COFFEE TABLE



தீபிகாவின் பெஸ்ட் ஃப்ரெண்ட்
இன்ஸ்டாவில் குட்டிக் குட்டி வீடியோக்களை தட்டிவிட்டு ஜாலி பண்ணுவது தீபிகா படுகோனேவுக்குப் பிடித்த ஹாபி. சமீபத்தில் கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருக்கிறார் தீபி. அங்கே சிப்பிகள் நிறைந்த மணலில் நத்தை ஒன்று படுவேகமாக ஊர்ந்து வருவதை மொபைலில் ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். அப்புறமென்ன, ஒரே நாளில் பத்து லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். இன்னொரு மிராக்கிள்... தனது தங்கையும், பெஸ்ட் ஃப்ரெண்டுமான அனிஷா படுகோனேவுடன் கலாட்டா செய்வதை சில நொடி ஜிஃப் வீடியோவாக பதிவிட... அதையும் அரை மணி நேரத்திற்குள் 2 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

பவர் பேங்க்
கையடக்க அளவில் பவர் பேங்க் வேண்டும் என நினைப்பவர்களுக்கு ‘ஷியோமி’ நிறுவனத்தின் ‘எம்.ஐ. பவர் பேங்க்’ நல்ல சாய்ஸ். ஓவர் சார்ஜிங் ஆகாத அளவுக்கு இதில் தொழில்நுட்ப வசதி இருப்பதால், பேட்டரி நீடித்து உழைக்கிறது.‘10000 mAh’ திறன் கொண்டிருப்பதால் விரைவில் சூடாவது தடுக்கப்படுகிறது. சார்ஜ் இண்டிகேட்டர் வசதியும் இதில் உள்ளது. மனதைக் கவரும் விதத்தில் அழகாக இதை வடிவமைத்திருக்கின்றனர். விலை ரூ.1,299.

காஸ்மெட்டிக்ஸ் ஃபார் மென்!
‘‘ஒரு காலத்தில் விதவிதமான நறுமணங்கள் வீசுகின்ற வாசனைத் திரவியங்களுக்கு மட்டும்தான் இந்திய ஆண்கள் மத்தியில் மவுசு. ஆனால், இன்று பெண்களுக்கு நிகராக லோஷன், க்ரீம் போன்ற அழகுசாதனப் பொருட்களை ஆண்கள் வாங்கிக் குவிக்கின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இதனால் ‘‘ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களின் வணிகம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது...’’ என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. மட்டுமல்ல, ‘‘வெளிநாட்டு ஆண்களைப் போல தாங்கள் ஃபிட்டாக இருக்கவேண்டும். நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதில் இந்திய ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை. மாறாக, முகம் அழகாக, சிவப்பாக இருந்தால் போதும் என்ற மனப்பான்மையில்தான் அதிகமாக உள்ளனர். இதனால் அயல் நாட்டைச் சேர்ந்த காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க போட்டி போடுகின்றன...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

விநோத விழா
போர்ச்சுக்கல்லின் வடக்கில் வீற்றிருக்கிறது வேல் டே சல்க்யூரோ என்ற குக்கிராமம். புது வருடத்தின் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துவ பாரம்பரிய விழாக்கள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இசை, நடனம், ஒயின், விதவிதமான உணவு... என்று ஊரே களைகட்டியிருக்கும். மட்டுமல்ல, இந்த விழாவில் சிறார்களுக்குப் பெற்றோர்களே சிகரெட்டுகளை வாங்கிக் கொடுத்து புகைக்கச் சொல்கின்றனர்! சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில் சிறுவர்கள் இஷ்டம் போல புகைத்துத் தள்ளுகின்றனர். ‘‘இது எங்களின் பாரம்பரியம். இதில் எந்த தவறும் இல்லை...’’ என்று சல்க்யூரோவாசிகள் ஒருமித்த குரலில் சொன்னாலும், சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

சுட்டி அனிமல்ஸ் 
விலங்குகளுக்கும் குழந்தைத்தனங்கள் உண்டு என்பதை நிரூபிக்கிறது ஃபேஸ்புக்கின் ‘Best video you will ever see’ பக்கத்தில் இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று. ‘புல்வெளியில் டயர் ஒன்றை உருட்டி விளையாடும் யானை, நாய்க்குட்டியின் துள்ளலைப் பார்த்து குதூகலிக்கும் காண்டாமிருகம், குதித்துக் குதித்து விளையாடும் எருமை, குட்டிக்குதிரையுடன் தாவி விளையாடும் குதிரை, டைவ் அடிக்கும் வாத்துகள்...’ என விலங்குகளின் சுட்டித்தன தருணங்களை எல்லாம் தொகுத்து ‘To a new year full of compassion’ என்ற தலைப்பில் பதிவிட, 11 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். 2 லட்சம் பகிர்வுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது அந்த வீடியோ.