தக்ஷிணசித்ரா
அறிந்த இடம் அறியாத விஷயம்
மஸ்கிருதத்தில் ‘தக்ஷிண’ என்றால் தெற்கு. ‘சித்ரம்’ என்பது காட்சி. இதைச் சேர்த்து வைத்த பெயர்தான் தக்ஷிணசித்ரா.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் நீங்கள் சுற்றுலா போயிருக்கலாம். ஒவ்வொரு இடமாக ரசித்திருக்கலாம். ஆனால், அங்குள்ள கலாசாரமோ, பண்பாடோ, வீடுகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான்.
அந்த வாய்ப்பை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அதிசயிக்க வைக்கிறது தக்ஷிணசித்ரா.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தக்ஷிணசித்ரா. மரங்கள் சூழ்ந்த கட்டிடம். வலதுபுறம் வரவேற்பு அறை. இடதுபக்கம் தக்ஷிணசித்ரா நடத்தும் கைவினைப் பொருட்கள் கடை. கல்லூரி மாணவ, மாணவிகள்... வடமாநிலத்தவர்கள்...
வெளிநாட்டுக்காரர்கள்... எனக் களைகட்டியிருந்தது. வரவேற்பாளரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தக்ஷிணசித்ராவின் மேப்பையும், விவரங்கள் அடங்கிய சிறு பிரசுரத்தையும் நமக்களித்தார்.‘‘இந்த கைடுபடியே இடமிருந்து வலமா போய் ஒவ்வொரு இடமா பார்த்திட்டு வாங்க...’’ என்கிறார் உதவி மேலாளர் தியாகராஜன்.
வரிசையாக நான்கு மாநில வீடுகள். அதற்குள் தென்னிந்திய மக்களின் பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த வீடுகள் எதுவும் இவர்களால் சொந்தமாக வடிவமைக்கப்படவில்லை. அந்தந்த மாநிலங்களில் நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் பழமையான வீடுகளைத் தேடிப்பார்த்து அது விற்பனைக்கோ அல்லது இடிக்கும் நிலைக்கோ வந்தால் அதனை வாங்கிவிடுகின்றனர்.
பிறகு, அதை ஒவ்வொரு பகுதியாக புகைப்படம் எடுத்து, அப்படியே பெயர்த்து எடுத்துவந்து இங்கே மறுகட்டமைப்பு செய்கிறார்கள். சில வீடுகளை எந்த மாநிலத்திலிருந்து பெயர்த்து எடுத்தார்களோ, அதே மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்களைக்கொண்டும் புதுப்பித்துள்ளனர்.
முதலில், தமிழ்நாட்டின் செட்டிநாடு வணிகர் வீடு வருகிறது. முன்பக்கம் சிறிய குளம். மழைநீரால் கொஞ்சம் நிறைந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் பர்மா தேக்கு தூண்களுடன் கூடிய பெரிய திண்ணையும், முற்றமும் அழகாய் காட்சியளிக்கின்றன.
வீட்டின் ஒருபுறத்தில் உள்ள நீண்ட அறையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களைப் பற்றிய படங்களும், விவரக் குறிப்புகளும், நிலத்தின் பாடல்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்! அங்கிருந்து கேரளா பக்கமாக நகர்ந்தோம். முதல் வீடு, திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தது. ஏறத்தாழ 140 வருடங்களுக்கு முந்தையது. ‘வேளாண் குடும்பத்திற்குச் சொந்தமான தென் கேரளத்திலுள்ள ஒரு சிறிய நடுத்தரமான வீடு இது...’ என ஆரம்பிக்கிறது அங்குள்ள குறிப்பு.
தொட்டில், கட்டில், நான்கு பக்கமும் ஜன்னல், தாழ்வாரம் என ஒவ்வொன்றும் வாய்பிளக்க வைக்கின்றது. வீட்டின் வெளியே ஓர் அறை கொண்ட சிறிய வீடாக சமையலறையை வடிவமைத்துள்ளனர். அன்றைய காலத்தில் இப்படித்தான் சமையலறையை வீட்டின் வெளியில் வைத்திருந்ததாகச் சொன்னார் அங்கிருந்த பெண்மணி.
அடுத்து, கோழிக்கோடு மாவட்டம் மண்காவு இடத்தைச் சேர்ந்த மேனன் குடும்பத்துக்குச் சொந்தமான வீடு. இந்த இரண்டு அடுக்கு வீடானது மரக்கட்டை மற்றும் செந்நிறக் களிமண்ணால் கட்டப்பட்டது. சிறிய முற்றம் வரவேற்கிறது. இன்னொரு அறையைத் தானியக் களஞ்சியம், அண்டா, உப்பு ஜாடி.. போன்றவை அலங்கரிக்கின்றன.
ஓர் இடத்தில் நிலா நாட்காட்டியைப் பார்த்தோம். பிரமிக்கச் செய்தது. ஜனவரி முதல் டிசம்பர் வரை வரிசையாக மாதங்கள். அதில், வளர்பிறை, தேய்பிறையைக் கொண்டு அஷ்டமி, பிரதோஷம், ஏகாதசி போன்றவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டிருந்தனர்.அதைத் தாண்டி வலதுபுறம், ஆயுர்வேத மருத்துவத்திற்கென்று ஓர் அறை அழகூட்டுகிறது. கேரளாவின் ஆயுர்வேத மருத்துவத்தை விளக்கமாக விவரித்தது அந்த அறை.
அப்படியே மாடிக்குத் தாவினோம். பத்து பதினைந்து விளக்குகளுடன் பூஜை அறை. அதைப் பற்றிய புகைப்படங்கள் சுற்றிலும் இருக்கின்றன. தவிர, டிவியிலும் அந்தப் பகுதி வீடுகள் பற்றிய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த வீடுகளைப் பார்த்து முடிக்கவும் பசி வயிற்றைக் கிள்ளியது.உள்ளே இருக்கும் உணவகத்துக்குள் நுழைந்தோம். வெஜ் - நான்வெஜ் இரண்டுமே சுவைபட சூடாகத் தருகிறார்கள். அரைமணி நேர ஆசுவாசத்திற்குப் பிறகு கர்நாடகா ஹவுஸ் பக்கம் காலடி வைத்தோம்.
சிக்மகளூர் மாவட்டம் அல்தூர் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் வீடு இது. 1914ல் கட்டிப்பட்டிருக்கிறது. இடதுபக்கமாகச் சென்றோம். இந்த வீட்டை எப்படி பெயர்த்தெடுத்து வந்து இங்கே எழுப்பினார்கள் என்பது பற்றிய புகைப்படத் தொகுப்பு அழகாய் இருந்தது. பழமையான சென்ட் பாட்டில்கள் ஒரு கண்ணாடி பெட்டகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதில், முதலாம் நூற்றாண்டில் எகிப்தில் பயன்படுத்தப்பட்ட சென்ட் பாட்டில் கூடுதல் ஆச்சரியம். மட்டுமல்ல, தென்இந்திய முஸ்லீம்களின் வரலாறு பற்றிய தொகுப்பு ஆங்காங்கே உள்ள டிவியில் வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகிறது. மெயின் ஹாலுக்குள் வந்து சேர்ந்தோம். அங்கே, ஒரு கட்டிலில் தென்னை ஓலை பாயில் பட்டு விரிப்பில் குரான் வைத்திருந்தனர். அதைப் பார்ப்பதற்கு ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துறங்குவது போல இருந்தது.
அருகிலிருந்த மாடிப்படியில் ஏறினோம். சூஃபி பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கீழிறங்கி இன்னொரு அறைக்குள் வந்தோம். அங்கே டிஜிட்டல் செய்யப்பட்ட 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான டெக்கானிக் பெயின்டிங் புக் ரம்மியம் சேர்த்தது. 1590ல் கர்நாடகாவிலுள்ள பீஜப்பூரில் வரையப்பட்ட ஓவியங்கள் இவை.அடுத்து, பாகல்கோட் மாவட்டம் இல்கல் பகுதியைச் சேர்ந்த நெசவாளரின் வீடு. பார்க்க வீடு போலவே தெரியவில்லை. வெறும் கற்களால் வெளித்தோற்றத்தை நச்சென வடிவமைத்துள்ளனர்.
உள்ளே நுழைந்தால் சாதாரணமாய் காட்சியளிக்கிறது இரண்டு வீடுகள். வாயிலிலேயே நாகர் உருவ வழிபாடு ப்ளஸ் துளசிமாடம். உள்ளே சென்றோம். ஓர் அறையில் bhuta mask உருவம் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய படங்கள். இன்னொரு அறையில் செம்பு பானைகள், கூடைகள். தவிர, நெசவு அறை ஒன்றும் இருக்கிறது. அதை முடித்துவிட்டு ஆந்திரா பக்கம் கரை சேர்ந்தோம். வரும் வழியில் ஆர்ட் கேலரி, பொம்மலாட்ட அரங்கம், நூலகம் என வரிசையாக வருகின்றன.
நல்கொண்டா மாவட்டம் கோயலகுடேம் என்ற இடத்திலுள்ள இக்கட் நெசவாளரின் வீட்டைப் பார்வையிட்டோம். இங்கே ஓர் அம்மா பட்டு நெசவை மெதுவாக செய்தபடி இருந்தார். வருகின்ற பார்வையாளர்களுக்கு பட்டு நெசவை செய்துகாட்டுவதே இவரது தினசரி பணி. தொடர்ந்து எலிமன்சிலி பகுதியிலுள்ள ஹரிபுரம் சிற்றூரைச் சேர்ந்த மீனவர் வீட்டிற்கு வந்தோம். சேற்று மண்ணால் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டின் கூரை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. கடற்கரையோரம் இப்படியான வீட்டிற்குள் எப்படி வசித்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது பதைபதைப்பாக இருக்கிறது.
ஆனால், ‘இதன் உருவ அமைப்பும், இருப்பிடமும் சீறும் காற்றை எதிர்த்து போராட உதவுகிறது’ என்கிறது அங்கிருந்த குறிப்பு.இதன்பிறகு, தமிழ்நாடு பகுதிக்குள் வந்தோம்.திருநெல்வேலி மாவட்டம் ஆம்பூர் அக்ரகார வீடு. சிவன், பார்வதி, விஷ்ணு என சமய தொடர்புடைய சிலைகள், கோயில் தேர், பூஜையின் போது பயன்படுத்தப்படும் உடுக்கை, மணி, ஊதுகுழல் போன்றவற்றையும்; 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி யைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து சொரூபம் எனப் பல்வேறு விஷயங்களையும் பார்க்க முடிகிறது.
அங்கிருந்து அடுத்துள்ள நெசவாளரின் வீட்டிற்குள் சென்றோம். அங்கே கேசவன் என்பவர் பட்டுப்புடவையைக் கையால் நெய்து கொண்டிருந்தார்.‘‘எனக்கு கும்பகோணம் சொந்த ஊர். தொழில் நசிந்து போனதால 10 வருஷங்களுக்கு முன்னாடி இங்க வந்துட்டோம்.
இப்ப, இங்க வர்றவங்களுக்கு பட்டுப்புடவை நெசவு செய்து காட்டுறோம். பட்டுப்புடவையை கையால் மட்டும்தான் நெசவு பண்ணமுடியும். அதை மிஷின்ல பண்ணவே முடியாது. ஆனா, இன்னைக்கு சீனா பாலிஸ்டர வச்சு பட்டுத் துணி பண்றாங்க. அதனாலதான் குறைஞ்ச விலைக்குக் கூட பட்டுச் சேலை கிடைக்குது...’’ என்றார்.
அடுத்ததாக கைவினை பஜார். இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைவினைப் பொருட்கள் கடையை இங்கே விரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பதினைந்து கடைகள். கம்மல், ஜிமிக்கி தொடங்கி விதவிதமான பொருட்களை இங்கே வாங்கலாம்.‘‘All these handicrafts are made by me sir’’ என்றார் பனாரஸிலிருந்து வந்திருந்த நிமிலா சிங் என்ற பெண்மணி.வித்தியாசமும் வியப்பும் நிறைந்த அனுபவம்!
டெபோரா தியாகராஜன்
தக்ஷிணசித்ராவின் நிறுவனரான டெபோரா, அமெரிக்காவைச் சேர்ந்தவர். அங்கே எம்.ஏ. மானுடவியல் படிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜனை காதலித்து கரம்பிடித்திருக்கிறார். அவருக்காகவே 1970ல் இந்தியாவில் செட்டிலாகி உள்ளார்.‘‘இங்கே வந்ததும் என்னுடைய ஆய்வுக்காகவே தென்னிந்தியா முழுவதும் சுத்தினேன்.
அப்ப, இந்த மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழும் வீடுனு நிறைய விஷயங்களை உள்வாங்க முடிஞ்சது. 1985க்கு முன்னாடி வரை வேலை விஷயமா நகரத்துக்கு வர்றவங்க சம்மர் லீவுல குழந்தைங்களை தாத்தா பாட்டியைப் பார்க்க கிராமங்களுக்கு அனுப்பி வைப்பாங்க. அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வர்றதை பார்த்தேன்.
இன்னும் 50 வருஷத்துக்குப் பிறகு வரக்கூடிய தலைமுறைக்கு அவங்களோட முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்க, அவங்க வீடு எப்படி இருந்துச்சு, உபயோகிச்ச பொருட்கள் பத்தியெல்லாம் தெரியாம போயிடுமேனு தோணுச்சு. அதை மீட்டெடுக்க இந்த ஐடியா பண்ணினேன்...’’ என கொஞ்சும் தமிழில் ஆரம்பித்தார் டெபோரா.
‘‘1984ல் மெட்ராஸ் கிராப்ட்ஸ் பவுண்டேஷன் தொடங்கினோம். 12 வருஷங்கள் கழிச்சு தக்ஷிணசித்ரா திட்டத்தை ஆரம்பிச்சோம். தமிழக சுற்றுலாத் துறைகிட்ட பேசி இடம் கேட்டோம். பத்து ஏக்கர் நிலத்தை இந்தப் பகுதியில முப்பது வருடக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. இதுக்கிடையில வளர்ச்சிக்கு என மத்திய அரசின் கலாசாரத் துறை 1.69 கோடி ரூபாய் தந்தது. தவிர, சென்னையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள்கிட்ட நிறைய உதவிகள் கேட்டு வாங்கினோம்.
இதுல, எங்களோட ஆர்க்கிடெக்டுகள் Laurie Baker, Benny Kuriakose பணிகள் அளப்பரியது. இங்குள்ள வீடுகள் எல்லாம் சாதாரணமா வாங்கப்பட்டதில்ல. பல களஆய்வுகள் செஞ்சு கொண்டு வரப்பட்டவை. இப்ப, நிறைய ஈவென்ட்ஸ், கிராப்ட்ஸ் வொர்க் எல்லாம் செய்றோம். பொம்மலாட்டம் ஷோ, கண்ணாடி கிராப்ட், மண்பானை செய்றதுனு வர்றவங்களுக்கு செய்து காட்றோம். கடந்த 2016ம் ஆண்டோடு 20 வருடத்தை நிறைவு செய்திருக்கோம்...’’ என்கிறவரிடம், எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டோம்.
‘‘ஆந்திராவிலும், மேற்கு கர்நாடகாவிலும் நூறு வருட பழமையான விவசாயி வீடுகளை தேடிட்டு இருக்கோம். யாராவது விற்கிற மாதிரி இருந்தாலோ அல்லது இடிச்சிட்டு கட்டுற மாதிரி இருந்தாலோ தயவுசெய்து எங்கிட்ட தெரியப்படுத்துங்க. அதை அப்படியே இங்க கொண்டு வரலாம்னு இருக்கேன். இதன் குத்தகை முடிய இன்னும் பத்து வருஷங்களே இருக்கு. என்னோட ஆசையும் எதிர்காலக் கனவும் தொடர்ந்து தக்ஷிணசித்ரா இயங்குணும் என்பதுதான்!’’ என்று நெகிழ்கிறார் 74 வயதாகும் டெபோரா!
பொதுத்தகவல்கள்
* இதனுள் 18 பாரம்பரிய வீடுகள் இருக்கின்றன. * கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், மற்றவர்கள் அதை பயிலவும் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்கள். * குழந்தைகள் ஆடும் பல்லாங்குழி, பரமபத விளையாட்டு தவிர, டி-ஷர்ட், ஷர்ட், சேலை எனப் பலவும் விற்பனைக்கு உள்ளன. * செவ்வாய்க்கிழமை வார விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். * இந்தியர் ஒருவருக்கு பார்வை கட்டணம் ரூ.100. வார இறுதி நாட்களில் ரூ.120. 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு 30 ரூபாயும், 13 - 18 உள்ளவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கிறார்கள். கேமரா, வீடியோ, திருமணம் உள்ளிட்ட போட்டோ ஷூட் எடுக்க தனிக்கட்டணம். * உள்ளே உணவுவிடுதியும், தேநீர், பழ ஜூஸ் கடை ஒன்றும் இருக்கிறது. தங்குவதற்கு கெஸ்ட்ஹவுஸ் வசதியும் உண்டு.
பேராச்சி கண்ணன்
ஆ.வின்சென்ட் பால்
|