சிவாஜி ரசிகை



- ப்ரியா

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கு பலரும் அடிமை. அவர்களுள் செங்கல்பட்டைச் சேர்ந்த கிரிஜா தனித்துவமானவர். சிவாஜி எந்தெந்த படங்களில் என்னென்ன  கேரக்டர்களில் நடித்தார்... அப்படத்தின் இயக்குநர் யார்... ஜோடி யார் என்பதையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார். மட்டுமல்ல, தன் 15 வயதிலிருந்து  சிவாஜியின் புகைப்படங்கள், சினிமா சிடிகள், பாடல் கேசட்டுகள், அவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட கீ செயின்ஸ், பர்ஸ்... என அனைத்தையும் சேகரித்து  வருகிறார். ‘‘அப்ப எனக்கு 11 வயசு. செங்கல்பட்டு சுகர் மில்லுல அப்பா வேலை பார்த்து வந்தார்.

அப்ப சினிமா, ரேடியோ தவிர வேற பொழுதுபோக்கு கிடையாது. ஒரு சினிமா பார்க்கவேதிட்டம் போடணும். சிவாஜி நடிச்ச ‘சிவந்த மண்’ ரிலீசாகி இருந்தது.  குடும்பத்தோட படம் பார்க்க சென்னைக்கு போறதா திட்டம். எங்க நேரம், சென்னைக்கு பஸ்ஸோ, ரயிலோ கிடைக்கலை. அண்ணனோ அந்தப் படத்தை பார்த்தே  தீரணும்னு பிடிவாதமா இருந்தார். அதனால, வேலை பார்த்த நிறுவனத்துலேந்து அப்பா ஜீப்பை வரவைச்சார். சென்னைக்கு கிளம்பியாச்சு. சினிமா பார்க்கப்  போறோம்னு சந்தோஷமா வந்தோம். ஆனா, தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலை. ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டியிருந்தாங்க.

எங்களை ஏமாத்த அப்பாக்கு விருப்பமில்லை. தியேட்டர் மேனேஜர் கிட்ட பேசி பக்கத்து பக்கத்துல சேர் போட வைச்சார். இப்படித்தான் ‘சிவந்த மண்’  பார்த்தோம். இதுதான் நான் பார்த்த முதல் சிவாஜி படம்!’’என்று சிரிக்கும் கிரிஜா, இதன் பிறகு அவரது தீவிர ரசிகையாக மாறியிருக்கிறார்.‘‘அவரோட நடிப்பு,  நொடிக்கு நொடி மாறுகிற முகபாவனை, ஸ்டைலான நடை... இப்படி நடிகர் திலகத்தோட ஒவ்வொரு விஷயமும் என்னைக் கவர்ந்தது. பத்திரிகைல வர்ற  அவரோட ஒவ்வொரு புகைப்படத்தையும் கட் பண்ணி சேகரிக்க ஆரம்பிச்சேன்.

வீட்ல என் பீரோ கதவுல அவர் போட்டோவை ஒட்டி அழகு பார்ப்பேன். நோட் புக்குல அவர் போட்டோஸை ஒட்டி ஆல்பமா தயாரிச்சு அவருக்கே கூட
அனுப்பியிருக்கேன். அவருக்கு கிடைச்சதானு கூட தெரியாது. ஆனாலும் சின்சியரா சில காலம் அப்படி செய்துட்டு இருந்தேன். அப்புறம்தான் ஆல்பங்களை  அவருக்கு அனுப்பறதை விட நாமே சேகரிச்சு வைச்சுக்கலாமேனு தோணிச்சு...’’ என்ற கிரிஜா இதன்பிறகுதான் சிவாஜி சார்ந்த அனைத்தையும் கலெக்ட்  செய்யத் தொடங்கியிருக்கிறார். ‘‘டெய்லி பேப்பர், வார / மாத இதழ்கள்னு எதையும் விட மாட்டேன். தினமும் கடைக்குப் போவேன்.

புத்தகங்களைப் பார்ப்பேன். அதுல சிவாஜி பத்தின செய்தியோ புகைப்படமோ இருந்தா உடனே காசு கொடுத்து வாங்குவேன். ஒரு வரி செய்தினா கூட  விடமாட்டேன். ஒரு அட்டை டப்பா முழுக்க அவர் போட்டோஸ், இன்னொரு டப்பாவுல அவரைப் பற்றின செய்திகள். ஒருமுறை ‘பொம்மை’ மாத இதழ்ல  வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு இருந்தார். அதுல என் கேள்விக்கும் அவர் ஆன்சர் பண்ணியிருந்தார். அன்னிக்கு நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு  அளவேயில்ல...’’ சிலிர்க்கும் கிரிஜாவிடம் 300க்கும் மேற்பட்ட சிவாஜி படங்களின் பாடல் மற்றும் வசன கேசட்டுகள் இருக்கின்றன.

‘‘செய்திகள், போட்டோஸ் மட்டும் சேகரிச்சா போதுமா..? அவரைப் பத்தின எல்லாம்தானே நம்மகிட்ட இருக்கணும்னு ஒருநாள் தோணுச்சு. அதுக்குப் பிறகு  கேசட்ஸ் சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்ப எல்லாம் சிடி கிடையாது. கேசட்ஸை தேடித் தேடி கலெக்ட் செஞ்சேன். ‘சிவந்த மண்’ நான் பார்த்த முதல் சிவாஜி  படம்னு சொன்னேன் இல்லையா? இந்தப் படம் வெளியானது 1969ல. ஆனா, அவர் 1952 முதலே நடிச்சுட்டு இருக்கார். அதனால ஆரம்ப காலத்துல அவர் நடிச்ச  திரைப்படங்களை எல்லாம் வரிசைப்படுத்தி அதையெல்லாம் ஒவ்வொண்ணா பார்க்க ஆரம்பிச்சேன்.

எல்லா படங்களோட கேசட்ஸும் கடைல கிடைச்சது. சிலதுக்கு வசனங்களும். எல்லாத்தையும் அள்ளினேன். ரேடியோவுல அவரோட பட ஒலிச்சித்திரம் எப்ப  வெளியானாலும் தவறாம கேட்பேன். தொழில்நுட்ப வளர்ச்சில அடுத்ததா விசிஆர் வந்தது. போதாதா? சிவாஜி பட வீடியோ கேசட்டுகளை தேடித் தேடி  வாங்கினேன். இதனோட அடுத்த கட்டம் சிடி. அதையும் விட்டு வைக்கலை. கலெக்ட் பண்ணினேன். ஓர் அலமாரியே இதுக்காக ஒதுக்கியிருக்கேன்னா  பாருங்க...’’ என்றபடி அனைத்தையும் ஆர்வத்துடன் காண்பிக்கத் தொடங்கினார். ‘அவர் காலமானப்ப நான் திருப்பதில இருந்தேன்.

அதனால மறுநாள்தான் எனக்கு செய்தியே தெரியும். இடிஞ்சுபோயிட்டேன். அவர் உடலை ரசிகர்கள் பார்வைக்காக வைச்சிருந்தாங்க. வெள்ளித்திரைல கம்பீரமா  கர்ஜித்தவர் கண்ணாடிப் பெட்டில அமைதியா படுத்திருந்ததை என்னால பார்க்க முடியலை. இந்த அதிர்ச்சிலேந்து வெளில வர பலகாலமாச்சு...’’  சொல்லும்போதே கிரிஜாவின் குரல் தழுதழுக்கிறது. சில நிமிடங்களுக்குப் பின் தன்னைத் தேற்றிக்கொண்டு புன்னகைத்தார். ‘‘வெள்ளிக்கிழமை அவர் படம்  வெளியாகறப்ப எல்லாம் பார்த்துடுவேன். சின்ன வயசுல துணைக்கு யாராவது வருவாங்க. விவரம் தெரிஞ்ச பிறகு நானே தனியா தியேட்டருக்கு போக  ஆரம்பிச்சேன்.

வெள்ளிக்கிழமை மட்டுமில்ல... மறுநாளும் போவேன். சனிக்கிழமை அவர் ரசிகர்கள் அலைமோதுவாங்க. சிவாஜி பத்தி மணிக்கணக்குல பேசுவோம். ராஜசேகர்னு  ஒரு ரசிகர். அவர் இப்ப மஸ்கட்டுல இருக்கார். சென்னைக்கு வர்றப்ப எல்லாம் சிவாஜி படம் பொறிக்கப்பட்ட பர்ஸ், கீ செயின்ஸை வாங்கிட்டு வந்து தருவார்...’’  என்று சொல்லும் கிரிஜா, அகில இந்திய சிவாஜி மன்றத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கிறார். ‘‘சிவாஜி பத்தின ஒவ்வொண்ணுமே பொக்கிஷம்தான். எனக்குப்  பிறகு இதை எல்லாம் அவரோட மணிமண்டபத்துல கண்காட்சியா வைக்கணும்னு ஆசைப்படறேன்.

மூணு மாசத்துக்கு ஒருமுறை எல்லாத்தையும் தூசு தட்டி திரும்பவும் அடுக்கி வைக்கறேன். கட் பண்ணி பேஸ்ட் செய்த ஆல்பங்களை பைண்ட் பண்ணி நம்பர்  போட்டு வரிசைப்படுத்தி இருக்கேன். அவரோட காவியப் படங்களுக்கு மட்டும் தனி ஆல்பம். அவர் காலமானப்ப நிகழ்ந்த நிகழ்வுகள், செய்திகள், புகைப்படங்களுக்கு தனி ஆல்பம்...’’ என்று சொல்லும் கிரிஜா, சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றையும், அவரைப் பற்றிய செய்திகளின் தொகுப்பையும் நூலாக  வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார்.

‘‘நான் அந்தக் கால மனுஷி. எனக்கு திருமணத்துல நம்பிக்கையோ ஈடுபாடோ இல்ல. சிவாஜி படங்களை எத்தனை முறை பார்த்திருக்கேன்னு எனக்கே  தெரியாது! அவர் மேல அந்தளவுக்கு ஈடுபாடு. அவரைப் பத்தின புத்தகம் எழுதணும்னுதான் கம்ப்யூட்டரை இயக்கவே கத்துகிட்டேன். புத்தகத்துக்கான செய்திகளை  நானேதான் டைப் பண்றேன். இன்னும் 40 சதவிகிதம்தான் பாக்கியிருக்கு. நடிகர் திலகம் பத்தி இந்த தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும்  தெரிஞ்சுக்கணும்னு கவனமா இந்த நூலை எழுதிட்டு வர்றேன்...’’ என்கிறார் கிரிஜா.                    

படங்கள்: வீரா