இப்படை வெல்லும்



தலைநகர்தோறும் குண்டு வைக்க முயலும் தீவிரவாதியைக் கண்டுபிடிப்பதோடு காதலையும் காப்பாற்றிக்கொள்வதே ‘இப்படை வெல்லும்’.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். அம்மா ராதிகா பேருந்து ஓட்டுனர்.

குடும்பத்தோடு அமைதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவருக்கு மஞ்சிமாவோடு காதல். மஞ்சிமா அண்ணன் ஆர்.கே.சுரேஷ் காதலுக்கு குறுக்கே வர, பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலையில் தீவிரவாதி டேனியல் பாலாஜி சிறையிலிருந்து தப்பி, தன் திட்டங்களை நிறைவேற்ற முயல, யார் என அறியாது உதயநிதி அவரைக் காப்பாற்றுகிறார்.

அதனால் தீவிரவாதியின் கூட்டாளி என கணிக்கப்பட,சிக்கல் ஆரம்பிக்கிறது. தன்னையும் மீட்டு, தீவிரவாதியையும் களையெடுத்தாரா என்பதே பரபரப்பு க்ளைமேக்ஸ்.உதயநிதியிடம் தொடர்ந்த நம்பகமான வளர்ச்சி.

காதலியிடம் கொஞ்சும்போதும், மிரட்டும் சுரேஷை சமாளிக்கிற பக்குவத்திலும் நன்றாக முன்னேறியிருக்கிறார். முடிந்த அளவு திருப்பங்களிலும், பின்னணியிலும் சுவாரஸ்யமான முடிச்சுக்கள் சேர்த்து வலிமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கௌரவ் நாராயணன்.

உதயநிதியோடு சூரி சரியாகப் பொருந்துகிறார். வெகு சில இடங்களில் மட்டுமே வெடிச் சிரிப்பு என்றாலும், அவரின் சிரிப்பு, ரைமிங் பன்ச்கள் கல கல.அந்த அகலக் கண்களிலேயே கவர்ச்சி சேர்க்கிறார் மஞ்சிமா மோகன். நாகரிகமான உடல்மொழியில் அவர்கள் காதல் சொல்லப்பட்டாலும் நறுவிசு. இன்னும் கொஞ்சம் உணர்வுகளைக்காட்ட முடிந்தால் மஞ்சிமாவுக்கு நெடுங்கால வாசம் நிச்சயம்.

கண்களில் கள்ளத்தனம், உடல்மொழியில் அலட்சியம், பார்வையில் பயங்கரம், வெறும் கண்களில் மிரட்டுவது என அதிகமாகவே பயமுறுத்துகிறார் டேனியல் பாலாஜி. அவருக்கு இது கைவந்த கலைதான்.ஆர்.கே.சுரேஷுக்கு அதிரடி இன்ஸ்பெக்டர் வேடம் கச்சிதம். ஸ்டேஷனில் காட்ட வேண்டிய அதே இறுக்கத்தை வீட்டிலும் காட்டுகிறார். கந்துவட்டி வசூலிக்கிற ரவிமரியா கலகலப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும் ராதிகா சீனியர் என்பதை நிரூபிக்கிறார்.

ஓட்டமும், நடையுமாக பறந்து செல்லும் இரண்டாம் பகுதியில் இருக்கிற விறுவிறுப்பு, படத்திற்கு பலம் சேர்க்கிறது. லாஜிக் கேள்விகள் எழவிடாமல் கதையை அமைத்திருப்பதும் சிறப்பு. விறுவிறுப்பு குறையாமல் எடிட்டிங் செய்திருக்கிறார் பிரவீன்.இமானின் இசையில் ‘குலேபா வா...’ பாடல் வசீகரிக்கிறது. ஸ்கெட்ச் போட்டு விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். படத்திற்கான டெம்போவைத் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு.

அவ்வளவு பெரிய தீவிரவாதி சுலபமாக நினைத்த இடத்தில் இருந்து தப்பிப்பது எல்லாம் நம்பும்படியாக இல்லை. அதுவும் ஆஸ்பத்திரியில் இருந்து நழுவுவது எல்லாம் பூசுற்றல். ஆனாலும் எல்லா தீவிரவாதிகளையும் ஓரிடத்தில் சேர்க்கிற டெக்னிக் அருமை.
திரைக்கதை, பரபரப்பில் ரசிக்க வைக்கிறது ‘இப்படை வெல்லும்.’

குங்குமம் விமர்சனக்குழு