ஒரு கிராமத்தான் நடிகரான கதை



பளீரென்று சினிமாவில் நடிகராக நுழைந்திருக்கிறார் சின்னத்திரை இயக்குநர் கவிதாபாரதி. ‘அருவி’யில் இயக்குநராக, ‘படைவீரனி’ல் ஊர் பெரிய மனிதராகக் களை கட்டி முன்னணியில் இருக்கிறார். சூடு பறக்கும் அடர்த்தியான மத்தியான வெயிலில் சந்தித்தால், நடுவில் புகுந்து, ‘‘சார், நீங்கதான் இப்ப பின்றீங்க.  சூப்பர் சார்..!’’ என பைக்கை நிறுத்தி ஒருவர் கை கொடுத்துச் செல்ல, ‘‘இப்படித்தாங்க பயமுறுத்துறாங்க...’’ எனச் சிரிக்கிறார் கவிதாபாரதி. இனி அவர்  வாழ்க்கை அவரது வார்த்தைகளில்... சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடையது. சென்னிமலைக்கு பக்கத்திலிருக்கிற  சென்னியங்கிரிவலசு. விவசாயம்தான் தொழில்.

எங்க பக்க ஏரியா வறட்சியானது. நம்பி ஏமாத்தும் மழை. அதனால் நெசவுதான் உபதொழில். பெரிசா படிப்பு ஏறலை. பிளஸ் ஒன் வரைக்கும்தான் படிச்சேன்.  எப்பவும் படிக்கிறதில்தான் ஆர்வம். பக்கத்தில் ஒரு நெசவாளர் குடியிருப்பு இருந்தது. அங்கிருக்கிற புத்தகங்களை எல்லாம் படிச்சு தீர்த்தேன். ஒருமணி நேரம்  இருந்திட்டு போயிடலாம்னு வருவேன். அப்படியே ராத்திரி ஏழு மணி வரைக்கும் பொழுது போயிடும். காட்டுப் பாதையில குறுக்கே போனால் சுலபமாக வீட்டுக்குப்  போயிடலாம். பயமாயிருக்கும். சரியான வழியில் வந்தால் அம்மாகிட்டே அடி வாங்கணும். வாங்குவேன்.

ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார்னு படிச்சிட்டே இருக்கும்போது ‘செம்மலர்’ இதழ் அறிமுகமாகுது. அதுல நாம் அன்றாடம் சந்திக்கிற மனிதர்களாக இருந்தாங்க.  சம்பவங்கள் அசலாக இருக்கு. வானத்திலிருந்து குதிச்சு வந்தவங்க மாதிரி தெரியலை. அதுக்கடுத்து நிறைய படிக்கிற விதம் மாறுது. பள்ளிக்கூடத்தில்  படிக்கும்போது நிறைய போட்டிகளில் கலந்துக்குவேன். உடற்பயிற்சி ஆசிரியர் சதாசிவம் கவிதையெல்லாம் எழுதிக் கொடுப்பார். ஒரு தடவை அதைக்  கொண்டுபோய் ஒரு போட்டியில் வாசிச்சேன். ஆறுதல் பரிசு அதற்குக் கிடைத்தபோது நிறைய கைதட்டல் கிடைச்சது.

ஆனால், எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இது நியாயமில்லைன்னு புரிஞ்சது. நிஜமாகவே கவிதைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். வாழ்க்கையில்  இருக்கிற இருண்மை, இலக்கியத்தைத் தொற்றியே தீரும். அதிலும் கவிதையை உடனடியாகத் தொடும்னு புரிஞ்சது. புரியாத தத்துவங்கள், அடி மனம், ஆழ்மனம்  போகாமல் எல்லோருக்கும் புரியும்படியான நல்ல கவிதைகள் எழுத முடிஞ்சது. ஒரு தடவை வைரமுத்து கூட்டத்திற்கு வந்திருந்தார். என் கவிதை ஒன்றை  குறிப்பிட்டுப் பேசி ‘வயதில் என் தம்பி, கவிதையில் என் அண்ணன்...’னு சொல்லிட்டுப் போயிட்டார். அந்தக்கணமே நான் பிரபலம் ஆகிட்டேன்.

எல்லோரும் சென்னைக்குப்போய் சினிமாவில் சேர்னு சொன்னாங்க. புறப்பட்டு வந்தேன். சினிமாவிற்கு வந்தால் சென்னையில் எல்லோருக்கும் ஒரு பெரிய  கதையிருக்கும். எனக்கு மலர்ப்படுக்கையில் நடந்த மாதிரி அதிகமும் சந்தோஷ நினைவுகள்தான் வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங்கனு சொல்வாங்க. ஆனா, எனக்கு கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். கவிஞர் அறிவுமதியை  வந்து பார்த்தேன். அவர் பாலுமகேந்திரா கிட்டே கொண்டுபோய் விட்டார். என் பேரைக்கேட்டதும் ‘‘வீடு’ படம் பார்த்திட்டு நீ எனக்கு கடிதம்  எழுதியிருந்தியா..?’னு கேட்டார்.

ஆச்சரியம் தாங்கலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி போட்ட கடிதம். ஞாபகம் வச்சிருக்காரேன்னு மலைச்சு நின்னப்ப ‘அதெல்லாம் சொத்து தம்பி.  வைச்சிருக்கேன் இன்னும்...’னு தட்டிக்கொடுத்தார். அவர் கூப்பிட்டபோது ஊரிலிருந்து புறப்பட்டு வர காசில்லை. ஏற்பாடு பண்ணிட்டு வந்தா இங்கே எனக்குப்  பதிலாக ‘பாலா’னு ஒருத்தர் சேர்ந்துட்டார். அப்புறம் ராதிகா மேடத்திடம் அறிமுகம் ஆகி ‘சித்தி’க்கு வசனம் எழுதினேன். என் உயரத்திற்கு அடிப்படையாக  இருந்தது நான் சந்தித்த மனிதர்கள். அறிவுமதி, பழனிபாரதி, மருது, ‘ஆனந்த விகடன்’ ரா.கண்ணன், கிள்ளிவளவன்னு ஆரம்பிச்சு என்னை உள்ளங்கையில்  தாங்கினவங்க நிறைய பேர்.

கல்யாணம் செய்துகிட்டால் பொண்டாட்டியை மாநகர பஸ்ஸில் ஏத்தி கஷ்டப்படுத்தக்கூடாது, பொதுக் கழிப்பறை இருக்கிற இடத்தில் வாடகைக்கு இருக்கக்கூடாது,  ரேஷன் கடையில் க்யூவில் நின்னு காக்க வைக்கக்கூடாதுன்னு நினைச்சேன். பொருளாதார நிலைமை சீரானபிறகுதான் கல்யாணத்திற்கே தயாரானேன். ‘நீலவானம்’ சீரியலை சன் டிவிக்காக இயக்கும்போது அதில் கன்யா நடிச்சாங்க. அவங்களோட இயல்பான அணுகுமுறை, பகட்டில்லாத பக்குவம் பிடிச்சது.  அவங்ககிட்டே என் விருப்பத்தைச் சொன்னேன். முதலில் விளையாட்டாக நினைச்சவங்க, பிற்பாடு சம்மதிச்சாங்க. இப்போ ‘நிலா’னு ஒரு பொண்ணு. என்  அன்பிற்கான தேடல் கன்யாவோட முடிந்தது.

நிலாவும், கன்யாவும் என்னை இட்டு நிரப்பியிருக்காங்க. நண்பர் வடிவேல் ‘கள்ளப்படம்’ படத்தில் என்னை நடிகரா அறிமுகப்படுத்தினார். அடுத்து வந்த  ‘அருவி’ என்னை பெரிதாகக் காட்டி விட்டது. இப்போது ‘படைவீரன்’ நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. எனக்கு மணிவண்ணன் சார் மாதிரி நடிக்கணும்னு  ஆசை. எந்த பிரயாசையும் படாமல், சாதாரணமாக மெனக்கெடாமல் நடிச்சிட்டு போய்விடுவார். உடம்பில் பெரிய மாற்றங்கள் எதையும் வைத்துக்கொண்டதில்லை.  அவரால் ‘இளமைக்காலங்கள்’, ‘அமைதிப்படை’னு விதவிதமாகச் செய்ய முடிந்தது. அரசியல் விளையாட்டை, அதன் மனோபாவத்தை அனாயாசமாக  நுழைத்துவிடுவார். எனக்கு வில்லன் ரோல்களைவிட காமெடி, கேரக்டர் ரோலில் இன்னும் செய்ய முடியும்னு தோன்றுகிறது. அப்படி ஒரு வாய்ப்புக்காகவும் என்  காத்திருப்பு இருக்கு.          

- நா.கதிர்வேலன்