குலேபகாவலி



முன்னோர்களால் புதைக்கப்பட்ட புதையலை மீட்க திருடர்கள் தேடிப்போய்ச் சேர்கிற இடமே ‘குலேபகாவலி’.சுதந்திரத்திற்கு முன்பு ஆரம்பித்து நகர்கிறது கதை. இங்கே கொள்ளையடித்த ஏராள, தாராள வைரங்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு போக எத்தனிக்கிறார்கள். ஆங்கிலேயரிடமிருந்த அந்த வைரங்களைத் திருடி, குலேபகாவலி ஊரில் இருக்கும் கோயிலில் புதைத்துவிட்டு இறந்து போகிறார் ஒருவர். சில பல தலைமுறைக்குப்பிறகு அவரின் வாரிசு, ஆனந்தராஜ் உதவியோடு அந்தப் புதையலை மீட்க திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற திருடர்களான பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி(!), முனிஸ்காந்த் ஆகிய நான்கு பேரும் கூட்டுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

முயற்சி நிறைவேறியதா... என்னவானது அந்தப்புதையல் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. அதுவேதான் கிளைமேக்ஸ். எப்பாடுபட்டாவது சிரிக்க வைக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ட்ரெண்ட், உலக சினிமாவுக்கான சீரியஸ் முயற்சி என வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என்று இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். அதில் பல சமயம் வெற்றியும், சில சமயங்களில் முயற்சியாகவுமே நின்றிருக்கிறது. வகையான இரண்டு மூன்று பாடல்களில் நடனமாடி கெத்து காட்டிவிட்டு, மீண்டும் சிரிப்புக் கதைக்குள் குதித்துவிட்டார் பிரபுதேவா.

ஆக, இது காமெடியில் பிரபுதேவாவின் கோட்டா! காதலியாக பாவிக்க ஹன்சிகாவிடம் நெருங்குவது, வில்லன் வந்துவிட்டான் என்று கனவில் பயந்து அலறி ஹன்சிகாவிடம் ‘இச்’ பெறுவது, ‘அக்கா, அக்கா’என ரேவதியிடம் பேசுவது, ஆரம்பக் காட்சியிலே அட்டகாச என்ட்ரி கொடுப்பது என அட்டகாச பிரபுதேவா! இந்த நாலு பேர் கேங்கிற்கு அருமையாக தலைமை தாங்குகிறார் பிரபு. மன்சூர் அலிகானிடம் அடியாள் வேலை செய்கிறவராக ஆரம்பிக்கும் காமெடி கலகலப்புக்கு உத்தரவாதம்.

ஹன்சிகா எதிர்பார்த்ததுதான். நடனத்தில் கிளப்புகிற வேகத்தை, நடிப்பதில் மட்டும் காட்ட இன்னும் தயங்குகிறார். நாலுவரி வசனத்திற்கு மேல் போனால் அவர் தடுமாறி வானத்தைப் பார்ப்பது கண்கூடு. அதனால் ஹன்சிகாவிடம் நாம் எதிர்பார்ப்பது எதுவோ அதை மட்டுமே தருகிறார் இயக்குநர். ரேவதி கார் திருடியாக கொஞ்சமும் எதிர்பார்க்காத திடீர் என்ட்ரி. மன்சூர், மதுசூதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என வில்லன்களும், நகைச்சுவை நடிகர்களாக பவனி வருகிறார்கள். கார் டிக்கியில் வைக்கப்பட்டிருக்கும் வைர எலும்புக்கூட்டை ‘அம்மா’ என நம்பி ராஜேந்திரன் புலம்பி தவிப்பது, பதறுவது, வருந்துவது எல்லாம் ரணகள காமெடி. யோகி பாபுவை மேலும்  பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிரித்திருக்கலாம்.

குலேபகாவலி கிராமத்துக்குள்ளேயே இறுதிக்காட்சிகளில் படம் வட்டமடிப்பதை குறைத்திருக்கலாம். விவேக் - மெர்வின் இரட்டையர்களின் இசை பாடல்களில் செறிவாகி, பின்னணியில் கலகலப்பு சேர்க்கிறது. பாடல் காட்சிகளில் செட் புதுமை, அதை படமாக்க விதவிதமான கோணங்களில் அசத்தியிருப்பதில் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார் கச்சிதம். ஆதிகாலத்து திரைக்கதைதான். பார்த்து களைத்தவைதான்; ஆனாலும் இதற்கு நகைச்சுவை முலாம் பூசியதில் ‘குலேபகாவலி’யை ரசிக்க முடிகிறது.

- குங்குமம் விமர்சனக்குழு