கமல், சுஜாதா, மேஜிக்கல் ரியலிசம்...



- நா.கதிர்வேலன்

தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் இரா.முருகன். கவிதை, நாவல், மேஜிக்கல் ரியலிசம் என பன்முகத்தன்மையில் அவர் பங்கு அசாத்தியமான வடிவத்தில் பதிவாகியிருக்கிறது. மெலிதான நகைச்சுவையுடன், சொற்தேர்விலும் புதுமை காட்டியவர். அறிவியல் தமிழை சுஜாதாவிற்கு அடுத்தபடியாக தமிழில் கொண்டு செலுத்தியவர். சிறுபத்திரிகை பாசமும், ஜனரஞ்சக இதழ்களின் ஈர்ப்பும் உடையவர். அவரிடம் நடந்தது இந்த உரையாடல். கவிதையில் தோன்றிய முதல் பயணம் உங்களுடையது...நான் எழுதத் தொடங்கியது புதுக்கவிதைதான். அதற்கான தூண்டுதல் என் கல்லூரியில் பேராசிரியராக இருந்த கவிஞர் மீரா. ஒவ்வொரு கவிதையின் கட்டமைப்பிற்குள் போய் வந்தபிறகு இன்னும் சொல்ல வேண்டியிருந்தது.

எந்த இறுக்கமும் இல்லாமல் கொஞ்சம் ஆசுவாசமாக காலை வீசிப்போட்டு நடக்கலாமே என சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதின கதைகள் கவிதையின் நீட்சியாக இருந்தன. இரக்கமற்ற முறையில் கதைகளைத் திருத்தி செப்பனிட்டு, சிதைவுகளை வெளியேற்றியதால் நல்ல சிறுகதைகளாக எழுத முடிந்தது.  இப்பவும் வெண்பாக்கள் எழுதுகிறேன். கிரேஸி மோகன் வெண்பாவை தொடங்கி வைத்து சித்திரங்கள் முதற்கொண்டு வரைந்து எனக்கு அனுப்பி வைக்க, நானும் எழுதுவேன். அவை கமல்ஹாசனுக்குப் போகும். அதற்குப் பிறகு கு.ஞானசம்பந்தத்தை சென்றடையும். இவையெல்லாம் கவிதை இன்னும் என்னை விடவில்லை என்பதற்கான ஆதாரங்கள்.

திடீரென மேஜிக்கல் ரியலிசம் எழுத ஆரம்பித்தீர்கள்... நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிவகங்கைதான். குடும்பத்தோட வேர்கள் கேரளாவில் ஆலப்புழை பக்கம். என் குடும்பத்தில் ஒரு பகுதி இங்கேயிருந்து கிளம்பிப் போய், அங்கே சமையல் தொழில் செய்தார்கள். கொஞ்சம் பேர் புகையிலை கடை வைத்தார்கள். அந்தணர்கள் புகையிலைக் கடை வைப்பதெல்லாம் அரிதினும் அரிது. குடும்பத்தின் ஆதி அந்தம் பற்றி அறிய நினைத்தேன். ஆராய்ச்சி மாதிரி போய் நீண்டுவிட்டது. என் சுயசரிதை மாதிரி எழுத நானொன்றும் பெரிய மனிதன் அல்ல. அதை கதையாக எழுதிப் பார்க்கலாம் என ஆரம்பித்தேன்.

நூறு சிறுகதைகளும், இருபது குறு நாவல்களும், ‘மூன்று விரல்’ என்ற முதல் நாவலும் எழுதின பிறகுதான் மாந்திரீக யதார்த்தத்திற்கு வந்தேன். மரபான கதையாடலே என்றாலும் என் கதைகளில் காலத்தை ஒரு பரிமாணமாகக் கொண்டு வருவதில் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘தேர்’ கதைகளில் பாதிக்கு மேல் கதையோட்டத்தில் காலம் முன்னும் பின்னும் சதா அதிர்ந்து நகர்வதைப் பதிவு செய்திருந்தேன். மார்க்குவஸின் ‘நூற்றாண்டு காலத் தனிமை’யும் என்னுள் அதிக பாதிப்பாகி இருந்த காலமது. அரசூர் வம்சம்’, ‘விஸ்வரூபம்’ இரண்டுமே காலவெளியைக் கலைத்து முன்னும் பின்னும் நிரப்புபவை.

வாசகனின் கவனம் தேவைப்படும் இடங்கள் இருந்தன. இதை எழுதுவதில் இருந்த சிக்கல்கள் என்ன? சிக்கல் வரவில்லை. ஆயிரம் பக்கம் எழுதினாலும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துவிட்டுத்தான் புரட்ட வைக்க வேண்டும்  என்பது எதிர்பார்ப்பு. நாவல் எழுத தீர்மானித்த பிறகு கதை நிகழ்கிற காலப்பரப்பில் மூழ்கிவிடுவேன். நுண் தகவல் சேகரிக்க, கதைக்கான அவுட்லைன் உருவாகும். எங்கே, எப்போது, கதாபாத்திரங்கள், கதை இழைகள் என தீர்மானத்திற்கு வந்து ஆவணம் மாதிரி சேர்த்து தயாராகும். கதாபாத்திரங்கள் யாருக்கு யார் எப்படி உறவு என்பதும் இன்னொரு நுணுக்கமான வரைபடமாகும். துண்டு துண்டாகத் தெரிந்த என் பரம்பரையின் வேர்கள் என் நாவலுக்கு சட்டகம் அமைத்துக் கொடுத்தன.

நான் நானாக இல்லாமல் ஒரு புகையிலைக் கடைக்காரனாக, சமையல்காரனாக, கோயில் மேல்சாந்திக்காரனாக, குழந்தையாக, புருஷன் கைவிட்ட பெண்ணாக, பித்ரு ரூபமாக என எல்லாவற்றையும் புகுந்து புறப்பட்டு பங்கேற்று பார்த்திருக்கிறேன். வாய்மொழிக் கதைமரபு மட்டற்ற புனைவுகளைக் கொண்டது. இதில் கதைக்களம் எதார்த்தத்தையும் வரலாற்றையும் மையப்படுத்துகிறது. இங்குதான் எழுத்தாளன் விசேஷமானவனாக இருக்கிறான். அவனொரு அற்புதத்தை உருவாக்கிவிட்டு நம்மை புதிர்பாதையில் அழைத்துச் செல்லவேண்டும். இவை எல்லாவற்றிலும் வாசகர் கவனம் பெற்றது எனக்கு பெரும் நிறைவே.

உங்களுக்கும் கமலுக்கும் பிரத்யேகமான நட்பு நிலவுகிறது... நான் சிவகங்கையில் ரெட்டைத் தெருவில் இருந்தேன். எங்களுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கிற ஆராவமுது ஐயங்கார் வீட்டுக்கு மாதம் ஒரு தடவை கமலின் அப்பா, அம்மா வருவார்கள். அவர் கமலுக்கு நெருங்கிய உறவினர். ஒரு நாள் அம்பாஸிடர் காரில் ஒரு சிறு பையனோடு அவர்கள் சேர்ந்து வந்தார்கள். அந்தப் பையன் காரிலிருந்து சுலபத்தில் இறங்கவேயில்லை. நாங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். வெறும் மட்டையை வைத்துக்கொண்டு சுவரில் கோடு கிழித்து விளையாடுகிற கிரிக்கெட்தான். வந்த பையன் வண்டியிலிருந்து இறங்கியவுடன் தெருவே சூழந்து கொண்டது.

‘களத்தூர் கண்ணம்மா’வில் நடித்த பையன் எனச் சொன்னார்கள். எங்களுக்கு பேரிக்காய் கூட தராத தாய்மார்கள் அவனுக்கு ஆப்பிள் கொடுத்தார்கள். அவர்தான் பின்னாளில் எனக்கு கமலாக நெருக்கமானார். சுஜாதா என்னைப்பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். கமல் என்னைத் தேட நான் வெளிநாட்டில் இருந்தேன். இறுதியில் சுஜாதாவின் அஞ்சலிக்கூட்டத்தில்தான் நாங்கள் சந்தித்தோம். என்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு அழைத்து திரைக்கதை பற்றிப் பேசினார். ‘மர்மயோகி’ திரைக்கதையில் உதவியாக இருந்தேன். அதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, ‘உன்னைப்போல் ஒருவன்’ படப்பிடிப்பு துவங்கியது.

அதன் அத்தனை கதாபாத்திரங்களையும் ஒரே மனிதராக கமல் நடித்துக் காண்பித்ததெல்லாம் பெரும் அனுபவம்.. இப்பவும் எங்களை (நான், க்ரேஸி, ரமேஷ் அரவிந்த், ஞானசம்பந்தம்) கூப்பிடுவார். உவகையான பொழுதுகள் அவை. காலையில் வெண்பாவாக, மதியம் ரசித்த ஆங்கில நூலில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்வதாக, சமயத்திள் இரவில் எழுப்பி, அன்று ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தை பங்கு போட்டுக் கொள்வதாக எங்கள் நட்பு அமையும். உங்களை ‘சின்ன வாத்தியார்’ எனக் கூறும் அளவிற்கு சுஜாதாவை பொருளடக்கத்தில் பின் தொடர்ந்தீர்கள்...

சுஜாதா என்னை பாஸிட்டிவ்வாகப் பாதித்தவர். அவர் மேல் எனக்கு இருந்த பக்தி என் அறிவியல் படைப்புகளில் வெளிப்பட்டது. அறிவியலை எளிமையாக, சுவாரஸ்யமாக, பாமரரும் புரியத்தக்க அளவில் எழுத சுஜாதா தவிர வேறு மார்க்கமே கிடையாது. சுஜாதா மாதிரி எழுதுகிறான் என்ற இசையும், வசையும் எனக்குக்கிட்ட கம்ப்யூட்டர் கட்டுரைகளும், அறிவியல் புனைகதைகளும் முக்கிய காரணம். பிறகு மேஜிக்கல் ரியலிசம் என அவரைவிட்டு விலகியே நடந்தேன். முன் தலைமுறை எழுத்தை உள்வாங்கி எழுதியதாக எனது ‘அரசூர் வம்சம்’ நாவலை உதாரணம் காட்டினார். அந்தப் பெருந்தன்மையும், அன்பும் வேறு யாரிடமும் தென்பட்டதில்லை.

படங்கள் ஆ.வின்சென்ட் பால்