ஸ்ரீதேவியின் மரணமும் அழகான ஆபத்தும்



கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தியாவுக்கு கறுப்பாக விடிந்தது. அதிகாலை கண்  விழித்ததும் அனைவரும் கேட்டு அதிர்ச்சியடைந்த செய்தி ‘ஸ்ரீதேவி  இறந்துவிட்டார்’ என்பதுதான். டிவி, பத்திரிகைகள் மட்டுமல்ல, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் பரபரப்பாயின. பிரதமர், ஜனாதிபதி  முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோரும் மாய்ந்து மாய்ந்து இரங்கல் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சாதாரண மனிதர் முதல்  செலிபிரிட்டிகள் வரை அனைவரையும் உலுக்கிவிட்டது இந்த தேவதையின் மரணம்.

சிவகாசியில் சினிமா பின்னணி இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர், இந்த தேசமே வியக்கும் மாபெரும் நடிகையாக உயர்ந்து  தனது 53 வயதில் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார். ‘இது எல்லாம் சாகும் வயதா? இன்னும் கொஞ்ச நாள்  இருந்திருக்கலாமே...’ என்ற அங்கலாய்ப்புகளுக்கு  மத்தியில் ஸ்ரீதேவி ஏன் இறந்தார் என்ற விவாதம் எழுந்தது. தொடர்ச்சியாக அவர் செய்துகொண்ட அறுவைசிகிச்சைகள், பசிக்காமல் இருப்பதற்காக  எடுத்துக்கொண்ட மாத்திரைகள் போன்றவைதான் அவரது உயிரைப் பறித்தன என்று சிலர் சொல்ல, பரபரவென பற்றிக்கொண்டது பாலிவுட். 

ஒருவர் இறந்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி அவதூறு செய்வது அபத்தம் என்றது ஒரு தரப்பு. அது உண்மையாக இருக்கக்கூடும். அதில் மருத்துவக் காரணங்கள் உள்ளன என்றது மறுதரப்பு. மறுநாள் ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. ‘நீரில் மூழ்கியதால் மூச்சுத் திணறி மரணம்  சம்பவித்துள்ளது. வயிற்றில்  ஆல்கஹால் இருக்கிறது...’ உடனே அவர் நீரில் அறியாமல் மூழ்கினாரா அல்லது மூழ்கடிக்கப்பட்டாரா... என அதே சர்ச்சை கிளை  பரப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் போனி கபூர் விசாரிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அழகு சிகிச்சைகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவையா?  சுற்றிவளைக்காமல் பதில் சொல்வது என்றால், யெஸ். ஆபத்துதான். இன்று நடிகர், நடிகைகள், மாடல்கள், செலிபிரிட்டிகள் உள்ளிட்டவர்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும், சருமம் பளிச்சென்று வெள்ளையாக  இருக்க வேண்டும், இளமை மாறாமல் இருக்க வேண்டும், கட்டுக்கோப்பான உடல்வாகு வேண்டும் என்பதற்காக பலவகையான  காஸ்மெடிக் சிகிச்சைகளைச்  செய்துகொள்கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் உறுப்புகளை மறுசீரமைப்பு செய்யும் அறுவை சிகிச்சை;

வடிவான அசத்தலான மார்புகளைப் பெறு வதற்கான சிலிக்கான் மார்புகள் பொருத்தும் சிகிச்சை; வெள்ளையான தோலைப் பெறுவதற்காக தோலின் மேற்புறத்தை  (டெர்மிஸ்) உரித்தெடுக்கும் கெமிக்கல் பீலிங் சிகிச்சை; தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்‌ஷன் சிகிச்சை; முகத்தில் உள்ள  சுருக்கங்களை அகற்றுவதற்காகவும் அக்குள் வியர்வையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் போடப்படும் பாட்டக்ஸ் சிகிச்சை; உடல் பருமன், தொப்பையைக்   கட்டுப்படுத்துவதற்காக பசியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது... எனப் பலவகையான சிகிச்சைகளை இன்றைய பிரபலங்கள்   மேற்கொள்கிறார்கள். 

இவற்றினால் பக்கவிளைவுகள் ஏற்படும். சில சிகிச்சைகள் நம் உயிருக்கே உலைவைக்கும். மருத்துவக் காரணங்கள் இல்லாமல் வெறும் அழகுக்காக இப்படியான  சிகிச்சைகளை செய்துகொள்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. முதலில் அது ஒருவரின் உடல் மீது காரணமற்று செய்யப்படும் மாற்றம் என்பதால் உடல்   இயல்பாகவே ஒத்துழைக்காது. அடுத்து அழகுக்காக இப்படியான சிகிச்சைகள் செய்துகொள்ளும் பலர் நாளாவட்டத்தில் இதற்கு அடிமையாகவே மாறிவிட நேர்கிறது. மைக்கேல் ஜாக்சன், ஸ்ரீதேவி முதல் நிறைய செலிபிரிட்டிகள் இதற்கு உதாரணங்களாக இருக்கிறார்கள். ஒரே ஒருமுறைதானே என்று நினைத்துதான் இதைச்  செய்வார்கள்.

சில சமயங்களில் சிகிச்சைக்குப் பின் திருப்தி இல்லாத நிலை ஏற்படும். அப்படியே திருப்தியாக இருந்தாலும் வேறு சில உறுப்புகளைத் திருத்தி அமைக்க  வேண்டும் என்று தோன்றும். ஆக, இது தீராத கவலையாகத் தொடரக் கூடியது. ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய காலம்தொட்டே அவரது மூக்கு  குறித்த விமர்சனம் பரவலாக எழுந்தது. அவரும் தன் நாசியின் அமைப்பு சரியாக இல்லை என நினைத்தார். மூக்கை சீரமைக்கும் அறுவைசிகிச்சையை  செய்துகொண்டார். தொடர்ந்து தனது உதடுகளையும் மார்பகங்களையும் கூட அறுவைசிகிச்சை மூலம்  திருத்தியமைத்தார் என்கிறார்கள். பின்னர் முகத்திலுள்ள   சுருக்கங்களை நீக்க பாட்டக்ஸ் (Botox) எனும் சிகிச்சையும் அடிக்கடி மேற்கொண்டார் என்கிறார்கள்.

நெற்றி, தாடை, இரண்டு கன்னங்கள் ஆகியவற்றில்  மெல்லிய ஊசி செலுத்தி சுருக்கங்களை நீக்கும் சிகிச்சைதான் பாட்டக்ஸ். அதுபோலவே,  எடையை  கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உடல்வாகை சிக்கென்று  வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பசியே ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொண்டு  உடல்  பருமனாவதைத் தவிர்த்தார் என்றும், இப்படியான அழகு சிகிச்சைகளுக்காக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அடிக்கடி  சென்றுவந்தார்  என்றும் சொல்கிறார்கள்.

ஒருவர் இப்படி மருத்துவக் காரணங்கள் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்போது ஹெமடோமா எனப்படும் ரத்தநாளங்களுக்கு வெளியே ரத்தம் தேங்கும் பிரச்னை, நரம்பு சேதாரம், நுரையீரல் பாதிப்புகள், அடிக்கடி அனஸ்தீசியா எடுத்துக்கொள்வதால் ஏற்படும் மாரடைப்பு,  பக்கவாதம், உடல் நடுக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.  பாட்டக்ஸ் சிகிச்சையால் தீவிரமான  பக்கவிளைவுகள் ஏதும் நேரடியாக ஏற்படாது. தலைவலி, எரிச்சலான உணர்வு, சிகிச்சை செய்த இடத்தில் வலி, வீக்கம் போன்ற சிறிய பிரச்னைகளே  தொடக்கத்தில் இருக்கும்.

ஆனால், ஏற்கெனவே பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சை செய்தவர்கள் இதில் ஈடுபடும்போது இரண்டும் சேர்ந்து ஏற்படுத்தும் வலியும் மனச்சோர்வும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளும் மோசமானவை. பிற்காலங்களில் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு என  எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், ஒபீசிட்டி பிரச்னையினால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் வர  வாய்ப்பு உள்ளவர்களுக்காகவே டயட் பில்ஸ் எனப்படும் பசியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் தோன்றின. இந்திய உணவுமுறையில் போதுமான உடல் உழைப்பு  இல்லாவிடில் ஐம்பது வயதுக்கு மேல் உடல் பருமன் ஏற்படுவதையும் தொப்பை போடுவதையும் தவிர்க்க முடியாது.

இதற்கு பயந்தே பல நடிகர், நடிகைகள் நாற்பது வயதைக் கடந்த பிறகு இந்த மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். டயட் பில்ஸில் நிறைய வகைகள் உள்ளன.  பெண்டெர்மைன், டைதைல்ப்ரோபியோன், பெண்டிமெட்ரஜைன் போன்ற மாத்திரைகள்; நார்ச்சத்தை மட்டுமே உடலில் சேர்க்கும் மாத்திரைகள்; ஹைட்ரோக்சைல்  மாத்திரைகள் போன்றவை இவற்றில் சில. இந்த மாத்திரைகள் அளவுக்கு அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்றவை. அவர்களும் சுமார் 12  வாரங்கள் வரை மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த டயட் பில்ஸ் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு  அல்லது அதீத இதயத் துடிப்பு, மாரடைப்பு போன்ற தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் மீறி தொடர்ந்து சில ஆண்டுகள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது விரைவிலேயே முதுமையாதல், உடல் சோர்வு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு போன்ற  பிரச்னைகள் தோன்றும். நடிகர், நடிகைகளுக்கு  தங்கள் தோற்றம் சார்ந்து இருக்கும் பதற்றம் இயல்பானது. குறிப்பாக நடிகைகளுக்கு.

வயதானாலும் இளமையாகவே இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் மார்க்கெட் போய்விடும்... என்ற பதற்றத்தில் இப்படியான சிகிச்சைகளில் இறங்குகிறார்கள்.  அழகாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் நம் அழகை மதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு என்ன விலை கொடுக்கிறோம்  என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ஸ்ரீதேவி என்ற அற்புதமான நடிகையின், பொறுப்பான குடும்பத் தலைவியின் திடீர் மரணம் கலைத்துறைக்கும் அவரது  குடும்பத்துக்கும் நிஜமாகவே பேரிழப்பு. ஆனால், அவரது மரணம் உருவாக்கியுள்ள சர்ச்சையில் நமக்கொரு செய்தியுள்ளது. அது, இயற்கையான தோற்றமே  எப்போதும் அழகு என்பது!

- இளங்கோ கிருஷ்ணன்