இப்படிச் செய்தால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும்!‘‘காவிரி நீருக்குக் கர்நாடகாவை நம்ப வேண்டியதில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டியதில்லை. நீதிமன்றங்களில் கால்கடுக்க நிற்க  வேண்டியதில்லை. தேவை ஒரு கிணறுதான்..! காவிரி ஆறு தமிழ்நாட்டுக்குப் பாய்வது அங்குள்ள பிலிகுண்டுலு என்னும் அணையிலிருந்துதான். இந்த  அணைக்குப் பக்கத்தில், அதாவது தமிழ்நாட்டின் எல்லையில், பெரிய கிணறுகளை ஆழமில்லாமல் அகலமாகத் தோண்டினாலே போதும். பிலிகுண்டுலு  அணையில் உள்ள நீர் இந்தக் கிணறுகளில் ஊற்றாக உருவெடுக்கும். இதை பம்புகள் கொண்டு தமிழ்நாட்டுக்குப் பாய்ச்ச முடியும். காவிரி போராட்டமே  அவசியம் இல்லாமல் போய்விடும்..!’’ இப்படியொரு கருத்து வாட்ஸ் அப்பில் வட்டமடித்து சுழல்கிறது.

‘‘இது சாத்தியமே இல்லை...’’ என்று மறுக்கிறார் தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரான அ.வீரப்பன். ‘‘நம்ம  வீட்டு நிலத்தடி நீரை மொட்டை மாடிக்குக் கொண்டு வரவே 1/2 எச்.பி, 1 எச்.பி சக்தியுள்ள மோட்டார்கள் அவசியம். ஒரு தொட்டியை நிரப்பவே  இவ்வளவு சக்தி வாய்ந்த மோட்டார்கள் தேவை என்னும்போது தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய 180 டி.எம்.சி அல்லது 200 டி.எம்.சி நீரைப்  பாய்ச்சுவதற்கு எவ்வளவு விசையுள்ள மோட்டார்கள் தேவைப்படும்? அங்கே காவிரி ஆறு ஓடும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின்  நீரையே மோட்டார்கள் கொண்டுதான் பம்ப் செய்கிறார்கள்.

இந்த இரு அணைகளில் இருந்தும் சுமார் 28 டி.எம்.சி நீரை பம்ப் செய்ய 2000 எச்.பி விசையுள்ள 60 மோட்டார்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  அதாவது 1 டி.எம்.சி நீரை பம்ப் செய்வதற்கு கிட்டத்தட்ட 4,285 எச்.பி பவர் உள்ள மோட்டார் தேவைப்படுகிறது. அங்குள்ள ஏரிகள், வயல்களுக்கு இந்த  முறையில்தான் நீரைக் கொண்டு செல்கிறார்கள். ஆக, மோட்டார் செலவு மற்றும்  மோட்டார்களுக்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான செலவைக்  கணக்கிட்டால் இதுபோன்ற கற்பனைகளுக்கு அதிக விலைகொடுக்க நேரிடும்.

இதைவிட கடல் நீரைப் பயன்படுத்தும் நீராக மாற்றுவது சாலச் சிறந்தது...’’ என்று அ.வீரப்பன் முடிக்க, ‘‘கிணறு, பம்ப் போன்ற செயற்கை முறைகளைக்  காட்டிலும் நீரைப் பொறுத்தளவில் இயற்கையான முறையில் அதைப் பெற வழிவகை செய்வதுதான் சரியானது...’’ என்கிறார் சென்னையில் இயங்கும்  வளர்ச்சிக்கான நிறுவனமான எம்.ஐ.டி.எஸ்-இன் பொருளாதாரப் பேராசிரியரான சிவசுப்ரமணியன். ‘‘மேடு பள்ளங்களில் நீரைக் கொண்டு செல்வதற்காக  மோட்டார் பம்புகளைப் பயன்படுத்துவது சரியானதுதான். ஆனால், குறைவான நீருக்குத்தான் இது சரியாக இருக்கும். நீண்டநாட்களுக்குப் பயன்தரும்.  காவிரியைப் பொறுத்தளவில் இது பயன்தராது.

பருவகால மாற்றங்களை காவிரி நீர் விஷயத்தில் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டைவிட கர்நாடகாவில்தான் விவசாய நிலங்கள் இன்றைக்கு  அதிகம். அதனால் நல்ல மழை பெய்கிறதோ இல்லையோ கர்நாடகா விவசாயிகள் ஆற்றில் வரும் நீரை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.  ஆனால், மழை பொய்க்கும் நிலைமைதான் இரண்டு மாநிலங்களுக்கும் அதிகமாக நிகழ்கிறது...’’ என்றவர் தொடர்ந்தார். ‘‘இரண்டு மாநிலங்களிலும் 50  சதவீத மழைதான் பெய்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் ஒரு மாநிலம் மட்டும் ஒரு போகம் விவசாயம் செய்யலாம்.

அடுத்த வருடமும் இதே நிலை நீடிக்கிறது என்றால் இன்னொரு மாநிலம் அதே ஒரு போகம் விவசாயத்தைச் செய்யலாம். இரு மாநிலங்களிலும் நல்ல  மழை பெய்திருக்கிறது; 25 சதவீத வறட்சிதான் நிலவுகிறது என்றால் இரு மாநிலங்களும் ஒரே நேரத்தில் ஒரு போகம் விவசாயம் செய்யலாம்.  ஆனால், மழை இருக்கும் காலத்திலேயும், அது இல்லாத காலத்திலேயும் இரு மாநிலங்களும் இரு போக விவசாயத்துக்காக முயற்சிப்பது காவிரி நீர்ப்  பிரச்சனையைத் தீர்க்க உதவாது. மழை பெய்வதும், பெய்யாததும் இயற்கை சார்ந்த விஷயங்கள்.

அதைத் தீர்ப்பது இயற்கையான முறையில்தான் இருக்கவேண்டும். மழையால் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது நிர்வாகத்தால்  செய்யப்படவேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு இரு மாநிலங்களும் விவசாயிகளின் பிரச்னையை, அது தொடர்பான விஷயங்கள் மூலமாக  சிந்திக்க வேண்டும். இதை அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும்போதுதான் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வு  கிடைக்கும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் சிவசுப்ரமணியன்.

டி.ரஞ்சித்