ரஜினி கமல அரசியலுக்கு வருவதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?



இந்தி நடிகர் சுனில் ஷெட்டியுடன் Exclusive சந்திப்பு

சினிமாவும் அரசியலுமாக தமிழக சூழல் பரப்பரப்பாக இருக்கும் வேளையில் பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் சுனில் ஷெட்டி சென்னையில் இறங்கியிருந்தார்.

எப்படி இருக்கீங்க? ‘12பி’க்கு அப்பறம் தமிழ்நாட்டை மறந்துட்டீங்களே?
அதெப்படி மறக்கமுடியும்? பாசமான மக்கள், சென்டிமென்டான இடம். சொந்த விஷயம் காரணமா அடிக்கடி வந்து போவேன். முக்கியமா டேஸ்ட்டான,  ஆரோக்கியமான சாப்பாடு! உங்க மகன் அஹானும் அப்பா வழியையே கடைப்பிடிக்கிறார் போலயே... கூடிய சீக்கிரம் அவர் முதல் படம் ரிலீஸ் ஆகப் போகுது.  ஒரு அப்பாவா ரொம்ப சந்தோஷம். நிறைய டிப்ஸ் கொடுப்பேன். ஆனா, நோ அட்வைஸ். தயாரிப்பாளர் பணம் எவ்வளவு முக்கியம்... அதைப் புரிஞ்சு நடந்துக்கனு  சொல்லியிருக்கேன். 

ஆதியா, அஹான் இருவரையும் எப்படிப் பார்க்கறீங்க?
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ என்னைப் பொறுத்தவரை சமம்தான். அவங்க அவங்களுக்கு தனித்தனியா ஆசைகள், கனவுகள் இருக்கும். அதை நாம  தடுக்கவே கூடாது. ஒரு அப்பாவா என்னால முடிஞ்ச நேரத்தையும், தக்க வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன்.

திருமணமானதும் ஏன் ஹீரோயின்ஸ் அக்கா, அம்மா, அண்ணி வேடங்கள்ல மட்டும் நடிக்கறாங்க?
நம்ம கலாசாரம் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கோ அதைத்தான் நாம பின்பற்றி நடக்கறோம். அதாவது திருமணமான பெண்ணை மதித்து நடக்கணும்கிற  போக்கு. சினிமா மட்டுமில்ல... எல்லா வேலைலயும் திருமணத்துக்கு முன் / பின்’னு மாற்றம் இருக்கும். சமூகக் கட்டமைப்பு அப்படி. எதிர்காலத்துல இது  மாறலாம்!

‘A.B.C. Movie’ பத்தி சொல்லுங்களேன்..
ராம்குமார் ஷெட்ஜ் இயக்கம். இது முழுக்க முழுக்க குழந்தைகள் சார்ந்த சமூகப் பிரச்னை பேசற படம். நான் கெஸ்ட் ரோல்தான். ஆனா, முக்கியமான ரோல்.  மராத்தி படம்.

அக்‌ஷய் குமார் மாதிரி ஒரு ஹீரோ ‘டாய்லெட்’, ‘பேட்மேன்’ போன்ற படங்கள்ல நடிக்கிறதை ஒரு ஹீரோவா எப்படிப் பார்க்கறீங்க?
ஆரோக்கியமான விஷயம். அக்‌ஷய் மாதிரி எல்லா ஹீரோக்களும் இப்படி சமூகம் சார்ந்த படங்கள் நிறைய பண்ணணும். டாக்குமென்டரி மாதிரி சமூகப்  பிரச்னைகளை சொன்னா மக்களுக்கு போய் சேராது. கொஞ்சம் கமர்ஷியலா ஒரு பெரிய ஹீரோ சொன்னா நிச்சயம் வரவேற்கப்படும். எல்லா மொழிகள்லயும்  மாஸ் ஹீரோக்கள் இப்படியான படங்கள்ல நடிக்கணும்.

தற்சமயம் பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்புகள் இல்லையே... நிறைய பிரச்னைகள், கொலைகள் நடப்பதை எப்படிப் பார்க்கறீங்க?
எல்லா காலத்துலயும் இதே மாதிரியான பிரச்னைகள் இருந்திருக்கு. இப்ப மீடியாக்கள் அதிகமா இருக்கறதாலதான் குறைந்தபட்சம் இதெல்லாம் வெளிய வருது.  மக்கள் முன்னாடி பேசப்படுது. நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கற சமூகம் உருவாகும்.

சோஷியல் மீடியாவை ஆரோக்கியமா பார்க்கறீங்களா?
நிச்சயமா. எல்லாருக்கும் இடையேயான தூரம் குறைஞ்சிருக்கு. அரசியலோ, சினிமாவோ, மக்கள் நேரடியா கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. தனிமனித சுதந்திரம்  அதிகரிச்சிருக்கு. அதேநேரம் சமூக வலைத்தளத்தை தவறா பயன்படுத்தறதை ஆதரிக்க மாட்டேன்.

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?
நல்ல விஷயம்தானே? சினிமா மூலமா மக்களுடைய தேவை என்னனு ஓரளவுக்கு நடிகர்களுக்கு தெரியும். இப்ப என் இரு தமிழ் நடிகர்கள் அரசியல்ல  குதிச்சிருக்காங்க. சென்னைக்குள்ள கால் வைச்சதும் பெரிய பெரிய அரசியல்வாதிகளுக்கு இணையா அவங்களுக்கு கட்-அவுட் பார்க்கும்போது சந்தோஷமா  இருக்கு. இருவருக்குமே அரசியலுக்கு வர்ற தகுதி இருக்கு!

ரஜினி, கமல்... யார் உங்க சாய்ஸ்?
ரெண்டு பேருமே நடிகர்களாகவும், மனிதர்களாகவும் ரொம்ப நல்லவர்கள். யார் மக்களுக்கான சிறந்த செயல்கள், கொள்கைகளைக் கொண்டு வர்றாங்களோ  அவங்கதான் என் சாய்ஸ்!

நீங்க ஏன் அரசியலை தேர்ந்தெடுக்கலை?
எனக்கு சினிமா, என் தொழில், அதைத் தாண்டி என் குடும்பம் முக்கியம். சினிமா ஏற்கனவே எனக்கும் என் குடும்பத்துக்குமான நெருக்கத்தை குறைச்சிருக்கு.  என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யறேன். அரசியல் எனக்கு வராது. ஒரு கணவனா, அப்பாவா என் குடும்பத்துக்கு என் நேரத்தைக் கொடுக்கறேன்.  என்னால் முடிஞ்ச அளவுக்கு சில குழந்தைகளைப் படிக்க வைக்கறேன். சில நல்ல விஷயங்கள் செய்றேன். இதெல்லாம் செய்ய அரசியலுக்கு வரணும்னு  இல்லையே!

நாளுக்கு நாள் உங்க வயசு குறைஞ்சிட்டே இருக்கே... என்ன ரகசியம்?
சாப்பாடு முறைகள், உடற்பயிற்சி. காலைல ஒரு பெரிய லன்ச் அளவுக்கு சாப்பிடுங்க. மதியம் அரை உணவு. இரவுல ஜீரோ டயட். இதைத்தான் கடைப்பிடிக்கிறேன். அப்புறம் உங்களால என்ன உடற்பயிற்சி செய்ய முடியுமோ அதை செய்யுங்க!

ஸ்ரீதேவி..?
என்ன சொல்றதுனு தெரியலை. இப்ப வரைக்கும் நம்ப முடியலை. இந்த வயசுல இப்படி நடந்திருக்கக் கூடாது. திறமையான நடிகை. நல்ல தோழி. ஜீரணிக்க  முடியலை. அவங்க ஆத்மா சாந்தி அடையணும். அவங்க குடும்பத்துக்கும், இரண்டு பெண்களுக்கும் இதை ஏத்துக்கக் கூடிய மன தைரியம் வேணும்! 

- ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்ட்சென்ட் பால்