கோமாளி! கொண்டாடும் கோமாளி!



முகம் முழுவதும் வண்ணங்கள். தலையில் குல்லா. கையில் சின்னக் கம்பு. தொள தொளவென்ற ஆடை. கோமாளிக்குரிய எந்த அடையாளமும் இல்லாத கோமாளி ராம்ராஜ். அவர் மேடையில் தோன்றினாலே மழலைகளின் சிரிப்பொலியிலும், கைத்தட்டல் சத்தத்திலும் அரங்கம் அதிர்கிறது. அவர் அங்கும் இங்கும் நடந்தாலே போதும், குழந்தைகள் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்; உற்சாகத்தில் மிதக்கின்றனர். பேராசிரியர், நாடகக் கலைஞர் என இரு அவதாரங்களில் உலா வருகிறார். ‘‘கோத்தகிரிக்குப் பக்கத்துல உல்லதட்டிங்கிற ஒரு மலைக்கிராமம்தான் சொந்த ஊர். அங்க ஒவ்வொரு வருசமும் திருவிழா சமயத்துல நாடகம் போடுவாங்க. நைட் 10 மணிக்கு ஆரம்பிச்சா விடிய விடிய நடக்கும்.

தெருக்கூத்து மாதிரி இல்லாம முழுக்க முழுக்க ஒப்பனைகளோட, வசனங்களோட அது போகும். எந்த இடத்துலயும் சலிப்பே தட்டாது. நாடகம் முடியற வரைக்கும் யாருமே தூங்க மாட்டாங்க. சங்கரதாஸ் சுவாமிகள் போன்றவங்க எப்படி புராணக் கதைகளை நாடகமா நிகழ்த்துனாங்களோ, அதேமாதிரி சில புராணக் கதைகளையும் எங்க மக்கள் நாடகமா போட்ருக்காங்க. வெறுமனே புராணக் கதையா இல்லாம படுகா மொழி பேசுற மக்களோட சமூகப் பிரச்னைகளையும் அது பேசும். சின்ன வயசுல இருந்தே அந்த நாடகங்களைப் பாத்து வளர்ந்தேன். அதனால இயல்பாவே நாடகமும் நடிப்பும் எனக்குள்ள புகுந்துகிச்சு.

கோவைல இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சேன். அங்கதான் நவீன நாடகங்களோட அறிமுகம் கிடைச்சது. எங்க நாடகம் போட்டாலும் தேடித் தேடிப் போய் பார்ப்பேன். பயிற்சிப் பட்டறைகள்ல உடல்மொழியைக் கத்துக்கிட்டேன். அப்புறம் முருக பூபதி அண்ணன் மூலமா நாடகத்தைப் பத்தி நெறைய தெரிஞ்சுக்கிட்டேன். இப்படித்தான் நாடகம் என்னோட வாழ்க்கையில நுழைஞ்சு அதுவே வாழ்க்கையா மாறிப்போச்சு...’’ கைவிரல்கள் நடனமாட, மெல்லிய புன்சிரிப்புடன் தன்னைப் பற்றிச் சொல்கிறார் ராம்ராஜ். இவரின் தாய்மொழி படுகா. கல்லூரியில் படிக்கும்போதே முழு இரவு நடக்கக் கூடிய நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்போது கோவை பி.எஸ்.ஜி., கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் (தமிழ்த்துறை) பணியாற்றி வருகிறார். குழுவில் இருக்கும் நாடக நடிகர்கள் எல்லோருமே இவரிடம் பாடம் பயிலும் மாணவ, மாணவிகள்தான்.‘‘ஆரம்பத்துல வீதி நாடகங்கள்லதான் ஈடுபட்டேன். மக்கள் கூடுற இடம்தான் எங்க மேடை. சமூகத்துல என்ன நடந்தாலும் அது தொடர்பா மாணவர்களை வைச்சு நாடகம் போட்ருவேன். கொழந்தைககிட்ட நாடகம் நிகழ்த்த வாய்ப்பு கிடைச்சது. நான் இயங்க வேண்டிய வெளி அவங்க மத்திலதான்னு கொழந்தைகளே எனக்கு புரிய வைச்சாங்க. அவங்களை நோக்கி அதிகமா பயணிக்க ஆரம்பிச்சேன். கொழந்தைகளும் என்னை ஒரு கோமாளியா, நண்பனா ஏத்துக்கிட்டாங்க.

இன்னைக்கு நான் கோமாளியா இருக்கிறேன்னா அதுக்கு முழுக் காரணமும் காரமடன்தான். உல்லதட்டியோட ஆஸ்தான கோமாளினு அவரைச் சொல்லலாம். அவர் இறந்து ரெண்டு வருஷங்களாகுது. அதுவரைக்கும் எங்க ஊர்ல அவர்தான் கோமாளி. எல்லா கொழந்தைகளுக்கும் அவரைப் பிடிக்கும். நாடகம் நடந்துட்டு இருக்கும்போது ரெண்டு மூணு முறை இடையில வந்து ஆடுவாரு, பாடுவாரு. உடம்புல இலையெல்லாம் கட்டிட்டு வந்துடுவாரு. அவர் வந்தா ஊரே குதூகலமா இருக்கும். அப்படி ஒரு உடல்மொழியை வேற கோமாளிகிட்ட நான் பாத்ததே இல்ல. அவர் நடந்தாலே சிரிப்பாங்க. அவரோட உடம்பு பூரா ஆடும். வசனமே பேச மாட்டார்.

அவர்தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவரோட உடல்மொழியை அப்பப்ப பயன்படுத்துவது உண்டு...’’ நினைவுகளை மீட்டிப்பார்த்த ராம்ராஜ், இமையத்தின் ‘பெத்தவன்’, கி.ராஜநாராயணனின் ‘நாற்காலி’ உள்ளிட்ட கதைகளையும், தமிழச்சி தங்கபாண்டியனின் சில கவிதைகளையும் நாடகமாக்கியிருக்கிறார். குழந்தைகள் முன் நாடகத்தை அரங்கேற்றும்போது தன்னுடன் சேர்ந்து அவர்களையும் நடிக்க வைக்கிறார். பாட வைக்கிறார். ஆட வைக்கிறார். ‘‘சூழல்தான் நாடகத்துக்கான கதையை உருவாக்குது. கொழந்தைகளை கதைக்குள்ள இழுக்கும்போது அவங்க கேள்வி மேல கேள்வி கேட்பாங்க. அதுக்கு நாம பதில் சொல்ல, வசனங்கள் புதுசு புதுசா முளைக்கும்.

நாம சொல்ல நினைச்ச கதையை விட்டுட்டு வேற ஒரு கதையா அது பரிணமிக்கும். அது எங்கயோ போய் முடியும். ரொம்ப பிரமாதமா இருக்கும். உண்மைல அந்த கதைகள் நிறைவுறாம தொடர்ந்திட்டே இருக்கும். நேரமில்லைங்கிற ஒரே காரணத்துல நாடகத்தை நிறுத்த வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு ‘நட்சத்திரங்கள் பறிப்போம்’னு ஒரு கதை. இதை களத்துலயே கொழந்தைகளோட சேர்ந்து உருவாக்கினேன். எல்லா கொழந்தைகளும் என் கூட வானத்துக்கு குதிரைல பயணிப்பாங்க. பாதி வழில மேகத்துகிட்ட நின்னுட்டு மழை பொழிய வைப்பாங்க.

வானத்துக்குப் போன பிறகு அங்க இருப்பவங்களா நடிப்பாங்க, கீழே இருக்கறவங்க மழை பெய்ற போது எப்படி ஓடுவாங்களோ, அதுவாவும் அவங்க மாறுவாங்க. ஒரே நேரத்துல பூமியிலும் இருப்பாங்க, வானத்திலும் மிதப்பாங்க. மேகத்த தாண்டி நட்சத்திரக் கூட்டங்களுக்கும் போவாங்க. எல்லோரும் ஒண்ணு சேர்ந்து வலையைப் போட்டு நட்சத்திரங்களை இழுப்பாங்க. அப்புறம் அந்த நட்சத்திரங்களை எடுத்துட்டு குதிரையில பூமிக்குக் கொண்டு வருவாங்க. இப்படி அந்த கதை போகும்...’’ குழந்தைகளுடனான அனுபவத்தை பகிர்ந்துகொண்ட ராம்ராஜ், நாடகம் நிகழ்த்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவையிலிருக்கும் அனாதை இல்லம், உடல் ஊனமுற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளையும் நாடகம் வாயிலாக மகிழ்வூட்டுகிறார்.‘என் மாணவர்கள்தான் என் பலம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்கூட பயணிக்கிறாங்க. நாடகத்துல நடிப்பதால அவங்களுக்குள்ள நிறைய மாற்றங்கள் நிகழுது. தன்னை கலைஞனா உணரும்போது அவனுக்குனு பொறுப்பு வருது. மாற்றுச்சிந்தனையோட இயங்குறான். நிறைய பெண் கொழந்தைகளும் ஆர்வத்தோட நடிக்க வர்றாங்க. சமூகத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிறாங்க. இதனால மாணவர்களை மட்டுமே வைச்சு நாடகம் செய்றேன்.

நிறைய நாடக நூல்களை எழுதி, அதை நிகழ்த்தணும். கொழந்தைகளுக்காக நிகழ்த்த வேண்டிய கதைகள் தமிழ்ல நிறைய இருக்கு. அதையெல்லாம் நாடகமாக்கணும். அதுல கொழந்தைகளையும் நடிக்க வைக்கணும். நாடகம் மூலமா நாம சொல்றதை கொழந்தைகள் சுலபமா உள்வாங்கிக்கிறாங்க. ரொம்ப கவனமா பார்க்கறாங்க, நாடகத்தோட ஒன்றிப்போறாங்க. பேசாத கொழந்தைகள் கூட பேச ஆரம்பிக்கறாங்க. அவங்களுக்காக நிறைய வேலை செய்யணும். அதுவும் செலவில்லாம பண்ணணும்...’’ நெகிழ்கிற இந்தக் கோமாளியின் கனவு ‘‘கொழந்தைகளோட சிரிப்புச் சத்தம் என் காதுல எப்பவும் கேட்டுட்டே இருக்கணும்..!’’ என்பதே.

இப்ப நல்லா படிக்கறேன்!
‘‘நாடகத்துல நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் நாடகம்னா என்னனு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு முன்னாடி வசனம் பேசறதுதான் நாடகம்னு நினைச்சிட்டு இருந்தேன். நடிக்கிறது மூலமா நம்ம எமோஷனை மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியுது. ராம்ராஜ் சார் சமூக விழிப்புணர்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால சமூகத்துல என்ன நடக்குது, என்ன மாதிரியான பிரச்னைகள் போயிட்டு இருக்குதுனு தெரிஞ்சுக்கறேன். விதவிதமான மனுசங்களைப் பாக்குறேன்.

புதுசு புதுசா அனுபவங்கள் கிடைக்குது. என் எல்லைகள் வரிவடையுது. முன்னவிட இப்ப நல்லா படிக்கவும் முடியுது. நடிக்கறதுக்காக சில பயிற்சி களைச் செய்வோம். அதனால உடல் ரீதியாவும், மன ரீதியாவும் வலிமையடையறேன். தனிப்பட்ட முறையிலும் எனக்குள்ள நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. ரொம்பவே பாசிட்டிவ் எனர்ஜியோட இருக்கேன்...’’

- அபிநயா, எம்.எஸ்சி
இரண்டாம் வருடம், பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி, கோவை.