குடும்பமே கன்னிராசில பிறந்தவங்க!



‘‘‘கூட்டுக்குடும்ப பின்னணில ஜாலியா கலகலனு ஒரு படம் வந்து ரொம்ப நாளாச்சே’னு ஃபீல் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ். மொத்தம் 26 ஆர்ட்டிஸ்ட்.  விமலுக்கு ஜோடியா முதன் முறையா வரலட்சுமி. தமிழ் சினிமாவில் ‘இரு கோடுகள்’, ‘அவ்வை சண்முகி’க்குப் பிறகு அழகான ஒரு நவராத்திரி கொலு  ஸாங். முதன் முறையா கிராமத்து இசைல கவனம் செலுத்தியிருக்கும் விஷால் சந்திரசேகர். இப்படி ஏகப்பட்ட ஸ்பெஷல் எங்க‘கன்னிராசி’ல இருக்கு!’’  திருப்தியாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன்.

‘‘பாண்டியராஜன் சாரோட ‘கன்னிராசி’க்கும் எங்க படத்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அவர் இந்தப் படத்தில் விமலுக்கு அப்பாவா நடிச்சிருக்கறது மட்டும்தான்.  இந்தப் பட டைட்டில் ‘கன்னிராசி’னு முடிவானதும், அவர்கிட்டதான் இந்த டைட்டில் இருக்கும்னு நினைச்சோம். ஆனா, தலைப்பு தயாரிப்பாளர்கிட்ட இருந்தது. பாண்டியராஜன் சாரே எங்களுக்காக பேசி, அந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். ‘என்னப்பா, முதல் படத்துலேயே இவ்வளவு ஆர்ட்டிஸ்ட்டா... பின்றப்பா..!’னு  ஒரு நாள் ஸ்பாட்டுல அவர் பாராட்டினது மறக்க முடியாதது!’’ டப்பிங் வேலைகளுக்கிடையே உற்சாகமாகப் பேசுகிறார் முத்துக்குமரன்.

எப்படி வந்திருக்கு படம்?
நல்லா. டப்பிங் போயிட்டிருக்கு. தென்காசி, குற்றாலம் பகுதில மொத்த ஷூட்டிங்கையும் 47 நாட்கள்ல முடிச்சிருக்கோம். இன்னும் ஒரு பாடல்தான் பாக்கி.  என் கதைக்கு விமல் கிடைச்சதே, எதிர்பாராமல் கிடைச்ச சந்தோஷம். இந்தப் படத்தோட நிர்வாகத் தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் சார் மூலம் தயாரிப்பாளர் ஷமீம்  இப்ராஹிம் அறிமுகம் கிடைச்சது. ‘உங்ககிட்ட முழு ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கா’னு கேட்டாங்க. பவுண்டட் ஸ்கிரிப்ட் இருந்தது. அப்புறம்தான் விமல்  கால்ஷீட் தங்ககிட்ட இருக்கறதை சொன்னாங்க. ஹீரோவுக்கும் கதை பிடிச்சிருந்தது. கூட்டுக்குடும்ப ஹீரோ விமல்.

அவர் ஃபேமிலில உள்ள அத்தனை பேருக்குமே கன்னிராசியா இருக்கறதால, எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான் ஆகிட்டிருக்கும். ஆனா, அரேஞ்ஜ்டு மேரேஜ்தான்  பெஸ்ட்னு நினைக்கறவர் விமல். அவர் வீட்டுக்கு எதிர்ல காதலே பிடிக்காத வரலட்சுமி குடி வர்றாங்க. இப்படி ஒரு கலகல சப்ஜெக்ட். தியேட்டர் ஓனரா விமலும், ஸ்கூல் டீச்சரா வரலட்சுமியும் நடிச்சிருக்காங்க. விமலுடன் முதன்முறையா பாண்டியராஜன், யோகிபாபு காம்பினேஷன் இருக்கு. தவிர ஷகீலா, ரோபோ சங்கர்,  காளி வெங்கட், சாம்ஸ்னு நகைச்சுவை நட்சத்திரங்கள் பெடல் எடுத்திருக்காங்க.

விமல், வரலட்சுமி காம்பினேஷன் எப்படி..?
கலர்ஃபுல்லா. விமல் டைரக்டர் ஃப்ரெண்ட்லி ஆர்ட்டிஸ்ட். சீன் நல்லா வரணும்னு நினைப்பார். ‘இன்னொரு டேக் வேணும்னாலும் போகலாம்ணே’னு  மெனக்கெடுவார். வரலட்சுமி மேம், தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாங்க. காலை 6 மணி படப்பிடிப்புக்கு அதிகாலை 4 மணிக்கே எழுந்து  ரெடியாகிடுவாங்க. ஒருநாள் ஆறு மணிக்கே படப்பிடிப்புக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆனா, ஸ்பாட்டுல வேற வேற வேலைகளால அவங்க ஷாட் ஷூட் பண்ண ஈவினிங் ஆறாகிடுச்சு. கோபப்படாம சிரிச்ச முகமா வந்து நடிச்சுக் குடுத்தாங்க.

படத்துல வேற என்ன ஸ்பெஷல்?
க்ளைமேக்ஸ் கல்யாண மண்டத்துல நடக்குது. 26 ஆர்ட்டிஸ்ட்களும் அரங்கம் நிறைஞ்சு இருந்தாங்க. ஸ்கிரீன்லேயும் அந்த பிரமாண்டம் தெரியும். தயாரிப்பாளர்  ஷமீம் சார், நல்ல டெக்னீஷியன் டீம் அமைச்சுக் கொடுத்திருக்கார். துல்கர் சல்மான் நடிச்ச ‘பட்டம் போலே’ கேமராமேன் எஸ்.செல்வகுமார், ஒளிப்பதிவு  பண்ணியிருக்கார். தமிழ்ல ‘கனவு வாரியம்’னு ஏற்கெனவே ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். கொலு பாடலுக்காக ரெண்டாயிரம் பொம்மைகள்  பயன்படுத்தியிருக்கோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலா மாஸ்டர் நடனம் அமைச்சிருக்காங்க. விஷால் சந்திரசேகர் - யுகபாரதியண்ணன் காம்பினேஷன்ல  பாடல்கள் மண் மணக்கும்.

உங்களைப் பத்தி சொல்லுங்க...
சொந்த ஊர் தஞ்சாவூர். அறிவுமதியண்ணன் நிறைய உதவி இயக்குநர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மாதிரி எனக்கு எங்க யுகபாரதியண்ணன். அவரோட  அன்புத் தம்பிகள் லிஸ்ட்டில் எனக்கும் ஓர் இடம் உண்டு.பத்து வருஷங்களுக்கு மேல அவர் அறைல ஒண்ணா தங்கியிருந்தவங்கள்ல நானும் ஒருத்தன்.  இயக்குநர்கள் எஸ்.டி.சபா, ‘ரசிக்கும் சீமானே’ ஆர்.கே.வித்யாதரன், ‘குண்டக்க மண்டக்க’ அசோகன்னு பல இயக்குநர்கள்கிட்ட வேலை செஞ்ச அனுபவத்தோட இந்தக் கதையை ரெடி பண்ணினேன். முழுக் கதையும் அண்ணன் யுகபாரதிக்குத் தெரியும். ரொம்ப ஸ்பெஷலா பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கார். எழுதின  பிறகுதான் மெட்டமைச்சோம். பாடல்களும் சிறப்பா வந்திருக்கு!

- மை.பாரதிராஜா