ஊஞ்சல் தேநீர்
- யுகபாரதி 60
தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது நீங்கள். எனக்கு எதற்கு காசோலை...” என்று சின்னக் குத்தூசி அக்காசோலையைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். விடாப்பிடியாக “எனக்குத் தெரியாது. அலுவலகத்தில் கொடுத்தார்கள். நான் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்...” எனக்கூறி அந்நிருபர் மேசையில் காசோலையை வைத்திருக்கிறார்.
அப்போதுதான் தனக்கு வங்கிக்கணக்கே இல்லையென்னும் தகவலை சின்னக்குத்தூசி தெரிவிக்கிறார். அதன்பின் அக்காசோலை, பணமாகத் திரும்பி வந்திருக்கிறது. அதையும் அவர் பெற்றுக்கொள்ளாமல், பத்திரிகை வாயிலாக உதவி கேட்டிருந்த ஒரு சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு அப்பணத்தை அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். உதவி செய்வதே இதயத்திற்கான சிறந்த சிகிச்சையென சின்னக் குத்தூசிக்குச் சொல்லியா தர வேண்டும்? இளம் பத்திரிகையாளர்களை வாஞ்சையுடன் வரவேற்கும் அவர், ஒருபோதும் தம்முடைய கருத்துகளை அவர்களுக்குள் திணித்ததில்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை முடிந்தவரை தெளிவுபடுத்தும் பணியையே செய்திருக்கிறார்.
ஒருமுறை ‘குங்குமம்’ பத்திரிகையில் ‘எவர்கிரீன் கலைஞர்’ என்னும் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை எழுதிய பத்திரிகையாளர் எம்.பி.உதயசூரியன் இப்போது ‘புதிய தலைமுறை’ வார இதழில் ஆசிரியராயிருக்கிறார். யோகா பயிற்சி அமைப்பு நடத்திய அவ்விழாவில், கலைஞர் பேசிய பேச்சை முன்வைத்தே அக்கட்டுரை எழுதப்பட்டது. ‘‘82 வயதிலும் தாம் இளைஞராக இருக்கக் காரணம், யோகா பயிற்சியே...’’ என்று கலைஞர் கூறியதைத்தான் உதயசூரியன் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வாசித்த சின்னக்குத்தூசி, “தம்பி நம்ம உதயசூரியன்...” என கலைஞரிடம் உதயசூரியனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
“இவருடைய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்கள்தானே...” என சின்னக்குத்தூசி கேட்க, “நம்ம சின்னப் பையனை எனக்குத் தெரியாதா..?” என கலைஞர் சிலேடையைச் சிதறவிட்டிருக்கிறார். கலைஞர் ‘சின்ன’ப் பையன் என்றது, உதயசூரியன் நம்முடைய சின்னம் என்னும் அர்த்தத்தில். ஒத்த சிந்தனையுடைய இரண்டு ஆளுமைகள் சிலேடையிலும் வார்த்தை விளையாட்டிலிலும் ஈடுபடுவதில்தான் இலக்கியத்தின் நயமிருக்கிறதோ? திராவிட இயக்கத்தவர்கள் வார்த்தை விளையாட்டுகளில் விருப்பமுடையவர்களே ஆனாலும், அவர்களுக்கும் சில நேரங்களில் வார்த்தைகளில் சந்தேகம் ஏற்படுவது உண்டு.
அப்படி ஒரு சந்தேகம் சின்னக்குத்தூசிக்கு வந்திருக்கிறது. ‘தூமை’, ‘லோலாயி’ ஆகிய வார்த்தைகள் சென்னையில் மட்டுமே புழக்கத்திலுள்ளன. குழாயடிச் சண்டையில் சர்வ சாதாரணமாக பெண்கள் பிரயோகிக்கும் அவ்வார்த்தைகள் எந்த மொழியிலிருந்து வந்திருக்கும் என்னும் ஐயம் அவருக்கு. பல மொழி பேசக்கூடியவர்கள் கலந்திருக்கும் சென்னையின் மொழி வித்தியாசமான ஓசையைக் கொண்டது. தமிழே ஆனாலும், அதை தமிழ்போல் உச்சரிக்காததால் விநோதமான அர்த்தங்களை அச்சொற்கள் கொண்டுவிடுகின்றன. ஆகவே, ‘‘அவ்வார்த்தைகள் தமிழ்தானா..?’’ என்னும் சந்தேகத்தை திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசிடம் கேட்டிருக்கிறார். “மாதா மாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான் வளர்ந்து ரூபம் ஆனது...” என்று சிவவாக்கியர் பயன்படுத்தியிருப்பதைச் சான்றாகக் காட்டி அது தமிழ்தான் என்று திருநாவுக்கரசு பதிலளித்திருக்கிறார்.
அத்துடன், ‘‘‘ஸ்திரீலோலன்’ என்னும் சொல்லின் பெண்பால் விகுதியே ‘லோலாயி...’’’ என்றும் தெரிவித்திருக்கிறார். சொற்களின் வேர் எதுவாயிருந்தாலும், அது தமிழோடு கலந்துவிட்டதால் அதை என்ன பொருளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் சின்னக்குத்தூசிக்கு அக்கறை இருந்திருக்கிறது. சமஸ்கிருதக் கலப்பையும் ஆங்கி லக் கலப்பையும் வெறுத்தவர் இல்லை என்றாலும் அதை தெரிந்துகொள்வதில் அளவுக்கு அதிகமான ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார். சின்னக்குத்தூசியின் அறையை ‘ஞானானந்தர் மடம்’ என்று விளித்த க.திருநாவுக்கரசு, நீதிக்கட்சி வரலாற்றையும் திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றையும் எழுதியவர்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் பலருடனும் சின்னக்குத்தூசிக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும், அந்த தொடர்பைப் பயன்படுத்தி அவர் தனக்காக எதையுமே சாதித்துக் கொண்டதில்லை. அன்றைக்குத் தமிழக முதல்வராயிருந்த கலைஞருடன் தினசரி ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவதாக எத்தனையோ பத்திரிகையாளர்களும் கவியரசர்களும் மேடையில் பெருமையடித்திருக்கிறார்கள்.‘நட்டுவைத்த வேல்போல் பொட்டுவைத்த’ என்றும், ‘கூலிங்கிளாஸ் போட்ட குறுந்தொகை’ என்றும் புகழ்ந்து, கலைஞருக்கும் தமக்குமுள்ள நெருக்கத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.
ஆனால், அவர் நிழலாகவே இருந்துவந்த சின்னக்குத்தூசி, ஓர் இடத்தில்கூட அப்படியான பெருமிதச் சொற்களை வெளிப்படுத்தியதில்லை. ‘முரசொலி’யிலிருந்து வெளிவந்திருந்த சமயத்தில், கவிஞர் இளையபாரதி தம் கவிதை நூலை கலைஞர் கையால்வெளியிட விரும்பி சின்னக் குத்தூசியை அணுகியிருக்கிறார். அப்பொழுதுகூட அவர் அக்கோரிக்கையை ஆற்காடு வீராசாமி மூலமே நிறைவேற்றித் தந்திருக்கிறார். தன்னை எப்போதோ தலையங்கத்திற்காக கோபித்துக்கொண்ட கலைஞரைச் சந்திக்க விரும்பாமல் அல்ல. தன்னைச் சந்திக்க நேர்ந்தால் வேலையில்லாமல் இருக்கும் தன் குறித்த சங்கடம் கலைஞருக்கு ஏற்படுமே என்றுதான்.
அதே போன்றதொரு நாகரிகத்தை கலைஞரும் சின்னக்குத்தூசியிடம் கடைப்பிடித்திருக்கிறார். ஒருமுறை பெரியாரின் கடவுள் கொள்கையில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞருக்கும் இடையே பூசல் வெடித்திருக்கிறது. இரண்டு பேருடனும் இணைக்கமாக இருந்த சின்னக் குத்தூசி, அது சம்பந்தமாக வீரமணியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பேசிய தகவலை கலைஞரிடமும் தெரிவித்திருக்கிறார். தன்னை விமர்சிக்கும் வீரமணியைச் சந்தித்திருக்கிறாரே எனக் கருதாத கலைஞர், குறிப்பிட்ட விஷயத்திற்கான மறுப்பை தாமே எழுதுவதாகச் சொல்லி வீரமணிக்கும் சின்னக் குத்தூசிக்கும் இருந்த நட்பைக் காப்பாற்றியிருக்கிறார்.
நண்பர்களுக்கு இடையே தன்னால் சிக்கல் வந்துவிடக் கூடாதென எண்ணிய விஷயத்தில் ‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் போட்டி போட்டுக் கொண்டிருந்திருக்கிறது. ‘விடுதலை’ திராவிடக் கழக நாளேடு என்பதையும் ‘முரசொலி’ தி.மு.க.வின் நாளேடு என்பதையும் சொல்ல வேண்டியதில்லையே. ஆற்காடு வீராசாமி நடத்தி வந்த ‘எதிரொலி’யிலும் சின்னக்குத்தூசி சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ‘எதிரொலி’யை நடத்திவந்த வீராசாமியின் சிரமங்கள் சின்னக் குத்தூசிக்குத் தெரியாமலில்லை. கடனில் எதிரொலித்துக் கொண்டிருந்த அப்பத்திரிகையில், சம்பளம் வாங்காமல் பல மாதங்கள் உருண்டோடி இருக்கின்றன.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சின்னக் குத்தூசியின் தந்தை மரணமடைந்து விடுகிறார். ஊருக்குச் செல்லவே பணமில்லை என்னும் நிலையில், எங்கெங்கோ இரண்டாயிரம் ரூபாயைப் புரட்டி வீராசாமி தந்திருக்கிறார். கைக்கு வந்த இரண்டாயிரம் ரூபாயில் தந்தைக்கான இறுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்புகிறார் சின்னக் குத்தூசி. ஆனால், அவருக்கு முன்பாகவே அவருடைய திருவாரூர் நண்பர்கள் இறுதிக் காரியத்திற்குத் தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். ஒரு மகனாக அவர் செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறாதவாறு அவரைத் தாங்கிப்பிடித்த நண்பர்களும் அவரைப் போலவே இருந்திருக்கிறார்கள். நாமெப்படியோ அப்படியே நமக்கு நண்பர்கள் வாய்ப்பார்கள் என்பது பொய்யில்லை.
வெறும் இரண்டாயிரத்தை மட்டுமே கொடுத்தனுப்பி இருக்கிறோமே, அது போதாதே என வீராசாமி ஒருபுறம் வருந்திக் கொண்டிருக்க, சின்னக்குத்தூசியோ எல்லா செலவுகளையும் நண்பர்களே பார்த்துக்கொண்டார்களென கொண்டுபோன இரண்டாயிரத்தை மறுபடியும் அவரிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தில், நின்றுபோக இருந்த ‘எதிரொலி’மீண்டும் வந்திருக்கிறது. தேவைக்குக்கூட பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவழிக்கும் குணம் சின்னக் குத்தூசிக்கு இருந்திருக்கிறது. அறம் சார்ந்து வாழ்வதென முடிவெடுத்துவிட்ட ஒருவர், எந்த இக்கட்டிலும் அதிலிருந்து வழுவுவதில்லை. கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பார்த்தால்கூட சின்னக் குத்தூசி, அண்ணாந்து பார்க்கத்தக்க உயரத்தை எட்டிவிடுகிறார்.
ஏற்றுக்கொண்ட கொள்கையிலும் வகுத்துக்கொண்ட வழியிலும் அடிபிறழாமல் நடக்க, தன்னைத்தானே வருத்திக் கொண்டிருக்கிறார். பல பத்திரிகைகள் அதிக சம்பளம் கொடுத்து, அவரை சுவீகரிக்க நினைத்திருக்கின்றன. வறிய வாழ்விலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவருக்குக் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அவர், காகிதப் புலியாக மட்டுமில்லாமல், தேவையேற்படும் போதெல்லாம் களப் போராளியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த திருவாரூரைச் சேர்ந்தவர் என்பதால் இளவயதிலிருந்தே இசை ஒன்றுதான் அவரை ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.
தமிழிசையிலும் திரைப்படப் பாடல்களிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை பத்திரிகையாளர் கோலப்பன், சின்னக்குத்தூசி நினைவு மலரில் எழுதியிருக்கிறார். ஒருகாலத்தில் கோலோச்சிய நாகசுர, தவில் வித்வான்களின் மேதமைகள் அவருக்குத் தெரிந்திருக்கிறது. மதுரை மணி, ஆலத்தூர் சகோதரர்கள், குளிக்கரை பிச்சையப்பா, வேதாரண்யம் வேதமூர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாவடுதுறை ராஜரத்னம் என பலரும் அவருடைய இசை ரசனைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தையும் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற திருத்தொண்டத் தொகையையும் அகார உகாரங்களுடன் அச்சரம் பிசகாமல் கோலப்பனுக்குச் சின்னக் குத்தூசி பாடிக் காட்டியிருக்கிறார்.
“‘மாதர்ப்பிறை கண்ணியானை...’ என்னும் பாடலில் வரும், ‘கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறி யாதன யாவும் கண்டேன்...’ என்னும் வரியை மெய்மறந்து சின்னக்குத்தூசி பாடுகையில் ஓடிப்போய் அவருடைய கால்களை கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது...’’ எனக் கோலப்பன் வியந்திருக்கிறார். ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் ‘சொன்னதை செய்திட சாகசமா...’ என்னும் பாடலை அவ்வப்போது விரும்பிக்கேட்கும் சின்னக்குத்தூசிக்கு, அதிகம் பிடித்த பாடகர் என்றால் மதுரை சோமுவே. அவரை அடுத்து மகாராஜபுரம் சந்தானம். இசையை நுட்பத்துடன் ரசிக்கத் தெரிந்த சின்னக்குத்தூசிக்கு, கர்நாடக இசையைக் காட்டிலும் தமிழிசையே முக்கியமாகப்பட்டிருக்கிறது.
‘‘வருடந்தோறும் திருவையாற்றில் நடக்கும் தியாகய்யர் உற்சவத்தைக் கொண்டாடக் கூடிய இசைவாணர்கள், தமிழிசையை வளர்த்தெடுத்த முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயரைக் கொண்டாடுவதில்லையே, ஏன்..?’’ என ஒரு கட்டுரையில் வேதனைப்பட்டிருக்கிறார். திருவாரூரில் அவதரித்த மூம்மூர்த்திகளுக்கு விழா எடுப்பவர்கள், திருவாரூருக்கு அருகிலேயுள்ள சீர்காழியில் அவதரித்த தமிழிசை மும்மணிகளைப் புறக்கணிப்பதற்குப் பின்னே உள்ள அரசியலை அக்கட்டுரையில் அலசியிருக்கிறார். தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை மதிக்கக்கூடியவர்கள் தமிழிசையை இன்னமுமே தீட்டாகக் கருதும் நிலையை அக்கட்டுரையில் கண்டித்தும் இருக்கிறார்.
சின்னக் குத்தூசியின் கண்டனத்திற்கு பதிலளித்த பத்திரிகையாளர் சோ, “நாத்திகத்தையும் இந்துமத எதிர்ப்பையுமே முதன்மையாகக் கொண்ட கழகங்களின் பகுத்தறிவுக்கும் சங்கீத உலக சம்பிரதாயங்களுக்கும் என்ன சம்பந்தம்...” என்று கேட்டிருக்கிறார். அத்துடன் நில்லாமல், ‘‘தமிழ் மும்மணிகள் கீர்த்தனைகளை மட்டும்தான் இயற்றியிருக்கிறார்களே தவிர, இசையமைத்துத் தரவில்லையே...’’ எனவும் கேட்டிருக்கிறார். “கீர்த்தனையை இயற்றியவர்களே மெட்டமைத்துத் தர வேண்டுமென்பது விதியென்றால், பாபநாசம் சிவனின் பாடல்கள் பல மேடைகளில் பாடப்படுகின்றனவே, அவற்றுக்கெல்லாம் பாபநாசம் சிவனா இசையமைத்தார்..?’’ என்ற சின்னக்குத்தூசியின் கேள்விக்கு சோவிடம் பதிலில்லை.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|