சினிமாவுல எதுவும் ஒரிஜினல் இல்ல!



உண்மையை உடைக்கிறார் அங்கமாலி டைரீஸ் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி

கடந்த வருடம் 86 புது முகங்களுடன் களம் இறங்கி, சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மலையாளப் படம் ‘அங்கமாலி டைரீஸ்’. கேரளாவில்  பன்றிக்கறிக்குப் புகழ்பெற்ற ஊர் அங்கமாலி. அந்த ஊரும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையும்தான் அப்படத்தின் கதை. ஒவ்வொரு சட்டகத்தையும்  பிசிறில்லாமல் சுவாரஸ்யமாகச் செதுக்கியிருந்தார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. இவர் இயக்கிய ‘ஆமென்’, ‘சிட்டி ஆஃப் காட்’ மலையாளத்  திரையுலகில் பெரும் அதிர்வைக் கிளப்பியது. ஓர் அதிகாலையில் அமைதியாக அரங்கேறியது அவருடனான இந்த உரையாடல்.

நீங்களும் சினிமாவும்...
சொந்த ஊரு சாலக்குடி. அப்பா ஜோஸ் பெல்லிசெரி நிறைய மலையாளப் படங்கள்ல நடிச்சிருக்கார். ஊர்ல ஒரு நாடகக் குழுவையும் நடத்திட்டு இருந்தார். சீனியர்  நடிகர் திலகன்அப்பாவோட நாடகங்களை டைரக்ட் செய்வார். சின்ன வயசுல இருந்தே அவங்ககூடத்தான் எப்பவும் இருப்பேன். இது மட்டுமில்ல, என் தாத்தாவும்  பெரிய சினிமா காதலர்தான். அடிக்கடி என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போவார். இந்த மாதிரியான சூழல்ல வளர்ந்ததாலோ என்னவோ சினிமாவே என்  வாழ்க்கையா மாறிடுச்சு.

86 புதுமுகங்கள்...
பொதுவா சினிமாவுல ஒரு கதைதான் சொல்றோம். அந்தக் கதைக்கு ஏத்த ஆட்கள் யாரோ, அவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கணும். ஆனா, ‘இந்த கேரக்டரை  இந்த நடிகர்தான் பண்ணணும்’னு நம்ம மனசு பழகிடுச்சு. அதனால பெரிய ஸ்டார்ஸை வச்சு படம் பண்றோம். உண்மைல கதைக்கு ஏத்த முகங்களைத் தேர்வு  செய்யறதுதான் சினிமாவுக்கு ‘ரைட் ரூட்’னு நினைக்கறேன். இந்தப் படத்தோட ரைட்டர் செம்பன் அங்கமாலிக்காரர். என் வீட்ல இருந்து அங்கமாலி 10 கி.மீ.தான்.  அதனால நாங்க அடிக்கடி சந்திப்போம். ஒருநாள் அங்கமாலியைப் பத்தி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருப்பதா சொன்னார். அதைப் படிச்சிட்டு அவரையே டைரக்ட்  பண்ணச் சொன்னேன். ஏன்னா என்னை விட அவருக்குத்தான் அங்கமாலியைப் பத்தி நல்லா தெரியும்.

ரெண்டு மூணு தடவை பெரிய ஸ்டார்ஸை வைச்சு படத்தை எடுக்க அவர் முயற்சி செஞ்சார். எதுவும் சரியா அமையலை. அதே நேரத்துல செம்பனோட ஸ்கிரிப்ட் என்னைத் தூங்க விடல. அதனால ‘நானே இந்தப் படத்தை டைரக்ட் பண்றேன்’னு  சொன்னேன். ஆனா, நடிகர்கள் எல்லோரும் புது ஆட்களாத்தான்  இருக்கணும்னு விரும்பினேன். அப்படி இருந்தாதான் படம் உயிர்ப்போட இருக்கும்னு நம்பினேன். அவரும் ஓகே சொன்னார். உடனே நடிகர்களைத் தேட  ஆரம்பிச்சேன். எதிர்பார்த்த முகங்கள் கிடைச்சது. லுங்கியைக் கட்டிட்டு ஷூட்ல இறங்கிட்டேன். யாருக்கும் பெருசா பயிற்சியெல்லாம் கொடுக்கல. ஸ்பாட்ல  ரிகர்சல் பார்த்ததோடு சரி.

எல்லோரும் புது ஆட்கள்... பயமாயில்லையா?
ஆரம்பத்துல ‘அங்கமாலி டைரீஸ்’ மாதிரியான படத்தை யாரு பார்ப்பாங்கனு பயமும் கவலையும் இருந்துச்சு. ஏன்னா நடிக்கிற ஓராளைக் கூட வெளில  தெரியாது. ஆனாலும் கதையை நம்பினேன். சினிமாவோ இல்ல வேற விஷயமோ அதுல நாம எந்தளவுக்கு சின்சியரா இருக்கறோம்கறது முக்கியம். அப்படி நான்  மட்டுமில்ல... நடிச்சவங்களும் சின்சியரா உழைச்சாங்க. அதுக்கான ரிசல்ட் கிடைச்சிருக்கு. எந்த நோக்கமும் இல்லாம சின்சியரா இருந்தா போதும். குறிப்பா  கிரியேட்டிவ் ஆர்ட்ல. இப்படி இருந்தா அதுக்கான ரிசல்ட்டை அதுவே கொடுக்கும்!

க்ளைமேக்ஸில் வரும் 11 நிமிடங்கள் சிங்கிள் டேக் என்பது உண்மையா?
ஆமா. கட் செய்யல. இந்த மாதிரி பண்ணும்போது ‘இடம்’தான் ரொம்ப முக்கியம். ஆரம்பத்துல இந்த சீனைப் பத்தி கேமராமேனுடன் பேசறப்ப ரெண்டு, மூணு  கட்ஸா போலாம்னு ப்ளான் பண்ணினோம். ஆனா, சிங்கிள் டேக்ல வந்தாதான் எதார்த்தமா இருக்கும்னு மனசுக்குத் தோணுச்சு. ஒரு முயற்சி எடுத்துப் பாக்கலாம்,  சரியா வரலைன்னா கட்டுக்கு போகலாம்னு தீர்மானிச்சோம். காலைல ஷூட் பண்ண வேண்டிய இடத்துல மக்கள் நடமாட்டம் அதிகமா இல்லாதப்ப ரிகர்சல்  பார்ப்போம். எந்த வழியா போகணும், எங்க ஃபைட் ஸ்டார்ட் ஆகும்னு டிசைன் பண்ணினோம். முதல் நாள் 200 பேரை வைச்சு ஷூட் போயிடலாம்னு  நினைச்சோம். ஆனா, ஆயிரம் பேருக்கு மேல வந்துட்டாங்க.

எல்லோருமே அங்கிருக்கிற ஆட்கள். ஷூட் பாக்க வந்தவங்க. கூட்டம் அதிகமா இருந்ததால ப்ளான் செஞ்ச மாதிரி எடுக்க முடியல. தவிர, கேமராவைப் பாத்து  சிரிச்சிடுவாங்க. இல்லைன்னா கேமரா ஒரு இடத்துல மாட்டிக்கும். ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணியும் எதுவும் நடக்கல. ஆனா, என்ன பண்ணணும்னு  புரிஞ்சது. ரெண்டாவது நாள் ஆட்களை சரியான இடத்துல செட் பண்ணினோம். எல்லோரும் ஒத்துழைச்சாங்க. ஷாட்டும் பிரமாதமா வந்துச்சு. உண்மையைச்  சொன்னா இதுக்காக பெருசா ரிஸ்க் எடுக்கல. இப்ப கூர்ந்து பார்க்கிறப்ப அங்க இங்க ஆட்கள் கேமராவை பாத்துட்டு இருக்கறது தெரியுது. இந்தக் குறைகளை மீறி  ரசிகர்கள் எங்களைக் கொண்டாடியிருக்காங்க.

‘சுப்ரமணியபுரம்’, ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ மாதிரி ஊர் சார்ந்த படங்கள் ‘அங்கமாலி டைரீஸ்’க்கு இன்ஸ்பையரா?
நிச்சயமா. ‘இன்ஸ்பையர்’ இல்லாம எதுவுமே பண்ண முடியாது. நாம எல்லோருமே நமக்கான விஷயங்களை இன்னொரு இடத்துல இருந்துதான் எடுக்கறோம். ‘இது ஒரிஜினல். எனக்கு யாரும் இன்ஸ்பையர் இல்லை’னு சொல்ற ஆட்கள் பொய்தான் சொல்றாங்க. எங்க இருந்து நமக்கான ஐடியாஸ் வருதுன்னு  யோசிச்சாலே இது புலப்படும். கண்டிப்பா ஒண்ணுலேந்துதான் இன்னொண்ணு.

தமிழ்ப்படங்கள்...
தமிழ்நாட்டுக்கு நிறைய தடவை வந்திருக்கேன். விளம்பரத்துறைல ஒர்க் பண்ணினப்ப இங்கதான் இருந்தேன். சமீபத்தில் ‘அருவி’ பார்த்தேன். ரொம்ப  பிடிச்சிருந்தது. எல்லாவிதமான படங்களுக்கும் இங்க இடமிருக்கு. இது ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன்.

அடுத்த படம்...
‘Ee.Ma.Yau’. கடற்கரையை ஒட்டிய கிராமத்துல நடக்கிற கதை. விநாயகனும், செம்பனும் நடிச்சிருக்காங்க. ஷூட் எல்லாம் முடிஞ்சிடுச்சு. மே அல்லது  ஜூன்ல ரிலீஸாகும். அதுக்கு முன்னாடி ஃபெஸ்டிவல்ல ஸ்க்ரீன் பண்ணலாம்னு ஐடியா இருக்கு.

தமிழுக்கு எப்ப வர்றீங்க...
ஒரு கதையை எங்க வேணாலும் சொல்லலாம். மொழி அதுக்கு தடையில்ல. ஆனா, சொல்ற கதை மொழியை டிமாண்ட் செய்தா அந்த மொழில படம் பண்ணலாம்.  அந்த மாதிரி ஒரு கதை தமிழ்ல படம் பண்ணச் சொல்லி கட்டளையிட்டா கண்டிப்பா வருவேன்.               

- த.சக்திவேல்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்