தானா சேர்ந்த கூட்டம்



சிபிஐ ஆபீஸராக ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போனாலும் சிபிஐ அதிகாரியாகவே நடித்து ஊழல்களைக் களைவதே ‘தானா சேர்ந்த கூட்டம்’. அதிரிபுதிரியாக இந்தியில் வெற்றியைக் குவித்த ‘ஸ்பெஷல் 26’ன் கதையைத் தழுவினாலும் தன் சொந்த கற்பனையையும் விதைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சூர்யாவுக்கு சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்பது தீராக்கனவு. அவரது நண்பர் கலையரசனுக்கும் போலீஸ் அதிகாரி ஆவதே லட்சியம். சுரேஷ் மேனனின் சூழ்ச்சியால் இருவருக்கும் வேலை கிடைக்காமல் போகிறது. இதில் கலையரசன் தற்கொலை செய்து கொள்கிறார். அதனால் சூர்யா ஆவேசமாகி வேறு முடிவு எடுக்கிறார். விளைவு - அவராகவே சேர்த்த கூட்டத்தை வைத்துக் கொண்டு போலி சிபிஐ ஆபீஸராக அதகளம் செய்கிறார்.

ராபின் ஹுட்டாக  இங்கே எடுத்து அங்கே உதவுகிறார். சர்வரோக நிவாரணியாக உருவெடுக்கும் சூர்யாவுக்கு புதிதாக என்ட்ரி ஆகும் ஆபீஸர் கார்த்திக்கினால் இடையூறு வருகிறது. அவரின் பிடியிலிருந்து சூர்யா தப்பித்தாரா? இடையில் வரும் காதலியைக் கைப்பற்றினாரா... என்பதே படம். விறைப்பும், முறைப்புமாக கேரக்டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா. நிதானமாகப் பேசிக்கொண்டே ரெய்டுகளை வெற்றிகரமாக நடத்தி பணத்தை அள்ளும்போதும், வகைதொகையில்லாமல் சமுதாய அக்கறை புரளும் வசனங்களை பேசும்போதும் அனல் பட்டாசு. வழக்கத்திற்கு மாறாக ஆட்டம் பாட்டங்களில் அநியாயத்திற்கு இறங்கி அடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பார்க்க, ரசிக்க, பேசிக் கேட்க... செம க்யூட். அவ்வப்போது தலை காட்டி விட்டு பாடல்களுக்கு மட்டுமே அழகி டெடிகேடட்! போலி ரெய்டு செய்யும் கூட்டணித் தலைகளாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் என கலகலப்பு டீம். சீரியஸ் காட்சிகளில் காமெடி தலை நீட்டுவது விக்னேஷ் டெக்னிக். லஞ்சம், வேலை வாய்ப்பில் ஊடுருவி, சாதாரண மக்களைப் பலி கொள்வதில் ஆரம்பித்து, பல இடங்களில் வசனங்கள் மரண அடி. கொஞ்ச நேரமே வந்தாலும் ஆர்.ஜே.பாலாஜி கலக்கல். சுரேஷ் மேனன் சிபிஐ அதிகாரியாக ஏகத்துக்கும் ஃபிட்.

லாஜிக் கேள்விகள் லோடு லோடாக எழுகின்றன. ரெய்டின் போது அரசியல்வாதி தாக்கப்படுவதும், மொத்த நிகழ்வும் காமெடியாக்கப்படுவதும் வேடிக்கை. ஆளாளுக்கு ஃப்ளாஷ்பேக் சொல்வதில் சற்றே சலிப்பு எட்டுகிறது. மெசேஜ் ஏரியாவிற்குள் சூர்யா சென்ற பிறகு, கதைக்களம் பின்தங்குகிறது. என்னதான் இருந்தாலும் சீனியர் சீனியர்தான். கார்த்திக் வந்த பிறகு சூடு பிடிக்கிறது கதையோட்டம். அனிருத் இசையில் பாடியிருக்கும் ‘சொடக்கு மேலே சொடக்கு...’ பாடலில் அந்தோணி தாசன் ஸ்கோர். டெரர் காட்டும் பின்னணி இசை கேட்ச்சிங். தினேஷ் கிருஷ்ணனின் காமிரா புத்தாண்டின் இரவு போல அவ்வளவு கலர்ஃபுல். சலசலப்பும், பரபரப்புமாகச் சென்ற வகையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டெம்போவைத் தக்க
வைக்கிறது.

- குங்குமம் விமர்சனக்குழு