காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 47

எம்-19 கொரில்லாக்களின் தாக்குதலால் சுப்ரீம் கோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணங்களாக விழுந்தது, கொலம்பியாவை மட்டுமின்றி உலகத்தையே  அச்சத்துக்கு உள்ளாக்கியது. இந்தத் தாக்குதலில் பாப்லோ எஸ்கோபாரின் கை இருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் அரசுத் தரப்பில் இருந்தன. பாப்லோவின் மெதிலின் கார்டெல்லில் இருந்த முக்கியஸ்தர்களேகூட இந்த தாக்குதலை ரசிக்கவில்லை. எஸ்கோபாரோ வழக்கம்போல தனக்கும், இதற்கும்  சம்பந்தமில்லை என்றே மழுப்பி வந்தார். ஆனால் - தாக்குதலின் போது நீதிமன்றக் கட்டடத்துக்குள் எரிக்கப்பட்ட ஆவணங்கள் பெரும்பாலும் பாப்லோ  சம்பந்தப்பட்டவைதான்.

மற்ற கார்டெல் உரிமையாளர்களும் பாப்லோ குறித்து தங்களது அவநம்பிக்கையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ‘ஏதோ தொழில் செய்தோம், அதன் காரணமாக  அரசுடன் மோதல் என்றுதான் இதுவரை இருந்தோம். இந்த பாப்லோவோ நம்மை பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்துகிறார்” என்று குமுறினார்கள். பாப்லோவுக்கும் அவரது சகாக்களுக்கும் ஏற்பட்டிருந்த இந்த மன விலகலைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நினைத்தது. ஆனால் - இயற்கை, பாப்லோவை  தற்காலிகமாகக் காப்பாற்றியது; கொலம்பியாவை மிகவும் கடுமையாகத் தண்டித்தது.

சுப்ரீம் கோர்ட் சம்பவம் நடந்து மிகச்சரியாக ஒரு வாரம் ஆகியிருந்தது. கொலம்பியத் தலைநகர் பொகோடாவில் இருந்து சுமார் 130 கி.மீ.  தூரத்தில் ஹெர்வியோ  என்கிற மலைமுகடு புகைந்து கொண்டே இருந்தது. நாட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பொறுக்க மாட்டாமலோ என்னவோ அது திடீரென வெடித்துக் குமுற  ஆரம்பித்து விட்டது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் படையெடுத்த மக்மா குழம்புடன் கூடிய நெருப்பாறு, அந்தப் பகுதியையே சாம்பலாக்கி விட்டது. ஆர்மெரோ  என்கிற நகரம் கருகி, சுமார் 22,000 பேர் உயிரிழந்தார்கள். கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளிலேயே இரண்டாவது பெரிய சம்பவம் இது  என்கிறார்கள்.

பிரச்னை என்னவென்றால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல காலமாகவே இந்த எரிமலை வெடிப்பு குறித்து அரசாங்கத்துக்கு அலாரம் அடித்துக்  கொண்டிருந்திருக்கிறார்கள். அரசாங்கமோ அமெரிக்காவை ‘கூல்’ செய்யும் விதமாக கார்டெல்களை வேட்டையாடி வந்ததில், மற்ற பணிகளை ஒழுங்காகச்  செய்யவில்லை. குறிப்பாக எம்-19 கொரில்லாக்களை சமாளிப்பதில் மும்முரமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டவுடனேயே, மீட்புப் பணிகளுக்கு உடனே  தயாராக முடியவில்லை. கிட்டத்தட்ட நம்மூர் செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது அரசாங்கம் உடனே செயல்பட முடியாமல் இருந்த அதே  சூழல்தான்.

ஆர்மெரோ நகரத்தின் மேயர், இந்த எரிமலை பிரச்னையை பலமுறை அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஒருமுறை எங்கள் நகரத்தில்  வைக்கப்பட்டிருக்கும் ‘டைம் பாம்’ என்றுகூட அந்த எரிமலையைக் குறிப்பிட்டிருக்கிறார். அரசோ, ‘வர்றப்போ பார்த்துக்கலாம்’ என்று அசட்டையாக  இருந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தாக்குதல் காரணமாக எம்-19 கொரில்லாக்கள் மீதும், அதற்கு காரணமான எஸ்கோபார் மீதும் கொலை வெறியில் இருந்த மக்கள்,  தங்கள் கோபத்தை அப்படியே அரசாங்கத்தின் மீது திருப்பினார்கள்.

போதுமான முன்னெச்சரிக்கை கிடைத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த துப்பில்லாமல் பலி கொடுத்த அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள். ‘எரிமலை எங்களைக் கொல்லவில்லை; அரசாங்கம்தான் கொன்றது’ என்று கோஷமிட்டவாறே அரசு அலுவலகங்களை முற்றுகையிடத் தொடங்கினார்கள்.  சாலைகள் எங்கும் பேரணிகள் நடத்தினார்கள். ஆங்காங்கே கண்டனப் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலை கார்டெல்கள் பயன்படுத்திக்  கொண்டன. பாப்லோ எஸ்கோபார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக பல கோடியை வாரி வழங்கினார்.

மற்ற கார்டெல்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்-19 கொரில்லாக்கள் மூலமாக கார்டெல்களின் உதவி நேரடியாக மக்களைச் சென்று  சேர்ந்தது. மாறாக, அரசாங்கமோ அப்போதுதான் யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கணக்கு எடுத்துக் கொண்டிருந்தது.‘உங்களை அரசாங்கம் காப்பாற்றாது;  பாப்லோதான் காப்பாற்றுவார்’ என்று கூறிக்கொண்டேதான் கார்டெல்காரர்கள் உதவினார்கள். அந்த அரிபரியான அவசரத்திலும்கூட நிவாரணப் பொருட்களில்  எஸ்கோபாரின் ஸ்டிக்கர் மறக்காமல் ஒட்டப்பட்டது! கொலம்பியா அதுவரை சந்தித்திராத மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்.

உடனடியாக இயற்கையின் கோரத்தாண்டவம். எனவே, கொஞ்ச நாட்களுக்கு கார்டெல் வேட்டையை பல்லைக் கடித்துக்கொண்டு நிறுத்தி வைத்தது.  இதற்கிடையே, இந்தச் சூழலைப்பயன்படுத்தி அரசாங்கத்தோடு அணுசரணையாகப் போவதற்கு மீண்டும் முயற்சிகளை முன்னெடுத்தார் பாப்லோ எஸ்கோபார். ஆனால், அவர் நம்பிக்கை கொள்ளும் விதமாக எதிர்த்தரப்பில் சிக்னல் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு கார்லோஸ் லேதருக்கு ஏற்பட்ட கதி. பாப்லோவைப்  போலவே கார்லோஸுக்கும் கொலம்பியாவின் அதிபர் ஆகும் கனவு ஒரு காலத்தில் இருந்தது. தேசிய லத்தீன் கட்சி என்று ஒரு கட்சியைக்கூட ஆரம்பித்து  வைத்திருந்தார்.

ஹிட்லரின் தீவிர ரசிகரான அவருக்கு பாப்லோவுக்கு கிடைத்தது மாதிரி பரவலான புகழ் கிடைக்கவில்லை. அரசியல்தான் அவரது விருப்பம் என்றாலும் பணம்  பார்த்தது முழுக்க கார்டெல்லில்தான். கொலம்பியாவில் இருக்கும்போது பெரும்பாலும் அவரை பாப்லோவுடனேயே பார்க்கலாம். பண்ணை வீடுகளில்  ஒன்றாகத்தான் ஓய்வெடுப்பார்கள். கால்பந்து மைதானங்களிலும் அருகருகே அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள். அடிக்கடி இணைந்து உல்லாசப் பயணங்களுக்குச்  செல்வார்கள். தொழில் உறவைத் தாண்டி பாப்லோவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக உருவெடுத்தார் கார்லோஸ்.

கார்லோஸுக்கும் பாப்லோவுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமுண்டு. காரியங்களைச் சாதித்துக்கொள்ள தன் மீதான பயத்தைத்தான் பாப்லோ ஆயுதமாகப்  பயன்படுத்துவார். கார்லோஸோ எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு சாதிப்பார். பணத்தைக் கண்டால் பிணம்கூட பல்லை இளிக்கும் என்கிற சித்தாந்தத்தில்  நம்பிக்கை கொண்டவர் கார்லோஸ். தம்மை காப்பாற்றிக் கொள்ள அரசாங்கத்தோடு யுத்தம் செய்ய வேண்டும் என்பது பாப்லோவின் திட்டமாக இருக்க, தம்மிடம்  இருக்கும் பணத்தை வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கார்லோஸ் நினைத்தார்.

அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க கொலம்பியா போதை முதலாளிகளை வேட்டையாடத் தொடங்கியபோது பாப்லோவைப் போல எதிர்த்து நிற்காமல்,  காடுகளுக்குள் ஓடிப் பதுங்கினார் கார்லோஸ். அவருடைய சகாக்கள் பலரும் அவருடைய முதுகில் குத்திவிட்டு கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக்கொண்டு  எஸ்கேப் ஆனார்கள். பாப்லோதான் ஹெலிகாப்டரை அனுப்பி கார்லோஸை மீட்டார். மறுபடியும் நாம் பழைய மாதிரி தொழில் செய்வோம் என்று நம்பிக்கை  ஊட்டினார். சில காலம் பாப்லோவின் ஊழியராகப் பணியாற்றினார்.

பாப்லோ கொடுத்த பணத்தைக் கொண்டு பெரிய பண்ணை அமைத்தார். போதை வம்பு தும்புகளுக்குப் போகாமல் நேர்மையாக வாழ நினைத்தார். ஊழ்வினை  அவரைச் சுட்டது. பாப்லோவைப் பிடிக்க முடியாத கடுப்பில் இருந்த காவல்துறை அவரைக் கைது செய்தது. ஒப்பந்தப்படி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அவர்  மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 135 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்கச் சிறையொன்றில் அடைக்கப்பட்டார். ஒருவேளை, தான் பிடிபட்டாலும் கார்லோஸுக்கு நிகழ்ந்ததுதான் தனக்கும் நடக்கும் என்று கருதினார் பாப்லோ. எனவேதான், காவல்துறையிடம் மட்டும்  மாட்டிவிடக் கூடாது;

தலைமறைவாக இருந்தபடியே தொழிலையும் நடத்தவேண்டும், அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். மக்கள்தான் பாப்லோவைக் காத்தார்கள் என்று சொல்லலாம். மக்களுக்கு ஒரு தேவை எனும்போது அவர்கள் கேட்காமலேயே பாப்லோவின் ஆட்கள் அள்ளி  அள்ளிக் கொடுத்தார்கள். எனவே, பாப்லோவுக்கு விசுவாசமாக இருந்த அவர்கள் எந்தவொரு நிலையிலும் அவரை போலீசுக்கு காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் போலீசிலும், இராணுவத்திலும்கூட பாப்லோவின் விசுவாசிகள் ஏராளமாக இருந்தார்கள்.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்