இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



- பா.ராகவன் 30

என் நண்பர் ஒருவர் சர்க்கரை நோயில் இருந்து விடுபட விரும்பி பேலியோவுக்கு வந்தார். சர்க்கரை நோய்தான் அவரது பிரச்னையே தவிர, எடை அல்ல. அதாவது அவர் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில் இருப்பவர். குண்டு கிடையாது. தொப்பை கிடையாது. நீரிழிவு மட்டும்தான் சிக்கல். அவரை ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லி, பேலியோவில் இழுத்துப் போட்டேன். ஆரம்பித்த ஏழெட்டு தினங்களில் அவரது ரத்த சர்க்கரை அளவு சீராகக் குறைய ஆரம்பித்து வெகு விரைவில் சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை முற்றிலும் நிறுத்திவிட்டார். அவருக்கும் சந்தோஷம், அவரது மனைவிக்கும் இது பரம சந்தோஷம்.

ஆனால், என்னவாயிற்று என்றால் நீரிழிவில் இருந்து விடுபட்டதோடுகூட அவரது எடையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டிருந்தது. பேலியோவில் எடைக்குறைப்பு இல்லாமல் இருக்காது என்பதுதான் காரணம். நண்பர் ஒருநாள் என்னை போனில் அழைத்தார். சர்க்கரை வியாதி மருந்துகளில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால், அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டேனே, மறுபடியும் எப்படி நான் இழந்த எடையைத் திரும்பப் பெறுவது என்று கேட்டார். நான் அவருக்கு இரண்டு உபாயங்கள் சொன்னேன். வாரம் இரண்டு நாள் உருளைக்கிழங்கு சமைத்துச் சாப்பிடுவது முதலாவது. இன்னும் இரண்டு நாள் ஆப்பிள் பழம் சாப்பிடுவது.

கவனிக்கவும். உருளைக்கிழங்கும் பேலியோவில் கிடையாது; ஆப்பிளும் பேலியோவில் கிடையாது. இரண்டுமே எக்கச்சக்கமாக கார்ப் கொண்டவை. அதிலும் ஆப்பிளில் நேரடி சர்க்கரையே உண்டு. இருந்தாலும் அவரை இரண்டு நாள் மட்டும் இதனைச் செய்யச் சொன்னேன். எண்ணி இரு வாரங்களில் அவரது எடை இரண்டரைக் கிலோ ஏறியது. இன்னும் இரு வாரங்கள் இதையே செய்தார். மேலும் ஒன்றரைக் கிலோ ஏறியது. இவ்வளவுதான் விஷயம். 7க்கு மேல் இருந்த அவரது HbA1C அளவு 5.3க்குக் குறைந்து வந்திருந்ததால், இந்த ஆப்பிள் உபயத்தில் மீண்டும் சற்று ஏறும் என்று எனக்குத் தெரியும்.

இருப்பினும் பெரிய அளவில் ஏறாது என்று நினைத்தேன். ஏனெனில் வாரத்துக்கு இரண்டுதானே? அப்படி மீண்டும் எகிறி அடித்தால் இருக்கவே இருக்கிறது முழுப் பேலியோ. அவர் கேட்ட எடை அதிகரிப்புக்கு இது உதவுகிறதா என்று பார்க்கவே இந்த உபாயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே இன்னொன்றையும் சேர்த்துச் சொன்னேன், ‘நீங்கள் ஒரு பரிசோதனை எலி. ஏடாகூடம் ஏதேனும் நிகழ்ந்தாலும் பயப்படாமல் சமாளிக்கத் தயாராக வேண்டும்...’அவர் ஒப்புக்கொண்டதால் இதனைச் செய்து பார்க்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த எடை ஏற்றம் நிகழவும் செய்தது.

இது ஒரு வரியில் புரியவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். வாரத்துக்கு இரண்டு நாள் உருளைக்கிழங்கு பொரியலும் இரண்டு ஆப்பிள் பழங்களும் சாப்பிட்டால் போதும். ஜல்லென்று எடை ஏறும். எனவே, எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இவற்றின் பக்கம் திரும்பாதிருப்பது அவசியம் என்பது இதன் உள்ளுறை பொருள். நிற்க. இதனைச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. பேலியோ ஆரம்பித்து போதிய எடைக்குறைப்பு நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நூறு கிலோவில் இருந்து எழுபத்தி ஐந்து கிலோவுக்கு வந்துவிட்டீர்கள். இதற்குமேல் எடைக்குறைப்பு வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், குறைந்த எடை மீண்டும் ஏறிவிடவும் கூடாது.

அதே சமயம் இதுநாள் வரை உண்ணாதிருந்தவற்றை அவ்வப்போதாவது உண்டு பார்த்தால் என்ன என்கிற நப்பாசை. யாருக்குத்தான் இராது? ஒன்றும் தப்பில்லை. ஆனால், எதைச் சாப்பிடுவது, எதை தொடவே கூடாது என்று ஒரு கணக்கு இருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நீங்கள் நூறு கிலோவுக்கு மேல் எடை இருந்து இறங்கியிருந்தாலோ, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து மாத்திரை சாப்பிட்டு, பேலியோவுக்குப் பின் அதை நிறுத்தியிருந்தாலோ - உங்களுக்கு வேறு வழியே இல்லை. வாழ்நாள் முழுதும் பேலியோ உணவு முறையிலேயேதான் இருந்தாக வேண்டும்.

அப்போதுதான் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும், உடம்பு எடையும் ஏறாதிருக்கும். ஒரு எண்பது, தொண்ணூறு கிலோக்கள் வரை ஏறி, அங்கிருந்து எழுபது, எழுபத்தி ஐந்துக்கு இறங்கியிருந்தீர்கள் என்றால் கொஞ்சம் எல்லை தாண்டிச் செல்லலாம். இதைத்தான் ‘மெயிண்டனன்ஸ் பேலியோ’ என்பார்கள். அதாவது, இறங்கி வந்த எடையை அதே இடத்தில் நிறுத்தி வைப்பது. அதனோடு கூடச் சற்று பழைய உணவுகளையும் அவ்வப்போது ருசி பார்ப்பது. உதாரணமாக, மெயிண்டனன்ஸ் பேலியோவில் நீங்கள் சுமார் நாற்பது கிராம் வரை கைக்குத்தல் அரிசி சேர்த்துக்கொள்ள முடியும். கேரளத்து குண்டு அரிசி சேர்க்கலாம். இந்த நாற்பது கிராம் அரிசி என்பது தாராளமாக ஒரு கப் சாதமாகும்.

அதில் உங்கள் இஷ்டத்துக்கு சாம்பாரோ ரசமோ கலந்து அடிக்கலாம். ஆனால், கஞ்சி வடித்த சாதமாக இருக்கவேண்டும். குக்கர் சாதம் கூடாது. அடுத்தபடியாக, பழங்கள். மெயிண்டனன்ஸ் டயட்டில் நீங்கள் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடலாம். சிறியதாக ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டாலும் தப்பில்லை. சற்றே காய்வாட்டாகப் பப்பாளி சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடலாம். ஆஹா பழம் சாப்பிடலாம் என்றால் நேற்று வரை காயாகக் கடிக்கவே முடியாத கொய்யாவைத் தின்று கொண்டிருந்தோமே, இன்று கொய்யாப்பழம் சாப்பிடலாமா என்றால் கூடாது!

மா, பலா, வாழை, கொய்யாவெல்லாம் அதிக இனிப்பு கொண்ட பழ வகைகள். இவை என்றுமே ஆபத்து. சர்க்கரை வியாதி இருந்து சரியாகியிருக்குமானால் கண்டிப்பாக இந்தப் பழங்களும் கூடாது. ஒருவேளை மேற்சொன்ன நாற்பது கிராம் அரிசியுடன் வழக்கமான குழம்பு ரச சாப்பாடு சாப்பிட்டாலும் மற்ற இரு வேளைகளிலும் பேலியோ உணவுகளான பாதாம், பனீர் போன்றவற்றையே தொடர வேண்டும். இப்படிச் செய்தால் எடை மீண்டும் ஏறாதிருக்கும். அதே சமயம் ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். என்னைக் கேட்டால், மெயிண்டனன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை 20:4 வாரியர் விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

என்ன டயட்டில் இருந்தாலும் கண்டிப்பாகத் தவிர்த்தே தீரவேண்டியவை என்று சிலது இருக்கின்றன. அதில் முக்கியமானது கோதுமை. சப்பாத்தி, பூரி தொடங்கி கோதுமையின் சகலபாடி வஸ்து வான மைதாவை மூலப்பொருளாகக் கொண்ட பரோட்டா வரை வடக்கில் இருந்து வந்த எதையும் திரும்பிக்கூடப் பார்க்காதீர்கள். பிட்சா, பர்கரெல்லாம் எந்நாளும் வேண்டாம். தப்பித்தவறி ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுவிடுகிறீர்கள் என்றால், மறக்காமல் எட்டு கிலோ மீட்டர் நடந்துவிடுங்கள். முடிந்தது ஜோலி. ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நமது முன்னோர் இப்படியெல்லாம் கணக்குப் போட்டா சாப்பிட்டிருப்பார்கள்? அரிசிச் சோறுதான். கிழங்குகள் இருக்கும், இனிப்பு இருக்கும், எல்லாம்தான் இருக்கும். ஆனாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். நமக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை? கொஞ்சம் தின்றாலே ஏன் உடல் பருத்துவிடுகிறது? என்றால், இன்றைய நமது வாழ்க்கை முறைதான் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை நாம் உட்கார்ந்து செலவழிக்கிறோம். உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது. நான் ஒரு நாளில் குறைந்தது பதினெட்டு மணி நேரங்கள் உட்கார்ந்து வேலை செய்கிறேன். முதுகுவலி, இடுப்பு வலி, முழங்கால் வலி என்று மூலைக்கு மூலை வலியுற்பத்தி நிகழ்கிறது.

தின்பது, உட்கார்ந்து வேலை செய்வது, படுத்துத் தூங்குவது என்று இருந்தால் உடம்பு பெருக்காமல் என்ன செய்யும்? அதற்குத்தான் பேலியோ. நமது முன்னோர்கள் தின்ற அளவுக்கு உழைக்கவும் செய்ததால் (குறைந்தது அந்நாள்களில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் செல்ல நடந்தாவது போவார்கள். ஆட்டோ ஏது? கால் டாக்சி ஏது?) ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆக, உடலுழைப்பு குறைந்துவிட்டதால்தான் நமக்கு எடைப் பிரச்னை, பிற வியாதிகளின் பிரச்னைகள். என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், ஆனால் ஒரு நாளைக்குக் குறைந்தது பதினையாயிரம் ஸ்டெப்ஸ் நடந்துவிடுகிறேன் என்று சொல்லுங்கள்! உங்களுக்கு பேலியோவே வேண்டாம்!

(தொடரும்)