காட் பாதர் - போதை உலகின் பேரரசன்



- யுவகிருஷ்ணா

அமெரிக்க அதிபர் ரீகன், முக்கியமான செய்தியாளர் சந்திப்பு என்று அறிவித்திருந்தார். சர்வதேச ஊடகங்கள் அவருக்கு முன்பாகக் குவிந்திருந்தன. ஃப்ளாஷ் மழைகளுக்கு நடுவே கதாநாயகனாக திடீரென்று என்ட்ரி கொடுத்த ரீகன், சட்டென்று விஷயத்துக்கு வந்தார். “தற்போதைய உலகத்தின் வில்லன் யாரென்பதை வெளிப்படுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்பு…”சொல்லிவிட்டு அதிபர் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்குமென்று சொல்வார்களே? அத்தகைய அமைதி நிலவியது. தன்னுடைய ப்ரீஃப்கேசை திறந்தார் ரீகன். பெரிய சைஸுக்கு பிரிண்ட் போடப்பட்டிருந்த ஒரு கருப்பு வெள்ளை படத்தையெடுத்து தலைக்கு மேலாகக் காட்டினார்.

ஒரு மிகப்பெரிய சூட்கேஸை பாப்லோ எஸ்கோபார் சிலரிடம் கையளிப்பது படமாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் பாப்லோவின் முகம் மிகவும் தெளிவாகவே தெரிந்தது.“அமெரிக்கா, கடந்த பத்தாண்டுகளாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது. பாப்லோ என்கிற அரக்கன்தான் உலகை போதைமயமாக்கிக் கொண்டிருக்கிறான். இவனால்தான் நம் தலைமுறை இளைஞர்கள் போதை என்கிற கொடிய பழக்கத்துக்கு இரையாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரம் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்.

பாப்லோ, நேரடியாக களமிறங்கி சரக்கு கடத்தியபோது எடுத்த படம் இது. இதைவிட வலுவான சான்று உங்களுக்கு வேண்டுமா?”போட்டோகிராஃபர்கள் சடசடவென்று படமெடுக்கத் தொடங்கினார்கள். செய்தியாளர்கள் பரபரப்பானார்கள்.“பாப்லோ தரும் சூட்கேஸில் இருப்பது போதை மருந்துதான் என்பதற்கு என்ன ஆதாரம்?” ஒரு செய்தியாளர் கேட்டதுமே, தன்னுடைய வசீகரமான புன்னகையை பதிலாகத் தந்தார் ரீகன். தன் முன்பாக நீட்டப்பட்டிருந்த மைக்கை ஒருமுறை  தட்டினார். “ஆதாரம்? கடந்த வாரம் இதே சூட்கேஸைத்தான் அமெரிக்க போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் புளோரிடா நகரில் கைப்பற்றினார்கள்.

மேலும், உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன். பாப்லோ கொடுத்த இந்த சூட்கேஸைப் பெற்றுக்கொண்டு பத்திரமாக அமெரிக்காவில் கொண்டு வந்து ஒப்படைத்தவர் வேறு யாருமல்ல…”சில வினாடிகளை மவுனத்துக்கு செலவழித்தார் அதிபர். முன்னாள் ஹாலிவுட் நடிகரல்லவா? எங்கே நிறுத்தி, எங்கே தொடரவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.“முன்னாள் சிஐஏ அதிகாரியான பேரிசீல்தான். பாப்லோவின் கும்பலுக்குள் எங்களுடைய ஆட்களை ஸ்லீப்பர்செல்களாக உள்ளே நுழைத்திருக்கிறோம். அவர்கள் வாயிலாகவே துல்லியமான ஆதாரங்களை நாங்கள் திரட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தை எடுத்தவரே பாப்லோவின் சரக்குகளை அமெரிக்காவுக்கு பலமுறை கடத்தியிருக்கும் பேரி சீல்தான்...”“சரி. ஆதாரத்தைக் காட்டி விட்டீர்கள். அடுத்தகட்ட நடவடிக்கை?”“மத்திய அமெரிக்காவில் இருந்து உலகெங்கும் போதைப் பொருட்களைக் கடத்தி வருவது பாப்லோ எஸ்கோபார். அவருக்கு ஆதரவு தரும் நாடுகள் உலகத்துக்கே எதிரிகளாக கருதப்படுவார்கள் என்பதை எச்சரிக்கிறேன். அமெரிக்கா, இனியும் சும்மா இருக்காது...” சிங்கம் போல கர்ஜித்துவிட்டு, பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார் ரீகன். உடனடியாக ஊடகங்கள் அலறத் தொடங்கின.

இதுநாள் வரை பாப்லோவை, நவீன ராபின்ஹூட்டாக கட்டமைத்துக் கொண்டிருந்த ஊடகங்கள்கூட அவரை இதுவரை உலகம் கண்டிராத கொடூர வில்லனாக தலைப்பிட்டு எழுதத்தொடங்கின. தொலைக்காட்சிகளில் பாப்லோவின் பெயருக்கு முன்பாக ‘போதை உலகின் பேரரசன்’ என்று அடைமொழி இடப்பட்டது. அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகளை பாப்லோ கடுமையாக மறுத்தார். அந்தப் படத்தில் இருப்பது, தானே அல்ல என்றார். ஆனால் - செவி மடுக்கத்தான் ஆளில்லை. சம்பிரதாயமான கிறிஸ்தவரான பாப்லோவின் தாயாருக்குத்தான் இந்த சூழல் கடுமையான மனவேதனையை ஏற்படுத்தியது.

தன்னுடைய மகனை உலகமே தூற்றும் இந்த நிலையை எண்ணி அவர் கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தார். எதையாவது செய்து ஊர் வாயை மூடலாம். தாயின் கண்ணீரை எப்படி நிறுத்துவது என்று பாப்லோவுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் அமைதியாகச் சொன்னார். “அம்மா, உங்கள் மகனைப் பற்றி டிவியிலும், பேப்பரிலும் வரும் செய்திகளை தயவுசெய்து நம்பாதீர்கள். நான் புனிதன் அல்ல. அதே நேரம் சாத்தானும் அல்ல. நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இப்போது இருக்கிறேன். அதே நேரம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு வட்டியும், முதலுமாக பதிலடி கொடுப்பேன்.

அம்மா, நான் மக்களுக்கு உதவும் பணிகளைச் செய்து வருகிறேன். அதற்கு பரிசாக என்னை மக்களுக்கு வில்லனாக போலியான ஒரு பிம்பத்தை அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார்கள்...”அமெரிக்க அதிபரின் ஆதாரத்தைத் தொடர்ந்து பல நாடுகளும் தங்களுடைய ‘Most wanted’ பட்டியலில் பாப்லோவின் பெயரைச் சேர்த்தன. தன்னுடைய எதிரியென்று அமெரிக்கா ஒரு தனிநபரைச் சுட்டிக் காட்டினால், என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கா தெரியாது? பாப்லோ எஸ்கோபாருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எந்தவித விசாரணைக்கும் இடமின்றி கைது செய்யப்பட்டார்கள்.

பாப்லோ இப்படி வெளிப்படையாகப் போட்டுக் கொடுக்கப்பட்டதில், அப்போது அவர் தஞ்சமடைந்திருந்த நிகரகுவா நாட்டின் அரசியல் உள்குத்துகளுக்கும் பிரதான இடமிருந்தது. நிகரகுவா நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. எனவே, இடதுசாரி மனப்பான்மை கொண்டிருந்த அரசாங்கங்கள் மீது சேறு பூசுவதற்கு ஏதேனும் காரணங்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருந்தது. பாப்லோவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிகரகுவா நாட்டை உலக அரங்கில் அசிங்கப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிகரகுவா அரசுக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்த புரட்சிப்படையினர் கச்சிதமாக அமெரிக்க அரசுக்கு செய்து கொடுத்திருந்தார்கள். தனக்கு தஞ்சம் கொடுத்தவர்களுக்கு தன்னால் தர்மசங்கடம் என்பதை பாப்லோவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.“அமெரிக்காதானே? பார்த்துக்கலாம்!” என்று பெருந்தன்மையாக நிகரகுவாவின் அரசு சார்பாக அவருக்கு சொல்லப்பட்டாலும், அதை மறுத்தார் பாப்லோ. “நான் போரைத் தொடங்கி விட்டேன். என் தாய்நாட்டுக்குள் இருந்துகொண்டே என் எதிரிகளோடு போரிடுவேன்...” என்று கம்பீரமாக அறிவித்தார். 

தன்னை விரும்பும் கொலம்பியர்களுக்கு மத்தியில் இருப்பதுதான் தனக்கு பாதுகாப்பு என்று அவர் கருதியதில் நியாயம் இல்லாமல் இல்லை. தான் மட்டுமல்ல. தன்னுடைய சகாக்களும் கொலம்பியாவில் இருப்பதே நல்லது என்பதை உணர்ந்து, வெவ்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினார். பாப்லோவைப் போட்டுக் கொடுத்த பேரி சீல் என்ன ஆனார்? துரோகிகளுக்கு வரலாறு விதிக்கும் பரிசினைத்தான் பேரி சீல் பெற்றார்.

பாப்லோ தொடர்பான வழக்கில் அமெரிக்க விசாரணையில் முக்கியமான சாட்சியே அவர்தான். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இருக்கும் Baton rogue நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் பழியும் பாப்லோ எஸ்கோபார் மீதுதான் விழுந்தது. காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் வாழ்வாங்கு வாழ்ந்த சரித்திரம் வரலாறு நெடுகவே இல்லை.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்