ்வொரு சாஃப்ட்வேர் நிறுவனத்திலும் குறைந்தபட்சம் ஐந்து முதல் எட்டு செக்யூரிட்டிகள் இரவு முழுவதும் வலம்  வந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களில் வயதான ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை. ‘‘மூணு வருசமா நைட் டியூட்டிதான் பாக்கறேன். ஆனா,  இதுவரைக்கும் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. பகல்ல தூங்கறதால நிறைய விஷயங்களை இழக்கறேன். நல்லது கெட்டது எதுக்கும்  போக முடியல. தியேட்டர்ல படம் பார்த்தே ரெண்டு வருசமாச்சு. லீவ் நாட்கள்ல குடும்பத்தோட செலவு பண்றதுக்கே நேரம் பத்தல. வேற நல்ல  வேலையா தேடிட்டு இருக்கேன்...’’ என்கிறார் கேசவன். சாலிகிராமத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக இவர் இருக்கிறார்.

முழுப் பகல், முழு இரவு, பகல், இரவு என மாறி மாறி வரும் ஷிஃப்ட்... என்று செக்யூரிட்டி வேலையில் மூன்றுவிதமான ஷிஃப்ட்கள் இருக்கின்றன.  இரவு ஷிஃப்ட்டுக்கு கூடுதல் சம்பளம் என்பதால் பெரும்பாலானவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கின்றனர். நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆள் அரவமில்லாமல்  மெளனத்தால் ததும்புகிறது தி.நகர். போத்தீஸுக்கு அருகில் இருக்கும் நகைக்கடைகளில் செக்யூரிட்டிகளாக இருக்கும் பத்து, பதினைந்து பேர் ஒரு  கடையின் முன் ஒன்று கூடுகின்றனர். வாசற்படிக்கட்டில் லேப்டாப்பை பொருத்தி தமிழில் ஹிட்டடித்த படத்தை ஓட விடுகின்றனர். அதிகாலை வரை  படம் பார்ப்பதிலும், அரட்டை அடிப்பதிலும் இவர்களின் இரவு கரைகிறது. இதற்கிடையில் தங்களின் பணியைக் கவனிப்பதிலும் அவர்கள்  தவறுவதில்லை.

பாண்டி பஜாரில் இருக்கும் துணிக்கடை, பாத்திரக் கடை, ஹோட்டல்... என்று ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் இரண்டு செக்யூரிட்டிகள்  இருக்கிறார்கள். ஆனால், இந்தியா முழுதும் நிரம்பியிருக்கும் ஏடிஎம் சென்டர்களுக்கு ஒரே ஒரு செக்யூரிட்டிதான். ‘‘இராணுவத்துல வேலை  செஞ்சிருக்கணும்னு அவசியமில்லை. பேங்க்ல செக்யூரிட்டியா போகணும்னாதான் எக்ஸ் சர்வீஸ் மேன் கேட்பாங்க. ஏன்னா, அவங்களுக்குத்தான்  துப்பாக்கி சுடத் தெரியும். லைசென்சு இருக்கும். கடை, ஏடிஎம், கம்பெனில... யார் வேணாலும் செக்யூரிட்டியா ஆகலாம். நாங்க ரெண்டு பேரும் இந்த  காம்ப்ளக்ஸில இருக்குற இருபது கடைகளையும் பாத்துக்கிறோம். நைட் ஏழு மணிக்கு வந்தோம்னா காலை ஏழு மணி வரைக்கும் இருக்கணும்.

பகல்ல இங்க செக்யூரிட்டி இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கடையைச் சுற்றி ரவுண்ட் அடிச்சிட்டு விசில் ஊதணும். பன்ச் பண்ணணும்.  வாரத்துக்கு ஒரு நாள் லீவு. அப்ப எனக்குப் பதிலா இன்னொருத்தர் வருவார். கேமரா இருக்கு. தூங்க முடியாது. இந்தக் கடைகள் மாசா மாசம் ஒரு  தொகையை எங்க நிறுவனத்துக்கு கொடுக்கும். அதுல கமிஷன் பிடிச்சிட்டு மீதியை எங்களுக்கு சம்பளமா கொடுப்பாங்க. அதனால இந்த தேதிலதான்  சம்பளம்னு உறுதியா சொல்ல முடியாது. நாலு மாசத்துக்கு முன்னாடி 20-ந் தேதிதான் கிடைச்சது. எல்லா செக்யூரிட்டிக்கும் இதே நிலைதான்...’’  என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த செக்யூரிட்டி. இதை ஆமோதிக்கிறார் அங்கிருக்கும் சக செக்யூரிட்டி. நீலாங்கரையில் விரிந்து செல்லும்  சாலையில் நிமிர்ந்து நிற்கிறது அந்த காம்ப்ளக்ஸ்.

பெரும் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்கள், மருத்துவமனைகள்... எல்லாம்  தங்களுக்கு வேண்டிய செக்யூரிட்டி கார்டுகளை, செக்யூரிட்டி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். யாரும் நேரடியாக செக்யூரிட்டிகளை  வேலைக்கு எடுப்பதில்லை. சின்னச் சின்ன கடைகள், வொர்க் ஷாப்புகள்தான் தங்களுக்கு வேண்டிய செக்யூரிட்டி களை தாங்களே நியமித்துக்  கொள்கின்றனர். ‘‘பகல்ல என்னை மாத்திவிட ஆள் வரலைனா ரொம்ப சிரமம். தொடர்ந்து நானே பகல்லயும் வேலை பார்க்கணும். இங்க டாய்லெட்,  பாத்ரூம் எதுவும் இல்ல. பக்கத்துல இருக்குற கார்ப்பரேஷன் பாத்ரூமுக்குதான் போயாகணும். கடைல சாப்புடணும். தூக்கம் கெடும். மறுபடியும் நைட்  டியூட்டியும் பாக்கணும். மத்தபடி எந்த கஷ்டமும் இல்ல...’’ என்கிறார் கோயம்பேட்டில் உள்ள ஏடிஎம்மில் செக்யூரிட்டியாக இருக்கும் பரமசிவம்.

சென்னை முழுவதும் இரவு நேரப் பணியில் இருக்கும் பெரும்பாலான செக்யூரிட்டிகளுக்கு இருக்கும் மற்ற பிரச்னைகள்: மழை வந்தால் ஒதுங்க இடம்,  கழிவறை வசதி, கொள்ளையர்களின் தாக்குதல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை. ‘‘எம்.ஏ., பி.எட் படிச்சிருக்கேன். சொந்த ஊர் நாகப்பட்டினம். எந்த  வேலையும் கிடைக்காம செக்யூரிட்டியாகிட்டேன்.  கல்யாணமாகிடுச்சு. மாசம் 11 ஆயிரம் சம்பளம். இந்த இடத்துல போலீஸ் நைட் ரவுண்ட் வருவாங்க.  கண் அசந்துட்டா திட்டுவாங்க. சில போலீஸ், ‘அலர்ட்டா இரு...’னு தன்மையா பேசுவாங்க...’’ என்கிற சோமசுந்தரத்தைப் போல வேலை கிடைக்காத  பட்டதாரிகளின் கடைசிப் புகலிடம் செக்யூரிட்டி வேலைதான். நள்ளிரவு 2.30. விருகம்பாக்கத்துக்கு அருகில் ஒரு தனியார் பள்ளி. அது இருளில்  தத்தளிக்கிறது. நுழைவாயிலில் தன்னந்தனியாக சேரில் அமர்ந்திருந்தார் ஒரு செக்யூரிட்டி. அவருக்குத் துணையாகிறது இரவு.

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்