ஸ்கெட்ச்



உற்ற நண்பர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கொல்லப்பட, அதற்கு பழி வாங்க வீறு கொண்டு விக்ரம் எழுவதுதான் ‘ஸ்கெட்ச்’. தவணை கட்டாதவர்களிடமிருந்து வண்டியை ‘மீட்டு’ வருவது, பணத்தை வட்டியோடு வசூலிப்பது, எதிர்ப்பு தெரிவித்தால் சற்றே பலப்பிரயோகம் செய்து வசூலிப்பதுதான் விக்ரமின் வேலை. தன் முதலாளியிடம் பல சாகசங்களைச் செய்து அவரின் நம்பத்தகுந்த இடத்திற்கு வருகிறார். இது உடன் வேலை பார்க்கிறவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் அவர் மேல் அனுதாபம் கொள்கிறார் தமன்னா. அதுவே காதலாகி கசிந்துருகி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது வரை போகிறது.

இதற்கிடையில் எதிரிகளைச் சாய்த்து வெற்றியாகப் புறப்படும் விக்ரம் என்னவானார் என்பது விஜய்சந்தரின் துளியூண்டு திரைக்கதை. அதிரடி, குத்து, வெட்டு, துப்பாக்கி, உருட்டல், மிரட்டல், கோபம் என பல இடங்களில் ஜொலிக்கிறார் விக்ரம். நண்பர்கள் பலியான பிறகு ஆவேசத்தில் எதிரிகளைத் தூள் தூளாக்குவதில் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார். லுங்கியைக் கட்டிக் கொண்டு சிகரெட்டை கவ்விக் கொண்டு மைதானத்தில் எதிரிகளை அடிக்கும் ஒவ்வொரு அடியும் சரவெடி! அவருக்கு எந்த கஷ்டத்தையும் வைக்காமல் திரைக்கதை இருந்தாலும், அவர் மிரட்டியிருப்பது ஆல் ரவுண்ட் அசத்தல்.

தமன்னா செம ஜில்! பார்க்கிற பார்வையிலும் சேலை கட்டுகிற முறையில் தெரிகிற விதத்திலும் அட்டகாசம்! சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் அழகு.  ஆவலோடு சூரியின் பிரவேசத்தை எதிர்பார்த்தால் அவர் கால்ஷீட் கிடைத்த பொழுதெல்லாம் எடுத்த அவசரம் தெரிகிறது. நண்பர்களாக விஸ்வநாத், ஸ்ரீமன் கச்சிதம். வடசென்னையின் சில அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருப்பதில் டைரக்டரின் கூடுதல் கவனிப்பு தெரிகிறது. எக்ஸ்ட்ரா வில்லன்களும் அளவோடு நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ், பாபுராஜ் என எக்கச்சக்க வில்லன்கள் சூழ்ந்திருப்பது பயமூட்டுகிறது!

நண்பர்கள் ஒவ்வொருவராக சாய்க்கப்படும் காட்சிகள் ஏற்படுத்தும் பயமும், பதட்டமும் விறுவிறுப்பான இடத்திற்கு படத்தை மாற்றிக்கொண்டே செல்கிறது. ஹரீஷ் பேரேடியும் கச்சிதம். விக்ரம் மாதிரி நடிகரை வைத்துக் கொண்டு இன்னும் புதுமையான திரைக்கதையில் பிசிறு தட்டாமல் வந்திருக்கலாம். ரேஸ் குதிரையை ஜானவாச ஊர்வலத்தில் விட்ட மாதிரியான கதையின் வாசனையைத் தவிர்த்திருக்கலாம். பில்டப்போடு ஆரம்பிக்கும் முன்பாதி, பிற்பாடு தள்ளாடுவதை அவதானிக்க முடிகிறது.

யாரும் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ் நிஜமாகவே அதிர்ச்சி! இறுதியில் சொல்லியிருக்கிற மெசேஜ் கவனிக்கத்தக்கது. வடசென்னையின் அழகையும், ஆவேச சண்டைக்காட்சிகளின் பதட்டத்தையும் ஒரு சேர கூட்டிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். எஸ்.எஸ்.தமனின் பாடல்களுக்கு இதயம் செவி சாய்க்கவில்லை என்றாலும் பின்னணியில் மாஸ் காட்டுகிறது. முன்பகுதி பரபரப்பு பின்பகுதியிலும் தொற்றியிருந்தால் போட்ட ‘ஸ்கெட்ச்’ இன்னும் வேலை செய்திருக்கும்.

- குங்குமம் விமர்சனக்குழு