மீன லக்னம் குரு - சுக்கிரன் சேர்க்கை தரும் யோகங்கள்
117 கிரகங்கள் தரும் யோகங்கள்
குருவும் சுக்கிரனும் ஒன்றாக இருக்கும் அமைப்பை குரு மூடம் என்பார்கள். ‘‘அவரு எங்கேயோ இருக்க வேண்டியவரு இங்க கிடந்து திண்டாடுறாரு’’ என்பதுபோல வாழ்க்கை அமையும்.
கோழி முட்டை யோகமென்று சொல்லலாம். வெள்ளைக் கரு, மஞ்சள் கரு ஒன்றாக இருந்தாலும் ஒட்டாது. அதுபோல வாழ்க்கையில் எதிலுமே எதனோடுமே இயைந்து செயல்பட முடியாத, ஸ்திரத் தன்மை இல்லாததாக வாழ்க்கை நகர்ந்து கொண்டேயிருக்கும்.திருப்தியற்ற போக்கு இருக்கும். அடுத்தவர்களுக்காகவே வாழ்வது என்றெல்லாம் போகும்.
சகல திறமையும் இருந்தும் சரியான இடத்தில் வெளிப்படாது, தேவையற்ற இடத்தில் வெளிப்படுவதே குரு மூடமாகும். இதனால் பலபேரிடம் இவர்கள் பிழைக்கத் தெரியாத மனிதரென்று பெயரெடுப்பார்கள். மேலும், லக்னாதிபதியோடு அஷ்டமாதிபதி சேரக்கூடாது. ஏனெனில், அஷ்டம இடமானது அலைச்சலுக்குரியது.
எவ்வளவு உழைச்சாலும் வளரவே முடியலை என்று புலம்பும்படியாகும். குருவானவர் இவர்களுக்கு நல்லபடியாக உதவினாலும் சுக்கிரன் தூண்டிவிட்டு கெடுப்பார். பாதை மாறி பயணிக்கச் செய்து மாட்டிக்கொள்ள வைப்பார். அதனால், இந்த அமைப்பில் பிறந்தவர்கள் நேர்வழியைத் தவிர வேறெந்த பாதையிலுமே செல்லக்கூடாது. ஏனெனில், சுக்கிரன் ‘‘எப்போதடா இவன் சிக்குவான்’’ என்று காத்திருப்பார். காரணம் அஷ்டமாதிபதியான சுக்கிரன் அவர் வேலையைச் செவ்வனே செய்வார்.
மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குருவும் சுக்கிரனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே அஷ்டமாதிபதியான சுக்கிரனும், லக்னாதிபதியான குருவும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். இதனால் தீர்க்காயுள் யோகம் உண்டு. வகுப்பறையில் கற்றுக்கொண்டதைத் தாண்டி யோசிப்பார்கள். பணப்புழக்கமும் சரளமாக இருக்கும்.
இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் சுக்கிரனும் நின்றால் திக்குவாய் தொந்தரவு விலகும். சிலருக்கு மாறு கண் அமைப்பிருக்கும். குடும்பத்தை விட்டு அன்னிய தேசத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆரம்பக்கல்வி தடைபட்டுக் கொண்டேயிருக்கும். சின்னஞ்சிறு ஆசாபாசங்கள், காமக் குரோதங்கள் போன்றவற்றிற்கு மிக எளிதில் ஆட்படுவார்கள். வரவுக்கு மீறி செலவு செய்து சிக்கிக் கொள்வார்கள்.
மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள். யாராலும் கவனிக்கப்படாத விஷயத்தை எடுத்துச்சொல்லி புகழ் பெறுவார்கள். நான்கு பேருக்கு வழிகாட்டும் ஆசிரியர்களாக விளங்குவார்கள். எல்லா விஷயங்களையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருப்பதால் முகத்தில் ஒரு முதிர்ச்சியிருக்கும்.
நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் குரு கேந்திராதிபத்ய தோஷம் அடைகிறது. தாயாருக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு வந்தபடி இருக்கும். இருசக்கர வாகனங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் தாய் வழிச் சொத்துகள் இவருக்கு வந்து சேரும். எப்போதும் சொந்த ஊரிலிருந்து வடகிழக்கு பக்கமாக இடமோ, மனையோ வாங்கக்கூடாது.
ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் சுக்கிரனும் நின்றிருந்தால், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கணிதம், ஜோதிடம், வானவியல் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். குரு ஐந்தில் இருப்பதால் தாமதமாகவே மழலை பாக்கியம் கிட்டும். சமூகத்தில் பெரிய புத்திசாலி என்று பெயரெடுத்திருப்பார்கள். ஆனால், நாலு காசு சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். சம்பாதிக்கும் திறமை இருந்தால் சேர்த்து வைக்கும் திறமை இருக்காது.
ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் பணத்தை தண்ணீர் போன்று செலவு செய்வார்கள். இவர்கள் கடன் வாங்குவதை நிறுத்தினாலொழிய நிம்மதி கிடையாது. தவறிப்போய்க்கூட, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. விளையாட்டுக்கென ஆரம்பித்து பிறகு சிக்கிக் கொள்வார்கள்.
ஏழாம் இடமான கன்னியில் குருவும் சுக்கிரனும் இருந்தால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கப்படும். குழந்தைப் பிறப்பு தடைபட்டு தாமதமாகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, கருக்குழாயிலேயே குழந்தை வளருதல் முதலான பிரச்னைகள் இருக்கும்.
வாழ்க்கைத் துணைவர் சட்டென்று தூக்கி எறிந்து பேசுபவராக இருப்பார். தான் சொல்வதே சரியென்று நிலைநாட்டிக் கொண்டிருப்பார். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்பெல்லாம் கிடைக்கும். வைராக்கியம் குறைவதால் சிற்றின்ப விஷயங்களில் எல்லை கடந்து போவார்கள். எச்சரிக்கை தேவை. ‘களவும் கற்றும் மற’ என்கிற பழமொழிக்கேற்ப எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள். சிறியதாக ஒரு கள்ளத்தனம் இருந்து கொண்டேயிருக்கும்.
எட்டாமிடமான துலா ராசியில் குருவும் சுக்கிரனும் இடம் பெற்றிருந்தால் மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். சில பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். மிகவும் அறிவுபூர்வமாக யோசிப்பார்கள். அதுவும் மற்றவர்களுக்குத்தான் உதவும். அசையும் சொத்துகளை இவர் பேரிலும், அசையாச் சொத்துகளை மனைவியின் பேரிலும் வைத்துக்கொள்வது நல்லது.
சதா ஜோதிடம், ஆயுர்வேத மருத்துவம் என்று தீவிர ஆராய்ச்சியில் இருப்பார்கள். பிறமொழிகளைக் கற்று வைத்திருப்பார்கள். நிறைய படிப்பார்கள். ஆனால், மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும்.ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் தந்தை மிகமிக புத்திசாலியாக இருப்பார்.
இங்கு விதி மீறல்களின் நாயகனான சுக்கிரனோடு இணைவதால் தங்களின் தவறை எப்போதும் நியாயப்படுத்திப் பேசுவார்கள். மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டோ அல்லது தானே ஒன்றைத் தொடங்கியோ மற்றவர்களுக்கு உதவுவார்கள்.
கொஞ்சம் முசுட்டுத்தனமும், அசட்டுத்தனமும் இருக்கும். ஏதாவது ஒரு பிடிவாத குணம் இருந்துகொண்டேயிருக்கும். பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், எதையும் காசாக்கத் தெரியாமல் தவிப்பார்கள்.பத்தாம் இடமான தனுசில் குருவும் சுக்கிரனும் இடம் பெற்றிருந்தால் அடிக்கடி வேலையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். இவர்களிடம் பயோடேட்டாவைக் கேட்டால் பெரிய புத்தகத்தையே கையில் கொடுப்பார்கள். சமய வழிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள்.
செய்தொழிலிலும், குலத் தொழிலிலும் மிக ஈடுபாட்டோடு இருப்பார்கள். முகச் சீரமைப்பு மருத்துவர், நீர்ப் பாசனத்துறை அதிகாரி, அணை பராமரிப்புத்துறை, தமிழ்த் துறை ஆசிரியர், பத்திரிகை அலுவலகத்தில் பிழை திருத்துனர், தங்க நகைகள் தயாரிக்குமிடம், வங்கி ஊழியர், சுற்றுலாத் துறை, ரெசிடென்ஷியல் ஸ்கூலில் வார்டன், அரசாங்க ஆவணக் காப்பகம், கருவூலம், உளவியல் பேராசிரியர், ட்ரில் மாஸ்டர், மயக்க மருந்து கொடுப்பவர், குழந்தை நல சிறப்பு மருத்துவர், அரசு அச்சகம், அரசு நூலகம், தொல்லியல் துறை வணிகவியல், பொருளாதாரம், புள்ளியல் துறையில் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் போன்ற சில துறைகளில் ஈடுபட்டு சம்பாதிப்பார்கள்.
பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரங்களை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. இவர்களின் உழைப்பில் வராத ஏதேனும் சொத்து நிச்சயம் புதையல்போல் கிடைக்கும். செட்டிநாடு மற்றும் கேரளிய பாணி வீடுகளைக் கட்டுவார்கள். இவர்களின் தாயார் சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.
பன்னிரண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் சுக்கிரனும் இருந்தால் எப்போதுமே கடந்த கால துக்கங்களை நினைத்தபடியே இருப்பார்கள். காமத்திலிருந்து கடவுளுக்கு என்பதுபோல அதிக களியாட்டங்களுக்குப் பிறகு துறவற நிலைக்கு உயர்வார்கள். சூட்சும விஷயங்களைக் குறித்த தேடல் இருக்கும். செலவாளியாக இருப்பார்கள். கொஞ்சம் காது கேளாத் தன்மை இருக்கும்.
கடல் வழி வாணிகத்தால் மிகுந்த லாபத்தை அடைவார்கள்.இந்த குருவும் சுக்கிரனும் சேர்ந்த அமைப்பு என்பது விசித்திரமானது. குரு கொடுத்தால் சுக்கிரன் கெடுக்கும். சுக்கிரன் கொடுத்தால் குரு கெடுக்கும். இதனால் உள்ளுக்குள் அலைக்கழிக்கப்படுவார்கள். உள்ளுக்குள் ஒரு போராட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.
இந்த அமைப்பிலுள்ளவர்கள் திருமலைவையாவூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஆதிசேஷன் குடையாய் இருக்க அவனது குளிர்நிழலில் திருமால் வெங்கடேசனாக, நின்றபடி அருளாட்சி புரியும் தலம் இது. ராமாவதாரத்தில் அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றபோது சற்று நேரம் இத்தலத்தில் அம்மலையை வைத்துவிட்டு, சற்றே ஓய்வெடுத்து பிறகு தூக்கிச் சென்றதால் சஞ்சீவிமலையின் சக்தி இம்மலையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இத்தலம் தென்திருப்பதி, வராக க்ஷேத்திரம், தட்சிண சேஷகிரி, மலைவையாவூர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. 800 அடிக்கு நெடுதுயர்ந்த மலையில், நீள் நெடுமால் தரிசனம் தரும் 80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது கோயில்.
மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி எனும் பெயரில் அருள, தாயார் அலர்மேல் மங்கையாக அருள்பாலிக்கிறாள். சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி சாலையின் உட்புறம் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.
(கிரகங்கள் சுழலும்)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|