காட்ஃபாதர் 32
போதை உலகின் பேரரசன்
தன்னுடைய விலங்கியல் பண்ணைக்காக பாப்லோ, அமெரிக்காவிலிருந்துதான் பெரும்பாலும் விலங்குகளை கொள்முதல் செய்வார்.அமெரிக்காவில் விலங்குகளை வாங்குவது ஈஸி. அதை கொலம்பியாவுக்கு கொண்டுவருவதுதான் கஷ்டம். ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். பாப்லோவுக்கு சட்டமாவது, வட்டமாவது.
ஒருமுறை காண்டாமிருகம் ஒன்றை அப்படி, இப்படி, எப்படியோ கூண்டில் அடைத்து மெதிலினுக்கு கொண்டு வந்துவிட்டார். அதை நேப்போல்ஸ் கொண்டுவர வேண்டும். அந்த காண்டாமிருகத்துக்கு ஏதோ உடல் உபாதை போலிருக்கிறது. அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும், இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று விலங்கு மருத்துவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
ஏதோ ஓர் ஆளை ஓரிரவு எங்காவது ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைக்கலாம். காண்டாமிருகத்துக்கு அப்படியென்ன வசதி செய்து கொடுக்க முடியும்?பாப்லோவின் ஆட்கள் செய்து கொடுத்தார்கள். மெதிலின் நகரின் பெரிய வீடு ஒன்றை கண்டார்கள். அங்கிருந்த கார் கேரேஜில் தங்கள் காண்டாமிருகம் தங்கிக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டுமென்று வீட்டு ஓனருக்கு அன்புக்கட்டளை இட்டார்கள்.
மிரண்டு போன அவர், வீட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறி ஓரிரவு முழுக்க நகரை காரில் சுற்றிக் கொண்டே இருந்தாராம். மறுநாள் காலை சொன்னபடியே, காண்டாமிருகம் கூண்டில் ஏற்றப்பட்டு நேப்போல்ஸுக்கு பயணமானது. கேரேஜில் அது போட்ட சாணத்தை கழுவித் தள்ளுவதற்கே வீட்டு ஓனருக்கு ஒருநாள் ஆனதாம்.
இது கதையா, உண்மையா என்று தெரியாது. ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததாக செய்தி வந்தபிறகு, ஏதோ ஒன்றை மறைக்க வேண்டுமென்று முடிவெடுத்தால், யானையைக்கூட கண்ணுக்கு முன்பாகவே மறைத்துவிடுவார் பாப்லோ என்று கொலம்பிய கார்டெல்கள் பெருமையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோவுக்கு விலங்குகள் என்றால் லைட்டாக அலர்ஜி. குதிரை மட்டும் ஓட்டுவார். தம்பிக்கு போட்டியாக அவரும் விலையுயர்ந்த குதிரைகளை வாங்கி நேப்போல்ஸில் நிரப்ப ஆரம்பித்தார்.அடிக்கடி அண்ணனை கலாட்டா செய்வார் பாப்லோ. “போயும் போயும் குதிரைக் குட்டிகளை வாங்குவதற்கா இவ்வளவு செலவு செய்கிறாய்?”
ஒருமுறை ராபர்ட்டோ சூடாக பதிலடி கொடுத்தார். “தம்பி, நான் வாங்கும் குதிரைகளை நான் ஓட்ட முடியும். நீ வாங்கும் விலங்குகளை உன்னால் ஓட்ட முடியுமா? தில் இருந்தால் ஒரு காண்டாமிருகத்துக்கு மூக்கணாங்கயிறு போட்டு ஓட்டிக்கொண்டே போயேன் பார்ப்போம்!” இதற்குப் பிறகே பாப்லோவுக்கு குதிரைகள் மீதும் ஆர்வம் பிறந்தது. அண்ணனுக்கு போட்டியாக அவரும் உயர் ரக அராபியக் குதிரைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்தார்.
ஓர் அலங்கார ஊர்தியை தயார் செய்து, அதில் குதிரைகளைப் பூட்டி ஐரோப்பிய துரை கணக்காக தீவைச் சுற்றி வருவது பாப்லோவுக்கு பிடித்த பொழுது போக்கானது.தன்னுடைய நேப்போல்ஸ் விலங்கியல் பண்ணையை மக்களுக்காக அர்ப்பணிக்க திடீரென ஒருநாள் முடிவெடுத்தார். தானும், தன்னுடைய குடும்பமும் மட்டும் அனுபவித்து வரும் சொகுசை கொலம்பியா மக்களும் அனுபவிக்க வேண்டுமென்கிற பொதுவுடைமை சிந்தனை அவருக்கு ஏற்பட்டது.மெதிலின் செய்தித்தாள்களில் இதற்காக ஒரு விளம்பரம் கொடுத்தார்.
“நெபோல்ஸ் விலங்கியல் பண்ணை கொலம்பிய மக்களுக்கு சொந்தமானது. நம் குழந்தைகள் விளையாடி மகிழ, பெரியவர்கள் பொழுது போக்கு வதற்காகவே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏழை/பணக்காரன் பாகுபாடு இல்லை. அனைவரும் வாருங்கள். கட்டணமே கிடையாது!”
பாப்லோவின் விளம்பரத்தைக் கண்டதுமே கூட்டம் கும்மத் தொடங்கியது. கொலம்பியா முழுக்க இருந்து காரில் பெட்ரோல் போட்டுக்கொண்டு நேப்போல்ஸில் குழுமத் தொடங்கினார்கள். இவ்வளவு நாள் கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம், உடனே அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. பாப்லோ, இதுமாதிரி நோட்டீஸ்களை மதிப்பவரா என்ன?
ஓர் அரசு உயர் அதிகாரி நேரிடையாகவே தன்னுடைய டீமுடன் வந்து, விலங்கியல் பண்ணையை ரெய்டு அடித்தார். எண்பத்தைந்து விலங்குகளை, முறையான லைசென்ஸ் இல்லாமல் பண்ணையில் அவர் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.பாப்லோ, வழக்கமான மந்தகாசச் சிரிப்போடு அந்த அதிகாரியை எதிர்கொண்டார்.“ஆமாம்.
உங்கள் சட்டத்தின் வரையறைகளுக்குள் உட்படாத விலங்குப் பண்ணைதான் இது. ஆனால், இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரும் என்னுடைய உயிருக்கு நிகர். ஒன்றே ஒன்றை மட்டுமாவது முடிந்தால் பிடித்துப் போங்களேன் பார்ப்போம்…” மெதுவாக முகம் சிவக்கத் தொடங்கிய பாப்லோவைக் கண்டதுமே அதிகாரிக்கு வெடவெடத்து விட்டது.
“இல்லை பாப்லோ. நான் எனக்கு இடப்பட்டிருக்கும் பணியைத்தான் செய்ய வந்திருக்கிறேன். உங்களுக்கு எதிராக எனக்கு எந்த நினைப்புமில்லை...”“சரி. இப்போதே இந்தப் பண்ணைத் மொத்தத்தையும் நான் கொலம்பிய அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன்.
பதிலுக்கு எனக்கொரு உறுதிமொழியை அரசு அதிகாரியாக நீங்கள் எழுதிக் கொடுங்கள். பசி, பட்டினியாலோ அல்லது தேவையான மருத்துவ வசதியின்மையாலோ இங்கிருக்கும் ஒரே ஓர் உயிர்கூட போகக்கூடாது. எழுதி கையெழுத்திட்டு தருகிறீர்களா?”
அதிகாரிக்கு தர்ம சங்கடமாகி விட்டது. இதற்குள்ளாக விலங்கியல் பண்ணை ரெய்டு பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டு வந்து அரசுக்கு எதிராகவும், பாப்லோவுக்கு ஆதரவாகவும் கோஷமிட ஆரம்பித்தார்கள். பேருக்கு ஒரு ஃபைன் போட்டுவிட்டு அங்கிருந்து அவசரமாக விலகிச் சென்றார் அதிகாரி.
இந்த விலங்கியல் பண்ணை ரெய்டை கொலம்பிய ஊடகங்கள் பலவும் கண்டித்தன. மக்களுக்கு இதுமாதிரி ஒரு பொழுது போக்கு வசதியை சிறப்பாக நிர்மாணித்துத் தர துப்பில்லாத அரசாங்கம், செய்து தந்திருக்கும் பாப்லோ மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தது தவறு என்று அவர்கள் எழுதினார்கள்.
பொதுமக்களிடமிருந்தும், ஊடகங்களிலிருந்தும் திடீரென தனக்கு கிடைத்த இந்த ஆதரவு பாப்லோவை நெக்குருக வைத்தது. இதுநாள் வரை பணத்தாலும், ஆள் பலத்தாலும் மட்டுமே தனக்கான மரியாதையை உருவாக்கி வைக்க முடியுமென்கிற அவரது நம்பிக்கை தவிடு பொடியானது.
நல்லது செய்தாலும் தலைவன் ஆகலாம் என்கிற நம்பிக்கை பாப்லோவுக்கு பிறந்தது. அரசியலில் குதித்து ஆட்சியைக் கைப்பற்றினால் என்னவென்று விபரீதமாக யோசிக்கத் தொடங்கினார். குஸ்டாவோவுக்கு இந்த ஐடியா பிடிக்கவில்லை.“பாப்லோ, நீ மிகப்பெரிய தவறைச் செய்ய முற்படுகிறாய்...” என்று நேரடியாகவே பேசினார் குஸ்டாவோ.
பொதுவாக பாப்லோ கட்டி வா என்றால் வெட்டி வரும் குணம் கொண்ட முரட்டுத்தனமான சகா அவர்.“இல்லை குஸ்டாவோ. நான் இந்த நாட்டின் அதிபர் நாற்காலியைக் கைப்பற்றுவதாக முடிவெடுத்து விட்டேன்!”“அதிபரை விட நீதான் நாட்டில் இப்போது பெரிய ஆள்...”“அப்படியென்று நீதான் சொல்ல வேண்டும். நான் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். அதை நேர்வழியில் செய்வதே முறையானது.
நம்மை நாலு பேர் வாழ்த்தும்போது கிடைக்கும் போதை இருக்கிறதே, அது எத்தகைய உயர்ரக கோகெயினைவிடவும் போதையானது. அனுபவித்துப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்!”
குஸ்டாவோவுக்கு பாப்லோவின் எண்ணம் புரிந்தது. கொலம்பியாவில் ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டிருந்தார்களே தவிர, ஏழைகளை அடக்கி ஒடுக்கும் கொள்கைகள் மட்டும் மாறியபாடில்லை. ஏழை மக்களின் வாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு தலைவன் அங்கே உருவாகவே இல்லை.
இயல்பிலேயே ஏழைகளின் மீது பரிவு கொண்ட பாப்லோ, தனக்காக அல்லாமல் மக்களுக்காகத்தான் அரசியலில் குதிக்க விரும்புகிறார்.அதே நேரம் தன்னுடைய தொழிலைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதிபர் பதவி உதவுமென்று கொஞ்சம் சுயநலமாகவும் பாப்லோ கணக்குப் போட்டிருப்பார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆட்சியில் அமர்ந்துவிட்டால் தன்னை அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் நம்பியிருக்கலாம்.
(மிரட்டுவோம்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|