ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 66

நல்லகண்ணுவின் நெடிய அரசியல் வாழ்வில், எத்தனையோ கட்சித் தோழர்களுக்கு அவர் தலைமையில் திருமணம் நடந்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைச்  சேர்ந்த கட்சித்தோழர் ஒருவர், தன் மகளின் திருமணத்தை அவரின் தலைமையில் நடத்த பிடிவாதம் பிடித்திருக்கிறார். “கட்சிப் பணிகள் அதிகமிருந்ததால் வேறு  யாரையாவது தலைமை தாங்க அழையுங்களேன்...” என்றிருக்கிறார் நல்லகண்ணு. தோழரோ விடுவதாயில்லை. காத்திருந்து தேதி வாங்கி திருமணத்தை  நடத்தியிருக்கிறார். அத்திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, வற்புறுத்திய தோழரிடம், “கட்சியில் பலபேர் இருக்கையில், நானே வரவேண்டுமென ஏன்  வற்புறுத்தினீர்கள்..?” எனக் கேட்டிருக்கிறார்.

“அது வந்து தோழர்... என் மகளின் திருமணம், ஒரு தலித் தலைவர் தலைமையில்தான் நடக்கவேண்டும் என எண்ணினேன். அதனால்தான் உங்களை விடாமல்  வற்புறுத்தினேன்...” என்றிருக்கிறார் அத்தோழர். இடதுசாரிகள் சாதி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும், எந்த சாதியையும் அவர்களுக்குத் தாழ்வாகப் பார்க்கத்  தெரியாது. எந்த மாவட்டத்தில் எந்த சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கும்  பழக்கமும் இடதுசாரிகளின் மரபில்லை. யாராயிருந்தாலும் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு, மக்களை வழிநடத்தும் ஆளுமை பெற்றிருந்தால் போதும்.

சாதி என்பது தமிழ் மண்ணுக்கே உரிய மோசமான குணக்கேடு. இந்தக் குணக்கேட்டைஇடதுசாரிகளிலும் ஒருசிலர் கொண்டிருப்பது நல்லகண்ணுவுக்குக்  கவலையளித்திருக்கிறது. என்றாலும், திருமணத்திற்கு வற்புறுத்தி அழைத்த அத்தோழர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று நல்லகண்ணு விசாரிக்கவில்லை.  “அப்படியா சேதி...” என்று சிரித்துவிட்டு அவரைக் கடந்திருக்கிறார். “தவறாக நினைத்து அழைத்துவிட்டீர்களே...” என்றோ, “நான் தலித்தில்லையே...” என்றோ  அவர் சொல்லவில்லை. தன்னைத் தலித்தாக நம்பி, தலைமையேற்க அழைத்ததற்கு மகிழ்ந்திருக்கிறார்.

தலித்துகள் தலைமைக்கு வரவேண்டுமென பள்ளிப் பருவம் முதற்கொண்டு பாடுபடுபவரே நல்லகண்ணு. உலகமகா யுத்தத்தின்போது உணவுக் கமிட்டி ஒன்றை  அரசு அமைத்திருக்கிறது. அந்தக் கமிட்டியில் வசதி படைத்த மிராசுதாரர்களுடன் பள்ளி மாணவராயிருந்த நல்லகண்ணுவும், பெரியகுடும்பன் என்ற தாழ்த்தப்பட்ட தோழரும் இருந்திருக்கிறார்கள். தங்களுக்குச் சமமாக தாழ்த்தப்பட்ட பெரியகுடும்பன் அமர்வதை விரும்பாத மிராசுதாரர்கள், கமிட்டி கூட்டத்திற்குப்  பெரிய குடும்பனை அழைக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். கமிட்டியில் கலந்துகொண்டதாக கையொப்பத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, பெரிய குடும்பனை  ஒதுக்கியிருக்கிறார்கள்.

கண்ணெதிரே நடந்த சாதிய கொடுமையைப் பொறுக்காத நல்லகண்ணு, அந்த வயதிலேயே அவர்களுடன் சண்டையிட்டு, பெரிய குடும்பனை அழைத்துப்போய்  கமிட்டிக் கூட்டத்தில் அமர வைத்திருக்கிறார். பெரிய குடும்பன் சமமாக அமர்ந்த ஒரே காரணத்திற்காக கமிட்டி கலைக்கப்பட்டிருக்கிறது. தன்னை யார், எப்படி  கருதுகிறார்கள் என்பது பற்றிய அக்கறையின்றி, சக மனிதன் மீது அன்பு செலுத்தும் குணம் நல்லகண்ணுவினுடையது. சுயமரியாதை முறைப்படிதான் என்னுடைய திருமணமும் நடந்தது. திருமணத்திற்கு யார் தலைமை என்றதும், அப்பாவிடம் நான் சட்டென்று சொன்ன பெயர் நல்லகண்ணு.

அப்பா மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பிலிருந்தாலும், என் விருப்பத்தை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட்டான அவர், இந்திய கம்யூனிஸ்ட்டான  நல்லகண்ணுவை தயக்கமில்லாமல் தலைமையேற்க அனுமதித்தது வியப்பல்ல. தோழர் நல்லகண்ணுவை அழைக்க, நானும் அறிவுமதி அண்ணனும்  போயிருந்தோம். “நாங்கள் அழைக்க வந்தது உங்களை அல்ல; அம்மாவை...” என்றதும் நல்லகண்ணு அதிர்ந்து சிரித்தார். “அவர்களை எந்த விழாவுக்கும்  அழைத்துப் போனதில்லையே, வருவார்களா? தெரியாதே...” என்றவர், “இரண்டொரு நாளில் கேட்டுவிட்டு சொல்கிறேன்...” என்று வழியனுப்பினார்.

சொன்னதுபோலவே இரண்டாவது நாளில், “யார் திருமணத்திற்கும் வராதவர்கள், உங்கள் திருமணத்திற்கு என்றதும் முந்திக்கொண்டு கிளம்புகிறார்கள்...” என்று  மீண்டுமொரு அதிர்ந்த சிரிப்புடன் முகமளித்தார். ரஞ்சிதம் அம்மாளை அழைக்கப் போகும்வரை இதுதான் அவர்கள் இணைந்து கலந்து கொள்ளும் முதல்  திருமணவிழாவென்று எனக்கோ, அண்ணன் அறிவுமதிக்கோ தெரியாது. “முதல் முறையாக ஒங்க திருமணத்துக்குத்தான் ஒண்ணா வந்து வாழ்த்துறோம்...” என்று  அவர் பெருமிதத்துடன் சொன்ன காட்சி, நெஞ்சில் படமாக ஓடுகிறது.

என் திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் இருவரும் இணைந்து வேறொரு திருமணத்திற்கு செல்லவில்லை என்பதையும், நூல் வெளியீட்டில்தான் நல்லகண்ணு  வெளிப்படுத்தினார். ரஞ்சிதம் அம்மாவுடன் இணைந்து அவர் கலந்துகொண்ட ஒரே திருமணம் என்னுடையதே என்ற செய்தியை, வெறும் செய்தியாக  எடுத்துக்கொள்ள இயலவில்லை. மணமேடையில் நான், “தாலி கட்ட மாட்டேன். பெரியவர்கள் முன்னிலையில், உறுதிமொழியை மட்டுந்தான் வாசிப்பேன்...”  என்றேன். தலைமை தாங்கிய நல்லகண்ணு, “நீங்கள் முற்போக்கு குடும்பத்தைச் சேர்ந்ததால் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், பெண் வீட்டார் அப்படியில்லையே.  தாலி, இத்யாதிமீது நம்பிக்கைகள் உடையவர்களாயிற்றே.

உங்கள் விருப்பத்திற்குச் செய்வது சரியா..?” என்றார். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. பெண் வீட்டைக் கலந்துகொள்ளாமல் முடிவெடுப்பதும்  ஆதிக்கமே என்றவர், என் நெற்றியிலும் என் மனைவி நெற்றியிலும் பொட்டிட்டு வாழ்த்தினார். ரஞ்சிதம் அம்மாள், ஊரிலிருந்து பிரத்யேகமாக எடுத்து வந்திருந்த  குங்குமக் கவரைக் கொடுத்து ஆசீர்வதித்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த என் மனைவி, அன்றுமுதல் அப்பா என்று அழைப்பது நல்லகண்ணுவைத்தான்.  வீட்டில் ஒருவராக மாறிவிடக் கூடிய அவர், ரஞ்சிதம் அம்மாளின் பூர்வீக வீட்டை விற்றுத்தான் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.

தோழர் நல்லகண்ணுவின் எளிமையைப் பாராட்டாதவர்கள் இல்லை. கொள்கைப் பிடிப்பிலும், கோட்பாட்டு அறிவிலும், தலைமைப் பண்பிலும் தனித்து விளங்கும்  அவரை, எளிமையின் அடையாளமாக மட்டுமே உயர்த்திப் பார்ப்பது ஏன்? விளங்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், எத்தனையோ  தலைவர்கள் எளிமையில் சிறந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்தது, எப்படிப்பட்ட எளிமை என்பதுதான் கேள்வி. காமராஜரும் கக்கனும் கடைப்பிடித்த  எளிமை வேறு.

ஜீவானந்தமும் நல்லகண்ணுவும் வரித்துக்கொண்ட எளிமை வேறு. காமராஜரும் கக்கனும் மந்திரி சபையில் இருந்தும் எளிமையாக இருந்ததாக நிறுப்பவர்கள்,  அதே தராசில்தான் ஜீவாவையும் நல்லகண்ணுவையும் அளக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆட்சியில் இருந்தவர்களும் ஆட்சிக்கு எதிராகப்  போராடுகிறவர்களும் ஒரே மாதிரிதான் என்பதுகூட மேம்போக்கான பார்வையே. வேண்டுமானால், இருந்ததைக் கொடுக்க அவர்களும், இழந்ததை மீட்க இவர்களும் எளிமையைக் கைக்கொண்டதாக கருதிக்கொள்ளலாம். தினம் ஒரு போராட்டம், வருடத்தில் சிலநாள் சிறை என்னும் நடைமுறைக்கு தன்னை  தயார்படுத்திக்கொண்ட நல்லகண்ணு, சிறையிலிருந்து எழுதிய கட்டுரைகளை இளமை மணியன் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்.

‘சமுதாய நீரோட்டம்’, ‘சிறையிலிருந்து ஓர் இசை’ எனும் தலைப்புகளில் வெளிவந்துள்ள அந்நூல்களில் பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  அவை தமிழகத்தில் அவ்வப்போது நடந்த போராட்டக் குறிப்புகளில்லை. வரலாற்றையும் இலக்கியத்தையும் நடைமுறை வாழ்வையும் கலந்துகட்டி எழுதப்பட்ட  கருத்துக் குவியல்கள். அஜாய்குமார்கோஷ், அம்பேத்கர், திரு.வி.க, ஹோ-சி-மின், ஜீவா ஆகியோரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை அந்நூல்களில்  தந்திருக்கிறார். ‘வேதம் பரப்பிய பாதுஷா’ என்றொரு கட்டுரை.

இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் இன்று தொடுத்து வரும் தாக்குதலுக்கெல்லாம் பதிலாக அக்கட்டுரை அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் மூத்த  அண்ணன் தாரா ஷிக்கோ காசி மண்டலத்தை ஆட்சி செய்தபோது, அவரைச் சந்தித்த குமரகுருபரர் சைவ சித்தாந்தத்தையும் மத நல்லிணக்கத்தையும் விளக்கிப்  பேசியதை அக்கட்டுரையில் விவரித்திருக்கிறார். குமரகுருபரரின் தத்துவச் சிறப்பையும் விவாதத் திறனையும் கேட்ட தாரா ஷிக்கோ அனைத்து மதத்தினரையும்  அழைத்து மாநாடு நடத்தியிருக்கிறார். மட்டுமல்ல, காசியில் குமாரசாமி மடத்தை நிறுவ நில மானியமும் நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.

இந்தத் தகவல்களை அக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளும் நல்லகண்ணு, கட்டுரையின் இறுதியில், “வரலாற்றில் இரு பக்கங்கள் உள்ளன. இந்துக்களுக்கு எதிரான  முகலாய மன்னர்கள் சிலரின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்க முயற்சித்தால் மனிதகுல வரலாற்றில் ரத்தக் களரிதான் மிஞ்சும்...” என்றிருக்கிறார்.  ஒளரங்கசீப்பையும் தாரா ஷிக்கோவையும் வேதம் பரப்பிய பாதுஷாக்களாக சொல்லிவந்த அவர், ஏனைய முகலாய பாதுஷாக்கள் இந்துமத எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டதை ஆதரித்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்