டென்னிஸ் ப்ளேயர் ஓவியா!



‘‘ஏதாவது ஒரு விஷயத்துல எல்லாருமே சென்டிமென்ட் இடியட்டா இருப்போம். சிலருக்கு அவங்க ரெகுலரா அணியற டிரெஸ்ஸா இருக்கும். அந்த டிரெஸ் கிழிஞ்சாலோ காணாமல் போனாலோ அவங்களால அதை தாங்கிக்கவே முடியாது. இன்னும் சிலர் முதன் முதலா வாங்கின பொருளை பொக்கிஷமா பாதுகாப்பாங்க. வேறு சிலர் தாங்க பயன்படுத்தற பைக்கையோ, காரையோ உயிருள்ள ஜீவனா நினைச்சு அதுகிட்ட எல்லா ரகசியங்களையும் ஷேர் பண்ணிப்பாங்க.

ஒரு பைக்குக்கும் அதோட ஓனருக்கும் உள்ள நெருக்கமும் புரிதலும் வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கு புரியவே புரியாது...’’பாசமும் நேசமுமாக பேசுகிறார் ரத்தீஷ் எராட். டிவி ஷோ பாப்புலாரிட்டிக்குப் பிறகு ஓவியா முதலில் கமிட் ஆன ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர். ‘‘சில வருஷங்களுக்கு முன்னாடி நண்பரோட பைக்ல போயிட்டிருந்தேன். அப்பதான் இந்தப் படத்தோட கதை தோணுச்சு. என் நண்பர் 40 கி.மீ., வேகத்துக்கும் குறைவா பைக்கை ஓட்டறார். அவருக்கு பின்னால் நான். எப்பவுமே மெதுவாதான் அவர் ஓட்டுவார்.

அன்னிக்கு எங்க பின்னாடி வேகமா வந்த பைக் ஒண்ணு எங்களை கிராஸ் பண்ணுச்சு. நண்பர் என்ன நினைச்சார்னு தெரியலை. சட்டுனு தன் பைக்கை ஸ்பீடா ஓட்டி முன்னாடி போன வண்டியை மடக்கினார். எனக்கு சேஸிங் சீன் மாதிரி இருந்தது. ‘எதுக்கு வண்டியை நிறுத்துனீங்க..?’னு அந்த பைக்காரர் கேட்க, அப்போ என் நண்பர் சொன்ன காரணம் என்னை சிலிர்க்க வச்சது. அதை அப்படியே ஆக்‌ஷன், காமெடி மிக்ஸிங்ல அழகான லவ் ஸ்டோரியா பண்ணினேன்...’’ என்றபடி ஃபீலாகிறார் ரத்தீஷ் எராட்.

யார் அந்த கணேசா..?
சஸ்பென்ஸ். ‘கணேசா’ங்கறதுல ட்விஸ்ட் வச்சிருக்கோம். இந்த  ஸ்கிரிப்ட் எழுதறப்பவே மனசுவிட்டு சிரிக்கற படமாதான் இதைப் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். தலைமுறை தலைமுறையா புல்லட் வண்டியை ஓட்டி வரும் ஒரு குடும்பத்தைப் பத்தின கதை இது. மதுரை, தேனி, சென்னைனு மூணு இடங்கள்ல கதை ட்ராவல் ஆகும். பாண்டியராஜன் சாரோட மகன் பிருத்வி ஹீரோ. ஹீரோயின்ஸா ஓவியாவும், புதுமுகம் தேவிகா நம்பியாரும் நடிச்சிருக்காங்க. தவிர,

‘திமிரு’ வில்லன் விஜயன், சிங்கம்புலி, மதுமிதானு காமெடி நடிகர்களின் கூட்டமும் இருக்கு. தயாரிப்பாளர்கள் அருண் விக்ரமன் கிருஷ்ணன், ஜமால் முஹம்மது இரண்டு பேருக்குமே இதுதான் முதல் தயாரிப்பு. ஒளிப்பதிவாளர் விபின்த் வி.ராஜ், இசையமைப்பாளர் என்.எல்.ஜி.சிபி இருவருமே அறிமுகங்கள். சூப்பர் சுப்பராயன், சங்கர் ரெண்டு பேரும் ஸ்டண்ட்டை கவனிச்சுக்கறாங்க.

ஓவியா - பிருத்வி ஜோடிப் பொருத்தம் எப்படி..?
பக்கா கெமிஸ்ட்ரி. ஓவியா கமிட் ஆனதும் படம் வேற லெவலாகிடுச்சு. அப்பாவி கேரக்டர். பிச்சு உதறியிருக்காங்க. பணக்கார வீட்டுப் பொண்ணா மாடர்ன் லுக்குல கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ்ல அசத்தியிருக்காங்க. படத்துல தேவிகா நம்பியாரும் இருக்கறதால, ஓவியாகிட்ட முழு ஸ்கிரிப்ட்டையும் படிக்க கொடுத்தோம். கதைல ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. அவங்க ஓபனிங் சீனை கும்பகோணம் தெருவுல ஷூட் பண்ணினோம். கூட்டம் கூடிடுச்சு. காலை டூ ஈவினிங் ஷூட் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனா, ஓவியாவுக்காக கூடின கூட்டத்தால ஒரு மணி நேரத்துல முடிக்க வேண்டியதாகிடுச்சு. ஒரு சீன்ல ஓவியா டென்னிஸ் ஆடுவாங்க. பார்த்தா ஒரு புரொஃபஷனல் விளையாடற மாதிரியே இருக்கும்.

அவங்களுக்கும் தேவிகாவுக்கும் காம்பினேஷன் சீன்ஸ் கிடையாது. தேவிகா மலையாள சேனல்ல காம்பியரா இருந்தவங்க. தமிழ்ல நிறைய படங்கள் பண்ற ஐடியால இருக்காங்க. மதுரை, தேனி ஸ்லாங்கை அப்படியே உதயபாண்டியன் டயலாக்குல கொண்டு வந்திருக்கார். ஹீரோ பிருத்விக்காக பாண்டியராஜன் சார் இந்தக் கதையைக் கேட்டார். ‘சூப்பரா இருக்குது ரத்தீஷ்’னு ஹேப்பியானார். பிருத்விக்கு செம ஜாலி கேரக்டர். எந்த வேலைவெட்டிக்கும் போகாம சும்மா இருக்கறவர். அவருக்கு உதவி செய்யறவரா சிங்கம்புலி. படத்துல ஒரு ஃபயர் சீக்குவென்ஸ் வச்சிருக்கோம். ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். அவருக்கு ஒரு ஹிட் காத்திருக்கு.

உங்க பெயரே வித்தியாசமா இருக்கே..?
ஒரிஜினல் பெயர்தான். பூர்வீகம் கேரளா. ஆனா, கோடம்பாக்கத்துல பதினைந்து வருஷங்களுக்கு மேல இருந்திட்டிருக்கேன். மலையாள இயக்குநர்கள் ப்ரதீப்குமார், கரீம் படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். அப்புறம் விளம்பரப் படங்கள். இப்ப இயக்குநர்!

- மை.பாரதிராஜா